இலங்கை மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைய 2025 மாச்சில் தொடங்கிய பணச் சுருக்க நிலைமைகளின் தளர்வு 2025 ஏப்பிறலிலும் தொடர்ந்தது. இதன்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2025 மாச்சில் பதிவாகிய 2.6 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஏப்பிறலில் 2.0 சதவீதம் கொண்ட மெதுவான பணச்சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது.
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 மாச்சில் 54.3 பெறுமதியைப் பதிவுசெய்தது. மாதகாலப்பகுதியில் கட்டடவாக்கப் பணியில் தொடர்ச்சியான விரிவடைதலினை அநேகமான அளவீட்டுப் பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டனர். நிலையான விலைகள் மற்றும் சாதகமான வானிலை நிலைமைகளுடன்கூடிய ஆக்கபூர்வமான சூழல் இதற்கு பிரதான காரணமாக அமைந்தது.
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 99(2)ஆம் பிரிவின் கீழான தேவைப்பாடான 2024ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் எனும் வெளியீடு சனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அதிமேதகு அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி நந்தலால் வீரசிங்க அவர்களினால் இன்று அதாவது, 2024 ஏப்பிறல் 29 அன்று கையளிக்கப்பட்டது.
பன்னாட்டு நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் இளவேனிற் காலக் கூட்டங்களின் பக்க நிகழ்வாக 2025 ஏப்பிறல் 23 அன்று வோசிங்டன் டி.சி யில் இடம்பெற்ற உலகளாவிய நாட்டுக்கான படுகடன் வட்டமேசைக் கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரிக்கான செயலாளர் திரு கே. எம். எம் சிறிவர்த்தன ஆகியோர் பங்கேற்றனர்.
பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது மீளாய்வினை நிறைவுசெய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர். மீளாய்வானது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்டவுடன் நிதியிடலில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 344 மில்லியன் தொகைக்கான அணுகலினை இலங்கை கொண்டிருக்கும்.