சுதந்திரத்திற்குப் பின்னரான பொருளாதாரத்தில் மிகவும் சவால்மிக்க ஆண்டாக 2022ஆம் ஆண்டினை இலங்கை எதிர்கொண்டது. 2019இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020இல் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பரவல் மற்றும் 2021இல் அதன்பின்னரான செயற்பாடுகள் மீதான அதன் நீடித்த தாக்கம், பாரியளவிலான சென்மதி நிலுவை அழுத்தங்களுக்கு மத்தியில் 2022இல் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி என்பன உள்ளடங்கலாக அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான பொருளாதார அதிர்வுகள் காரணமாக தோற்றம்பெற்ற சவால்கள் முன்னெப்பொழுதுமில்லாத கொள்கைச் சமநிலைப்படுத்தல்களுடன் இணைந்து, பொருளாதார நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதித்து, தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்குக் கற்பனைசெய்ய முடியாதளவிலான இன்னல்களை ஏற்படுத்தின. வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்ட வேளையில் உண்மை வருமானங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. இப்பொருளாதார அதிர்வுகளுடன் பின்னிப்பிணைக்கப்பட்ட பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளில் பல தசாப்தங்களாக நிலவிய கட்டமைப்புசார் பொருளாதாரத் தடைகள் பொருத்தமற்ற கொள்கைத் தெரிவுகளுடன் இணைந்து அதன்மூலம் பேரண்டப்பொருளாதார சமநிலையைத் தளர்த்தி தேசத்திற்கு சடுதியான மற்றும் பல்முனை கொண்ட பின்னடைவொன்றினைத் தோற்றுவித்தன.
















