Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 ஏப்பிறல்

இலங்கையின் தயாரிப்புத் துறையில் கொவிட் - 19 இனால் தூண்டப்பட்ட வீழ்ச்சியானது தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் அளவீட்டின் தொடக்க காலத்திலிருந்து நோக்குகையில் மிகக் குறைந்த மட்டத்தினை அடைந்து, முன்னைய மாதத்திலிருந்து 5.8 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியொன்றுடன் 24.2 சுட்டெண் பெறுமதியில் பதிவாகிய மேலும் சுருக்கத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு ஏப்பிறல் காலப்பகுதியில் தீவிரமடைந்தது. சுட்டெண்ணின் இவ்வீழ்ச்சியானது ஒருபோதும் இல்லாத வீதங்களில் வீழ்ச்சியடைந்த புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் தொழில்நிலை மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 பெப்புருவரி

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் அதிகரித்தமையின் காரணமாக 2019 பெப்புருவரியுடன் ஒப்பிடுகையில் 2020 பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவாக மீட்சியடைந்த சுற்றுலாக் கைத்தொழில் 2020 பெப்புருவரி இறுதிப்பகுதியிலிருந்து படிப்படியாக பரவத் தொடங்கிய கொவிட்-19இன் தொற்றின் காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்கள் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் அரச பிணையங்கள் சந்தையிலும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலும் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2020 பெப்புருவரியில் தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. இவ்வபிவிருத்திகளின் காரணமாக 2020 மாச்சின் இரண்டாவது வாரம் வரையில் ஒப்பீட்டு ரீதியில் உறுதியாகக் காணப்பட்ட இலங்கை ரூபா 2020 மாச்சு இறுதிப்பகுதியிலிருந்து ஏப்பிறல் நடுப்பகுதி வரை குறிப்பிடத்தக்களவிற்கு தேய்வடைந்ததெனினும், அதன் பின்னர் உறுதியடையத் தொடங்கி 2020 மே முதல் வாரத்தில் கணிசமான உயர்வினை பதிவுசெய்தது. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் கொவிட்-19இன் தொற்றின் காரணமாக 2020 மாச்சு மாதத்திலிருந்து குறிப்பிடத்தக்களவிற்கு பாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாதிப்பு குறிப்பாக வணிகப்பொருள் ஏற்றுமதிகள், சுற்றுலா, தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் ஆகிய துறைகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட் - 19 பரவலிற்கிடையில் வங்கிகளுக்கு திரவத்தன்மையை வழங்குவதற்கான அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிவகைகளை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களிற்கு உதவுவதற்காக கடன் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக உரிமம்பெற்ற வணிக வங்கிகளின் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளின் (உரிமம்பெற்ற வங்கிகள்) திரவத்தன்மை மற்றும் ஏனைய முதன்மை செயற்றிறன் குறிகாட்டிகளில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கத்தின் சாத்தியப்பாடு குறித்தும் உடனடித் திரவத்தன்மை தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய அவசியத்திற்காகவும் வங்கிகளின் திரவத்தன்மை நிலையை வலுப்படுத்துவது இன்றியமையாததெனக் கருதுகின்றது.

ஐரோப்பிய ஆணைக்குழு அதன் உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கையினை நீக்கியுள்ளது

ஐரோப்பிய ஆணைக்குழுவானது 2020 மே 07ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாய ரீதியான குறைபாடுகளுடன்கூடிய உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட அதன் பட்டியலிலிருந்து இலங்கையினை நீக்கியுள்ளது.

2017 ஒத்தோபரில் சாம்பல் நிறப்பட்டியல் என பொதுவாக இனங்காணப்படுகின்ற நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் இணங்குவித்தல் ஆவணத்தில் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாய ரீதியான குறைபாடுகளுடன் கூடிய நியாயாதிக்க பிரதேசமாக அச் செயலணி மூலம் இலங்கை இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து 2018 பெப்புருவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடொன்றாக அட்டவணைப்படுத்தப்பட்டது அட்டவணைப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இனங்காணப்பட்ட உபாய ரீதியான குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கைக்கென காலம் வரையறை செய்யப்பட்ட நடவடிக்கைத் திட்டமொன்று குறித்தொதுக்கப்பட்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது

2020 மே 06 அன்று நடைபெற்ற தனது விசேட கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, தற்போதைய நாணயக்கொள்கை நிலைப்பாட்டினை மீளாய்வு செய்து, 2020 மே 06 அன்று வியாபாரம் முடிவுறுத்தப்பட்டதிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நாணயச்சபையானது, மந்தமான பணவீக்க அழுத்தங்கள் காணப்படுகையில் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) உலகளாவிய நோய்த்தொற்றினால் விளைவிக்கப்பட்ட பாதகமான பொருளாதார தாக்கங்களினை சரி செய்வதற்கு பொருளாதாரத்திற்கு மேலும் ஆதரவளிப்பதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் வசதிக்காக முடிவுத் திகதியை நீடிக்கின்றது

கொவிட் - 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூலதனத்திற்காக 4 சதவீத வருடாந்த வட்டியுடைய மீள்நிதியிடல் வசதி போன்றவற்றிற்கான வேண்டுகோளைச் சமர்ப்பிக்கும் முடிவுத் திகதியினை 2020.04.30 இருந்து 2020.05.15 வரை நீடித்திருக்கின்றது. மேலும், ரூ.500,000 இற்கு உட்பட்ட பெறுமதியுடைய காசோலைகளின் செல்லுபடிக்காலம் காலாவதியாகியிருக்குமிடத்தில், 2020 மே 15 வரை அதனுடைய செல்லுபடியாகும் காலமாகக் கருத்திற்கொள்ள வேண்டுமென வங்கிகள் வேண்டிக்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான நீடிப்புக்கள் 2020.04.28ஆம் திகதியிடப்பட்ட 2020இன் 06ஆம் இலக்க சுற்றறிக்கையினூடாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

Pages

செய்தி வெளியீடுகள்

சந்தை அறிவிப்புகள்