Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நாணயக்கொள்கை மீளாய்வு: இல. 08 - 2023 நவெம்பர்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச் சபையானது 2023 நவெம்பர் 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 9.00 சதவீதத்திற்கும் 10.00 சதவீதத்திற்கும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்தது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் உன்னிப்பான பகுப்பாய்வொன்றினைத் தொடர்ந்து, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை இலக்கிடப்பட்ட 5 சதவீத மட்டத்தில் அடைந்து பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த மட்டத்தினை அடைந்து உறுதிநிலைப்படுத்தப்படுவதனை இயலுமைப்படுத்தும் நோக்குடன் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளிலிருந்து தோற்றம்பெறுகின்ற நிரம்பல் பக்க காரணிகளின் காரணமாக குறுங்காலத்தில் பணவீக்க எறிவுகளுக்கான சாத்தியமான மேல்நோக்கிய இடர்நேர்வுகளைச் சபை கருத்தில் கொண்டது. இருப்பினும், பொது மக்களின் பணவீக்க எதிர்பார்க்கைகள் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளமையினாலும் குறுங்காலத்திலிருந்து நடுத்தர காலத்திற்குப் பொருளாதார நடவடிக்கையானது எதிர்பார்க்கப்படுகின்ற தரநியமங்களிலும் பார்க்க தொடர்ந்தும் தாழ்வாகக் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளமையினாலும் அத்தகைய குறுங்கால இடர்நேர்வுகள் நடுத்தர கால பணவீக்கத் தோற்றப்பாட்டினைப் பெருமளவு மாற்றியமைக்காதென சபை கருதியது. மேலும், 2023 யூனிலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற நாணயக்கொள்கை வழிமுறைகளுடன் இணைந்து கொள்கை வட்டி வீதங்களின் இக்குறைவுடன் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை உறுதிநிலைப்படுத்துவதற்கான போதியளவிலான நாணயத் தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை கருதியது. ஆதலால், சந்தை வட்டி வீதங்களுக்குக் குறிப்பாக, கடன்வழங்கல் வீதங்களுக்கான நாணயத் தளர்வடைதல் வழிமுறைகள் நிதியியல் நிறுவனங்களின் மூலம் விரைவாகவும் முழுமையாகவும் ஊடுகடத்தப்படுவதுடன் அதன்மூலம் எதிர்வருகின்ற காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்களின் இயல்புநிலைக்குத் திரும்பலினை துரிதப்படுத்துவதற்கான தேவையினை நாணயக்கொள்கைச் சபை வலியுறுத்தியது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச் சபையின் உள்ளமைப்பு

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபை, இலங்கை மத்திய வங்கியின் அலுவல்களின் நிருவாகத்தினையும் முகாமைத்துவத்தினையும் மேற்பார்வை செய்வதற்கும் இலங்கை மத்திய வங்கியின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும் பொறுப்பான சபையாக நிறுவப்பட்டிருக்கிறது. சட்டத்தின் நியதிகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் முன்னைய நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையின் உறுப்பினர்களாகத் தொடர்ந்துமிருப்பர்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2023 ​ஒத்தோபா்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2023 ஒத்தோபரில் தயாரித்தல் நடவடிக்கைகளில் மெதுவடைந்த சுருக்கத்தையும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக்காட்டின. 

தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 ஒத்தோபரில் 49.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, மாதகாலப்பகுதியில்  அடிப்படை அளவினை அண்மித்தது. துணைச் சுட்டெண்களைக் கருத்திற்கொள்கையில், மாதகாலப்பகுதியில் புதிய கட்டளைகளும் கொள்வனவு இருப்புக்களும் அதிகரித்த அதேவேளை, உற்பத்தி மற்றும் தொழில்நிலை என்பன சுருக்கமடைந்து காணப்பட்டன.

இலங்கை நிதியியல் துறை பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவதற்கு உலக வங்கி ஐ.அ.டொலர் 150 மில்லியனை வழங்க அனுமதி

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தை மையப்படுத்தி இலங்கையின் நிதியியல் துறை பாதுகாப்பு வலையின் நிதிசார் மற்றும் நிறுவனசார் இயலளவை வலுப்படுத்துவதற்கு இலங்கை நிதியியல் துறை பாதுகாப்பு வலை வலுப்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் ஐ.அ.டொலர் 150 மில்லியனை வழங்க உலக வங்கி நிறைவேற்றுச் சபை அனுமதியளித்துள்ளது. உலக வங்கி, 2023 நவெம்பர் 09 அன்று பின்வரும் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

வொஷிங்டன், 2023 நவெம்பர் 09 – நிதியியல் துறை தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஐ.அ.டொலர் 150 மில்லியனை வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இன்று அனுமதியளித்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 ஒத்தோபரில் சிறிதளவு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 செத்தெம்பரின் 1.3 சதவீதத்திலிருந்து 2023 ஒத்தோபரில் 1.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இச்சிறிய அதிகரிப்பானது, அனேகமாக இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஒத்தோபரில் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (கட்டடவாக்கம்) - 2023 ​செத்தெம்பா்

கட்டடவாக்கத் தொழிற்துறை 2023 செத்தெம்பரில் 44.3 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான சுருக்கத்தினை எடுத்துக்காட்டியது. கருத்திட்டப் பணிகளில் தொடர்ச்சியான வீழ்ச்சிக்கு மேலதிகமாக,  மாத காலப்பகுதியில் நிலவிய தொடர்ச்சியான மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறுகின்ற கட்டடவாக்க நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினைப் பாதிப்படையச் செய்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்