2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்டிருந்த உரிமம்பெற்ற பல நிதிக் கம்பனிகள் முறிவடைந்தமை மற்றும் அதனைத்தொடர்ந்து அவற்றின் உரிமங்கள் இரத்துச்செய்யப்பட்டமை தொடர்பான பொறுப்புக்களைச் சுமத்துகின்ற பல ஊடக அறிக்கைகளை இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது.
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் உறுதிப்பாட்டினை வலுப்படுத்தி அதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களில் ஒன்றாக விளங்கும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்வதனை மேற்கொண்டு வருகின்றது. அத்தகைய உறுதித்தன்மையானது குறைந்தபட்ச மூலதனம், குறைந்தபட்ச திரவத்தன்மை மற்றும் ஒதுக்குத் தேவைப்பாடுகள்; இடர்நேர்வுகள் ஒன்றுதிரள்வதனைக் குறைப்பதற்காக முதலீட்டு ஒழுங்குவிதிகள் மற்றும் கம்பனி ஆளுகைத் தேவைப்பாடுகள் போன்றவற்றினூடாக உறுதிப்படுத்தப்படுகிறது.















