Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களினால் விடுக்கப்படும் அறிக்கை

இலங்கையின் நிதியியல் முறைமையும் நிதியியல் நிறுவனங்களும் பலவீனமான நிலையில் காணப்படுகின்றன என்றும் அத்தகைய நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்ட தமது வைப்புக்களை பொதுமக்கள் இழக்கும் இடர்நேர்வில் காணப்படுகின்றனர் என்றும் பல்வேறு குழுக்களினாலும் தனிப்பட்டவர்களினாலும் ஆதாரமற்ற ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் பொதுமக்களின் வைப்புக்களை ஏற்கின்ற வங்கித்தொழில் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் இரண்டினதும் ஒழுங்குமுறைப்படுத்துநராக இலங்கை மத்திய வங்கியானது, பொதுமக்களின் வைப்புக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு அனைத்து சாதகமான வழிமுறைகளும் தொடர்ச்சியாக எடுக்கப்படும் என்பதனை பொதுமக்களுக்கு உறுதியாக அறிவிக்க விரும்புகின்றது. நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உறுதிப்பாடு தொடர்பிலான உண்மையான நிலைமைகளைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக நான் இவ்வறிக்கையினை விடுக்க விரும்புகின்றேன்.

இலங்கை வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் த பினான்ஸ் கம்பனி பிஎல்சி வைப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள்

2011 இன் 42 ம் இலக்க நிதித் தொழிற்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிதி தொழிலை மேற்கொள்வதற்கு த பினான்ஸ் கம்பனி பிஎல்சிக்கு வழங்கப்பட்ட உரிமம் 22.05.2020 இல் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இரத்துசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கிணங்க காப்புறுதி செய்யப்பட்ட அனைத்து வைப்பாளர்களுக்கும் ரூ.600,000 வரை இழப்பீடுகளைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. நிலுவை ஏதாவது இருப்பின், த பினான்ஸ் கம்பனி பிஎல்சிக்குச் சொந்தமான சொத்துக்களைத் திரவத்தன்மைக்கு மாற்றிய பின்னர் செலுத்தப்படலாம். மத்திய வங்கியால் இந்நோக்கத்திற்காக முகவர் வங்கியாக நியமிக்கப்பட்ட மக்கள் வங்கி ஊடாக இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும். கொடுப்பனவுகள் கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளதோடு கொடுப்பனவுகளின் முதற்கட்டம்; தனிநபர் கணக்காக ஒரேயொரு வைப்பை பேணும் வைப்பாளர்களுக்கு த பினான்ஸ் கம்பனியின் கிளைகள் முன்பு செயற்பட்டுவந்த இடத்தில் உள்ள மக்கள் வங்கிக் கிளைகளில் 2020 யூன் 7ம் திகதி ஆரம்பிக்கப்படும்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 மாச்சு

கொவிட்-19 தொற்று மற்றும் 2020 மாச்சு பின்னரைப்பகுதியில் இலங்கை பகுதியளவில் முடக்கப்பட்டிருந்தமை என்பன 2020 மாச்சில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்தினைப் பாதித்தன. உள்நாட்டு உற்பத்திச் செய்முறைகளின் இடையூறுகளுடன் சேர்ந்து நிரம்பல் மற்றும் கேள்விச் சங்கிலிகளில் காணப்பட்ட தடங்கல்கள் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலும் அதேபோன்று வணிகப்பொருட்களின் இறக்குமதிகளிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைத் தோற்றுவித்தன. எனினும், ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி பெரிதாக இருந்தமையின் காரணமாக, 2019இன் இதே காலப்பகுதியினை விட வர்த்தகப் பற்றாக்குறை குறுக்கமடைந்தது. உலகளாவிய ரீதியில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்திநிலையம் மூடப்பட்டமை என்பனவற்றின் காரணமாக சுற்றுலாத் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து புலம்பெயர் வேலையாட்கள் நாடு திரும்பியமை அதேபோன்று வெளிநாட்டிலிருந்த சில வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தப்பட்டமை என்பனவற்றின் காரணமாக 2020 மாச்சில் வேலையாட்களின் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவடைந்தன.

நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்துதல்

நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் முதனிலை வணிகர்களுக்கு ஏற்புடைத்தான பணிப்புரைகளுக்கு இணங்கியொழுகுவதற்கு தொடர்ச்சியாக தவறியமையினை பரிசீலனையில் கொண்டு, மத்திய வங்கியின் நாணயச் சபை 2020.05.28 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாக செயற்பட்டு 2020.06.01ஆம் திகதி நடைமுறைக்குவரும் விதத்தில் நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 மேயில் மேலும் குறைவடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஏப்பிறலின் 5.2 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 4.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது 2019 மேயில் காணப்பட்ட உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினால் மாத்திரமே உந்தப்பட்டது. ஆண்டிற்கு ஆண்டு உணவுப்பணவீக்கமானது 2020 ஏப்பிறலின் 13.2 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 9.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், ஆண்டிற்கு ஆண்டு உணவல்லா பணவீக்கமும் 2020 ஏப்பிறலின் 2.1 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 1.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

த பினான்ஸ் கம்பனி பிஎல்சியிற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்தல்

 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது 2008இல் செலிங்கோ குழுமத்தினுள் காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிலிருந்து கம்பெனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்