எதிர்பார்க்கப்பட்டவாறு, 2015 இறுதியிலிருந்து மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்டுவரும் நாணயக் கொள்கை வழிமுறைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் 2016 செத்தெம்பர் காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் வளர்ச்சி குறிப்பிடத் தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி முன்னைய ஆண்டின் 27.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் 25.6 சதவீதத்தினைப் பதிவு செய்தது. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் வீழ்ச்சி ஏற்பட்டபோதும் விரிந்த பணத்தின் (M2b) வளர்ச்சி முன்னைய மாதத்தின் 17.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்; 18.4 சதவீதத்திற்கு விரிவடைந்தமைக்கு வர்த்தக வங்கிகளிலிருந்தான அரச துறையின் கடன்பாடுகள் இம்மாத காலப்பகுதியில் விரிவடைந்தமையே காரணமாகும். அதேநேரம், உள்நாட்டு பணச்சந்தையில் ரூபாய் திரவத்தன்மை நிலைமைகள் சமநிலையான மட்டமொன்றிற்கு திரும்பியதுடன், இது தற்போதைய மட்டங்களில் சந்தை வட்டி வீதங்கள் உறுதித்தன்மையினை அடைய உதவும்.