நாடுமுழுவதற்குமான LankaQR பற்றிய பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது

இலங்கை மத்திய வங்கி LankaQR தொடர்பில் நிதியியல் நிறுவனங்களுடன் சேர்ந்து 'மாத்தளைக்கு LankaQR" (LankaQR ஐ மாத்தளைக்கு எடுத்துச் செல்வோம்) என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகம் - மாத்தளையில் செயலிகள்(apps) கொடுப்பனவுகளை இயலச்செய்யும் விதத்தில் 2020 செத்தெம்பர் 12ஆம் திகதியன்று 'மாத்தளை LankaQR" என்ற நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு பிரச்சாரமொன்றினை ஆரம்பித்தது. இவ்வாரம்ப வைபவத்திற்கான முதன்மை விருந்தினராக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன்  கலந்து கொண்டார். உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் செல்லிடத் தொலைபேசிக் கொடுப்பனவு முறைமையின் சேவை வழங்குநர்களாக தொழிற்படுகின்ற தொலைத் தொடர்பூட்டல் கம்பனிகளின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களும் அதேபோன்று லங்காகிளியர் (பிறைவேட்) லிமிடெட்டின் பிரதிநிதிகளும் மாத்தளை பிரதேசத்திலுள்ள முக்கியமான அரச அதிகாரிகளும் சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரிகளும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர். இவ்விழிப்புணர்வு பிரசாரத்தின் நோக்கம் யாதெனில், LankaQR இன் QR குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட எண்ணியல் கொடுப்பனவினால் பொதுமக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் எண்ணிறைந்த நன்மைகளைக் கருத்திற்கொண்டு அதன் பயன்பாட்டினை ஊக்குவிப்பதேயாகும்.

LankaQR என்பது எந்த ஒரு வணிகருக்கும், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு விரைவானதும் பாதுகாப்பானதும் குறைந்த செலவினைக் கொண்டதுமான எண்ணியல் கொடுப்பனவிற்கு வசதியளிப்பதற்காக இலங்கையிலுள்ள நிதியியல் நிறுவனங்களினால் பின்பற்றப்படுகின்ற பொதுவான விரைவான பதிலிறுப்புக் குறியீட்டு நியமமொன்றாகும். இது, வாடிக்கையாளர்கள் LankaQR இணங்குவிப்பு செல்லிடத் தொலைபேசி அப்ஸ் இனைப் பயன்படுத்தி அவர்களது கணக்கிலிருந்து நேரடியாக வணிகர்களுக்கு கொடுப்பனவுகளைச் செய்வதனை இயலுமைப்படுத்துகிறது. கொடுப்பனவுகள் வணிகரின் வங்கிக் கணக்குகளுக்கு உடனடியாக வரவுவைக்கப்படுகின்றன. LankaQR அச்சிடப்பட்ட ஒட்டுத்துண்டுகள் வணிகர்கள் அவர்களது வியாபாரத் தலத்தில் காட்சிப்படுத்துவதற்காக LankaQR இன் அங்கத்துவ நிறுவனங்களினால் கட்டணங்கள் எதுவுமின்றி வணிகர்களுக்கு வழங்கப்படுகின்றன.  LankaQR இனைப் பயன்படுத்தி செய்யப்படும் கொடுப்பனவுகளுக்காக வாடிக்கையாளர் ஒருவர் செல்லிடத் தொலைபேசி கொடுப்பனவு செயலிகள் இனைப் பயன்படுத்தி LankaQR இனை ஸ்கான் பண்ணுதல் வேண்டும் என்பதுடன் கொடுப்பனவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டமையினை உறுதிப்படுத்தும் விதத்தில் வணிகர் குறுஞ்செய்தி சேவையூடான அறிவித்தல் ஒன்றினைப் பெற்றுக்கொள்வார்.

உயர்ந்தபட்ச வணிகர் கழிவிடல் வீதம் (LankaQR குறியீட்டினை வழங்குகின்ற வங்கிக்கு வணிகரினால் செலுத்தப்படும் கட்டணம்) இலங்கை மத்திய வங்கியினால் 1 சதவீதத்தில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதனால் இது குறைந்த செலவினைக் கொண்ட தீர்வாக இருப்பதும் அது LankaQR பின்பற்றுவதற்கு வணிகர்களை மேலும் ஊக்குவிப்பதாக இருக்கும். வணிகர் கழிவிடல் வீதம் 2020 காலப்பகுதியில் 0.5 சதவீதமாக இருக்கும். LankaQR அடிப்படையாகக் கொண்ட கொடுப்பனவினைப் பயன்படுத்துகையில் அது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித செலவும் ஏற்படாது. இது பொருளாதாரத்தில் எண்ணியல் கொடுப்பனவினை ஊக்குவித்து காசு முகாமைத்துவத்தின் செலவினைக் குறைக்கும் எனவும் அதேபோன்று முறைசாரா துறையினை முறைசார்ந்ததாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முழு வடிவம்

Published Date: 

Monday, September 14, 2020