Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி அதன் 12ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்தியது

இலங்கை மத்திய வங்கி அதன் மாபெரும் வருடாந்த நிகழ்வான 12ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2019 திசெம்பர் 09ஆம் திகதி நடத்தியது. மாநாடானது சமகால பேரண்டப் பொருளாதாரக் கொள்கை தொடர்பான கோட்பாட்டு ரீதியான மற்றும் அனுபவ ரீதியான ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதனையும் பல்லினத் தன்மை கொண்ட பின்புலத்திலிருந்து வருகை தருகின்ற ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது பார்வை, கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் அனுபவங்களைப் பல்வேறுபட்ட கோணங்களிலிருந்து ஆராய்வதற்கான தளமொன்றினை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. 

பணம் கடன் வழங்கல் நடவடிக்கைகளின் மீதான பொதுமக்களின் விழிப்புணர்வு

அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் உட்பட பல்வேறுபட்ட வழிமுறைகளினூடாக கடன் வழங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற விளம்பரங்கள் மற்றும் தொடர்பூட்டல் வடிவங்கள் பற்றி இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது. இது தொடர்பாக, குறிப்பிட்ட ஒழுங்கீனங்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சில குற்றச்சாட்டுக்கள் கடன் வழங்குநர் தொடர்பான மோசடிகள் தொடர்பானவையாகக் காணப்படுகின்ற வேளையில், சில உயர் வட்டி வீதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும், வாடிக்கையாளர்களுக்கான தொந்தரவு தொடர்பானவையாகவும் மற்றும் வாடிக்கையாளர் தகவல் தொடர்பான இரகசியத்தன்மைகளை தவறாகப் பயன்படுத்துகின்றமை தொடர்பாகவும் காணப்படுகின்றன. பணம் கடன் வழங்குமொருவர் என்பது, பிணையுடனோ அல்லது பிணையின்றியோ வட்டியின் பொருட்டு ஏதேனுமொரு வழியில் கடனை வழங்குமொருவராக அல்லது அவராகவே கடனினை வழங்குகின்ற விதத்தில் விளம்பரங்களை மேற்கொள்ளுகின்ற அல்லது அறிவித்தல்களை மேற்கொள்ளுகின்ற அல்லது தன்னைத்தானே அவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கின்ற ஒருவர் என விபரிக்க முடியும்.  

பல்வேறுபட்ட நிதியியல் சாதனங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதிகளைத் திரட்டுதல்

குறிப்பிட்ட தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் பல்வேறுபட்ட சாதனங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதிகளைத் திரட்டி வருவது பற்றி அவதானிக்கப்பட்டிருக்கிறது. வாக்குறுதிச் சான்றிதழ்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் தொகுதிக்கடன்கள் என்பன அவற்றுள் சிலவாகும். குறிப்பிட்ட வகையான நிறுவனங்கள் அவற்றின் நிதியியல் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மேலே குறிப்பிடப்பட்ட சாதனங்களை வழங்குவதன் மூலம் நிதிகளைத் திரட்டி வருவதனைக் குறிப்பிடுதல் வேண்டும். இச்சாதனங்கள் வருவாயை ஈட்டும் நியதிகளில் கவர்ச்சிகரமானவையாக இருக்கின்ற போதிலும், தனிப்பட்டவர்கள் அவர்களின் நோக்கங்களுக்காக அத்தகைய நிதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மைகள் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இலங்கை மத்திய வங்கி லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்தல்

2016ஆம் ஆண்டின் அரச வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கிணங்க, லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இனை பிரதேசிய சங்வர்த்தன பாங்க் உடன் இணைக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்ததுடன், 1988ஆம் ஆண்டு 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் (திருத்தியடைக்கப்பட்ட) 76 எவ் 9(9) பிரிவில் வழங்கப்பட்டுள்ள சரத்துக்களின் பிரகாரம் லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இற்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தினை 01 ஏப்பிறல் 2019 இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் இரத்துச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அனுமதி வழங்கியிருக்கின்றது. 

இதன் பிரகாரம் 01 ஏப்பிறல் 2019 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இன் அனைத்துச் சொத்துக்களும் பொறுப்புக்களும் பிரதேசிய சங்வர்த்தன பாங்க் இனால் பெறப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. மேலும், லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இனால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வங்கித்தொழில் வியாபாரங்களும் பிரதேசிய சங்வர்த்தன பாங்க் இனால் மேற்கொள்ளப்படும்.¬

நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்திவைத்தலை இரத்துச்செய்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2009ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகள் மற்றும் 2009ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகள் என்பனவற்றின் நியதிகளுக்கமைய செயற்பட்டு, 2019.11.30ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் அதன் வியாபாரத்தினை மற்றும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து இடைநிறுத்தி வைத்தலை இரத்துச்செய்ய தீர்மானித்துள்ளது.

நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2019 நவெம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டமான முறையே 7.00 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் தொடர்ந்தும் பேணுவதன் மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையினைப் பேணுவதற்குத் தீர்மானித்திருக்கிறது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆராய்ந்ததனைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்திருக்கிறது. நாணயச் சபையின் தீர்மானமானது, பணவீக்கத்தினை விரும்பத்தக்க மட்டமான 4-6 சதவீத வீச்சில் பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு உதவும் நோக்குடன் இசைந்து செல்வதாகக் காணப்படுகிறது.

Pages