தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி, 2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் 2015இன் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 7.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2.6 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக தற்காலிகமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதேவேளை 2016இன் முதற்காலாண்டின் வளர்ச்சி 5.2 சதவீதத்திற்குத் திருத்தப்பட்டது.
2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில், பணிகளுடன் தொடர்பான நடவடிக்கைகள் 4.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த வேளையில், கைத்தொழில் தொடர்பான நடவடிக்கைகள் 2.2 சதவீதம் கொண்ட மிதமான விரிவாக்கத்தினைப் பதிவுசெய்தன. மோசமான வானிலை நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகள் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் 5.6 சதவீதம் கொண்ட சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தன. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மற்றும் வியாபார நம்பிக்கை என்பனவற்றின் இணைந்த தாக்கம் அதேபோன்று 2016இன் நான்காம் காலாண்டின் சாதகமான தளத்தாக்கம் என்பன ஆண்டின் பின்னரைப் பகுதியில் மீண்டும் வளர்ச்சி ஏற்படுவதற்குப் பங்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.