எமது கொள்கை நிலையினை விளக்குவதற்கும் 2018ஆம் ஆண்டின் பொருளாதாரம் தொடர்பான எமது மதிப்பீடுகளை வழங்குவதற்கும் நான் இவ்வுரையினை தொடங்குகின்றேன். 2018இல் இலங்கையின் பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரம், நிதியியல் மற்றும் வெளிநாட்டுத் துறையினை மோசமாகப் பாதித்த புவியியல்சார் அரசியல் அபிவிருத்திகள் என்பனவற்றிலிருந்து முக்கியமாகத் தோன்றிய அதிகளவான சவால்களையும் எதிர்நோக்கியது.பல உள்நாட்டுச் சவால்களும் காணப்பட்டன.நிச்சயமற்ற அரசியல் நிலைமைகள் குறிப்பாக, ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டிற்கான சவால்களை அதிகரித்தன. 2017இன் குறைவடைந்த வளர்ச்சியைத் தொடர்ந்து 2018இலும் குறைவான பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தது. சாதகமான வானிலை நிலைமைகள் வேளாண்மைத் துறையின் மீளெழுச்சிக்கு ஆதரவளித்த வேளையில் பணிகள் நடவடிக்கைகளின் விரிவாக்கம் பரந்த அடிப்படையினைக் கொண்டிருந்தது.















