2020 யூலையில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை, வணிகப்பொருட்களின் இறக்குமதிகளில் காணப்பட்ட குறைப்புக்களுக்கும் மத்தியிலும் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளில் காணப்பட்ட அதிகரிப்பு மற்றும் அதிகரித்த தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பனவற்றின் உதவியுடன் மேலும் மீட்சியடைந்தது. கொவிட்-19 தொற்றிற்கு மத்தியிலும் பல குறிப்பிடத்தக்க சாதனைகள் அவதானிக்கப்பட்டன. யூலையில் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2020 சனவரியின் பின்னர் முதற்றடவையாக ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டதுடன் 2020 பெப்புருவரியின் பின்னர் முதற்றடவையாக நேர்க்கணியமான ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியையும் பதிவுசெய்தது. எதிர்பார்க்கப்பட்டவாறு, இன்றியமையாதனவல்லாத பொருட்களின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் காரணமாக வணிகப்பொருட்களின் இறக்குமதிகள் தொடர்ந்தும் குறைவடைந்து காணப்பட்டன. 2020 யூலையில் தொழிலாளர் பணவனுப்பல்களில் கணிசமானளவு அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டதுடன் 2018 சனவரியின் பின்னர் மாதாந்தப் பணவனுப்பல்களில் மிக உயர்ந்த தொகையொன்று பதிவுசெய்யப்பட்டது.















