2021 மாச்சில் இலங்கையின் வெளிநாட்டுத்துறை ஒருபுறம் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையை வெளிக்காட்டிய அதேவேளை மறுபுறம் தொழிலாளர் பணவனுப்பல்களில் ஆரோக்கியமானதொரு வளர்ச்சியையும் சுற்றுலாத்துறையில் சிறிதளவான உத்வேகத்தினையும் கொண்ட கலப்பான செயலாற்றத்தினைக் காண்பித்துள்ளது. வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, 2020 ஏப்பிறலிற்கு பின்பு முதல் தடவையாக 2021 மாச்சில் விரிவடைந்தது. ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் 2020 மாச்சுடன் அதேபோன்று 2021 பெப்புருவரியுடன் ஒப்பிடுகையில் 2021 மாச்சில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளன. இருப்பினும், தொழிலாளர் பணவனுப்பல்கள் நிலையாக வளர்ச்சியடைந்ததுடன் மிகவும் மெதுவானதொரு வேகத்திலேனும் சுற்றுலாத்துறை மீட்சியடைந்துள்ளது. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இரண்டிலுமான வெளிநாட்டு முதலீடுகள் சிறிய தேறிய வெளிப்பாய்ச்சலை 2021 மாச்சில் தொடர்ந்தும் பதிவுசெய்தன. இவ் மாத காலப்பகுதியில் இலங்கையின் ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக தேய்வடைந்தமையானது இறக்குமதிகளுக்கான பருவகாலக் கேள்வியiனைப் பகுதியளவில் பிரதிபலித்தது.
















