இவ்வாண்டுப்பகுதியில் காணப்பட்ட தாழ்ந்த பணவீக்க சூழலுக்கிடையிலும் உண்மை பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட மிதமான விரிவாக்கத்துடன் உலகளாவிய மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களினால் இலங்கைப் பொருளாதாரத்தின் பாதிக்கப்படக்கூடியதன்மை 2018இல் அதிகளவிற்குப் புலனாகக் கூடியதொன்றாகவிருந்தது. 2018இல் உண்மை மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி முன்னைய ஆண்டின் 3.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இவ்வளர்ச்சிக்கு 4.7 சதவீதத்தினால் விரிவடைந்த பணிகள் நடவடிக்கைகளும் 4.8 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளாண்மை நடவடிக்கைகளில் ஏற்பட்ட மீட்சியும் பெருமளவிற்கு ஆதரவாக அமைந்தன. கட்டடவாக்கம் சுருக்கமடைந்தமையின் முக்கிய விளைவாக இவ்வாண்டுப்பகுதியில் கைத்தொழில் நடவடிக்கைகள் 0.9 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு மெதுவடைந்தன. செலவின அணுகுமுறையின்படி, நுகர்வு மற்றும் முதலீட்டுச் செலவினம் இரண்டும் வளர்ச்சிக்கு ஆதரவளித்தன.
















