Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2020 சனவரியில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் அதிகரித்திருக்கிறது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 திசெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் காணப்பட்ட பொருட்களினது விலைகளின் மாதாந்த அதிகரிப்பே காரணமாகும். உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 திசெம்பரின் 8.6 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 13.7 சதவீதத்திற்கு கணிசமாக அதிகரித்தது. இது 2017 நவெம்பருக்குப் பின்னர் ஏற்பட்ட மிக உயர்ந்ததொரு அதிகரிப்பாகும். மேலும், 2020 சனவரியில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 3.0 சதவீதத்தில் காணப்பட்டது.

முழுவடிவம்

இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் திரட்டுவதனையும் வெளியிடுவதனையும் நிறுத்துதல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் திரட்டுவதனையும் வெளியிடுவதனையும் 2020 யூலை 01ஆம் நாலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறது. இத்தீர்மானமானது, உள்நாட்டு நிதியியல் சந்தையில் கடன் சாதனங்களுக்கான அடித்தள அளவுக்குறியீடாக இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் போதுமானளவிற்குப் பயன்படுத்தப்படாமை, இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் உட்பட, வழங்கல் வீதங்களின் திரட்டலையும் வெளியிடுதல்களையும் உலகளாவிய போக்கு கட்டம் கட்டமாக கைவிட்டு வருகின்றமை, நீண்ட காலப்பகுதிக்கான வங்கிகளுக்கிடையிலான சந்தை அளவுகள் மிக மெலிந்து காணப்படும் சூழ்நிலையொன்றில் அநேக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் வழங்கல் வீதங்களை அறிக்கையிடுகின்றமையினை நிறுத்திவிடுமாறு விடுத்த கோரிக்கைகள் மற்றும் உள்நாட்டு நிதியியல் சந்தையில் மாற்று அடித்தள அளவுக்குறியீட்டு வட்டி வீதங்கள் கிடைக்கத்தக்கதாகவுள்ளமை என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

புதிய துணை ஆளுநரின் நியமனம்

நாணயச் சபையானது மாண்புமிகு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரின் உடன்பாட்டுடன் உதவி ஆளுநராக திரு. கே. எம். மகிந்த சிறிவர்த்தன அவர்களை 2020 பெப்புருவரி 12ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக நியமித்திருக்கிறது. 

திரு சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியில் 28 ஆண்டுகளுக்கும் கூடுதலாகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் துணை ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் திரு. சிறிவர்த்தன பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் என்பனவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநர் பதவியை வகித்திருக்கிறார். இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 திசெம்பர்

2019 திசெம்பர் காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் அதிகரித்தமையின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை கணிசமானளவில் சுருக்கமடைந்தமைக்கு இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட கடுமையான சுருக்கமே தூண்டுதலாக விளங்கியது. 2019 திசெம்பரில் சுற்றுலா தொழில்துறையில் விரைவான மீட்சி காணப்பட்ட போதும் இவ்வாண்டுப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்கள் வீழ்ச்சியடைந்தன. 2019 திசெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து (ஆண்டிற்கு ஆண்டு) 2019இன் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சி மிதமடைவதற்கு உதவியது. அதேவேளை, 2019 திசெம்பர் காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகளில் கணிசமான வெளிப்பாய்ச்சலொன்று காணப்பட்ட வேளையில் கொழும்புப் பங்குச் சந்தையிலும் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சல்கள் அவதானிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டுப்பகுதியில் இலங்கை ரூபா ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக உயர்வடைந்து 2020ஆம் ஆண்டின் இதுவரையான பகுதியில் உறுதியாகக் காணப்பட்டது. 

முதனிலை வணிகர் தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை - பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல்கள் அடிப்படையான செயற்பாட்டிற்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் 2020 பெப்புருவரி 15ஆம் திகதி மு.ப. 10 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி அதன் முதனிலை வணிகர் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடைநிறுத்தலை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

இவ்வொழுங்குப்படுத்தல் நடவடிக்கைகளானது அரச பிணையங்களுக்கான முதனிலை ஏலங்களுக்கான  பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் அணுகுதலினை இடைநிறுத்துகின்றது என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது. இது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் ஏனைய நடவடிக்கைகள்ஃ பணிகளில் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) – 2020 சனவரி

2020 சனவரியில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகளிலும் கொள்வனவு இருப்புக்களிலும் காணப்பட்ட மெதுவான விரிவாக்கமே முக்கிய காரணமாகும். 

குறிப்பாக உணவுத் தயாரிப்பு மற்றும் குடிபானத் துறையில் புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண்கள் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு பண்டிகைக் காலத்திற்குப்பின்னர் கேள்வி குறைவடைந்தமையே காரணமாகும். மேலும், புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையின் கொள்வனவுகளின் இருப்புக்கள் மெதுவடைந்தமைக்கு சீனப் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாயமைந்தன. ஊழியர்கள் உயர்ந்த கொடுப்பனவுகளைக் கொண்ட தொழில்களைப் பெறுவதற்காக தமது தற்போதைய தொழில்களை விட்டுச்சென்றமையின் காரணமாக இம்மாதகாலப்பகுதியில் தொழில்நிலை சுருக்கமடைந்தது. 

Pages