Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - மே 2024

2024 மேயில் வெளிநாட்டுத்துறையானது சுருக்கமடைந்த வர்த்தகப் பற்றாக்குறையொன்று, பணிகள் கணக்கில் உயர்வடைந்த உட்பாய்ச்சல்கள் மற்றும் உயர்வடைந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டது.

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டிற்காண்டு அடிப்படையில் 2024 மேயில் சுருக்கமடைந்தபோதிலும் 2024 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் விரிவடைந்து காணப்பட்டது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2024 மே

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 மேயில் 54.5 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, கட்டடவாக்க நடவடிக்கைகளில் மேம்படுதலை எடுத்துக்காட்டியது. முன்னைய மாதத்தின் நீண்ட விடுமுறை நாட்களுக்குப் பின்னர் பல கட்டடவாக்க செயற்றிட்டங்கள் மேயில் வழமைக்கு திரும்பின. எவ்வாறாயினும், நிலவிய பாதகமான வானிலை நிலைமைகள் எதிர்பார்க்கப்பட்ட மேம்படுதலை தடைபடுத்தின என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

2024ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க வங்கித்தொழில் (திருத்தச்) சட்டத்தினை நடைமுறைப்படுத்தல்

2024ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க வங்கித்தொழில் (திருத்தச்) சட்டம் 2024.06.15ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவந்திருக்கின்றது என்பதனை இலங்கை மத்திய வங்கி அறிவிக்கவிரும்புகின்றது. இத்திருத்தங்கள், வங்கித்தொழில் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் (உரிமம்பெற்ற வங்கிகள்) என்பனவற்றிற்கு ஏற்புடைத்தான சட்டம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வங்கித்தொழில் வியாபாரத்தினை கொண்டு நடத்துகின்ற ஆட்களுக்கு உரிமம் வழங்குவதற்கான ஒழுங்குமுறைகளின் அறிமுகத்தையும் செயற்பாடுகளையும் வங்கித்தொழில் வியாபாரத்துடன் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டுப்பாட்டு விடயங்களையும் வழங்குகின்ற வங்கித்தொழில் சட்டமானது 2006இல் இறுதியாகத் திருத்தப்பட்டது. ஆகவே, இத்திருத்தங்கள், தற்போதைய ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் அபிவிருத்திகள், பொருளாதாரம் மற்றும் சந்தை அபிவிருத்திகள், உள்நாட்டு வங்கித்தொழில் துறையின் பின்னணியில், சிறந்த நடைமுறைகள் மற்றும் முன்மதியுடைய தேவைப்பாடுகள் மீதான பன்னாட்டு நியமங்கள் என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு வடிவமைக்கப்பட்டன. மேலதிகமாக, வங்கித்தொழில் சட்டத்திற்கு திருத்தங்களை வரையும் போது, ஏற்புடைத்தானவிடத்து, தொடர்பான ஆர்வலர்களிடமிருந்து, அதாவது, வங்கித்தொழில் துறை, வங்கிகளில் கணக்காய்வுகளை நடத்தும் கணக்காய்வாளர் குழு, ஏனைய ஒழுங்குமுறைப்படுத்துனர்கள் மற்றும் அதிகாரபீடங்களின் அவதானிப்புக்களும் கருத்துக்களும் பரிசீலனையில் கொள்ளப்பட்டன.

நிதியியல் உளவறிதல் பிரிவினால் 2024 சனவரி 01 தொடக்கம் 2024 ஏப்பிறல் 30 வரை நிதியியல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட நிருவாக ரீதியான தண்டப்பணங்கள்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை  பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு, நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு 2024 சனவரி 01  தொடக்கம் 2024 ஏப்பிறல் 30 வரையான காலப்பகுதியில் கீழே காட்டப்பட்டவாறு, மொத்தமாக ரூ.3 மில்லியன் கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது. தண்டப்பணங்களாக சேகரிக்கப்பட்ட தொகைத் திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டன.

இலங்கை மத்திய வங்கியின் புதிய துணை ஆளுநர்களின் நியமனம்

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க ஆளும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டவாறு உதவி ஆளுநரும் ஆளும் சபைக்கான செயலாளருமான திரு. ஏ.ஏ.எம். தாசிம் மற்றும் உதவி ஆளுநரான திரு. ஜே.பி.ஆர். கருணாரத்ன ஆகியோரை முறையே 2024.06.20 மற்றும் 2024.06.24 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கௌரவ நிதி அமைச்சர் நியமித்துள்ளார். 

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, பஹ்ரைன் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டிருக்கின்றது

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல் மற்றும் அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடுவதுடன் தொடர்பான குற்றங்களுடன் தொடர்பான நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக பிரான்சின் பாரிசில் நடைபெற்ற எக்மவுன்ட் குழுமத்தின் 30 ஆவது கூட்டத்தில், 2024 யூன் 04ஆம் நாளன்று பஹ்ரைன் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Pages

சந்தை அறிவிப்புகள்