நடைமுறைக் கணக்கானது 2025 திசெம்பரில் சிறியளவிலான மிகையொன்றினைப் பதிவுசெய்தது. 2025இல் அநேகமான மாதங்களில் மாதாந்த நடைமுறைக் கணக்கு மிகைகள் பதிவுசெய்யப்பட்டன. இதன் விளைவொன்றாக, நடைமுறைக் கணக்கானது 2025இல் ஐ.அ.டொலர் 1.7 பில்லியன் தொகையிலான (தற்காலிகமானது) மிகையொன்றினைப் பதிவுசெய்திருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 திசெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் விரிவடைந்தது. மேலும், ஏற்றுமதி வருவாய்கள் 2025இல் வரலாற்று ரீதியில் உயர்ந்தளவிலான மட்டமொன்றினைப் பதிவுசெய்ததற்கு மத்தியில், ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 7.9 பில்லியனிற்கு விரிவடைந்து காணப்பட்டது.








