2017 யூனில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 மேயின் 7.1 சதவீதத்திலிருந்து 2017 யூனில் 6.3 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 2017 யூனில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாகப் பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 யூனிலும் முன்னைய மாதத்தில் காணப்பட்ட அதே மட்டமான 6.1 சதவீதத்தில் மாறாது காணப்பட்டது. 

மாதாந்த மாற்றத்தினைப் கரிசனையில் கொள்ளும்போது, 2017 யூனில் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணானது 2017 மேயின் 121.8 சுட்டெண் புள்ளியிலிருந்து 123.4 சுட்டெண் புள்ளிக்கு அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும். இம்மாத காலத்தில் உணவு வகையிலுள்ள காய்கறிகள், அரிசி, உடன்மீன், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கருவாடு மற்றும் கோழி என்பனவற்றின் விலைகள் அதிகரித;தன. உணவல்லா வகையில், தளபாடங்கள், வீட்டலகுச் சாதனங்கள், வழமையான வீட்டுப் பேணல் (பணியாட்கள் கூலி மற்றும் ஓட்டுநர்கள் கூலி) பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் மற்றும் ஆடை மற்றும் காலணி துணை வகையின் விலைகள் அதிகரித்தன. 2017 யூனில் வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலைத் (பாக்கு) துணை வகைகளின் விலைகளும் அதிகரித்தன. இம்மாத காலப்பகுதியில் சுகாதாரம் துணைத் துறை ஒரு குறைவினைப் பதிவுசெய்தது. அதேவேளை, வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு, ஏனைய எரிபொருள் போன்றவற்றின் விலைக்கள்; போக்குவரத்து; தொடர்பூட்டல்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார் கல்வி மற்றும் சிற்றுண்டிச்சாலை மற்றும் சுற்றுலாவிடுதி போன்ற துணைத் துறைகள் மாத காலப்பகுதியில் மாற்றமடையாமல் காணப்பட்டது. 

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 மேயின் 4.7 சதவீதத்திலிருந்து 2017 யூனில் 4.1 சதவீதத்திற்குக் குறைவடைந்து காணப்பட்டது. இவ்வீழ்ச்சிக்கு ஒப்பீட்டு ரீதியில் துரிதமாக மாறுகின்ற உணவு, வலு மற்றும் போக்குவரத்துத் துறைகள் உள்ளடங்காத குறைந்தளவான மாதாந்த அதிகரிப்புக்களே காரணமாகும். 2017 யூனில் வருடாந்த சராசரி தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 மேயில் 6.4 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, July 21, 2017