புலம்பெயர்ந்த பணியாளர்கள் மத்தியில் LankaRemit தேசிய பணவனுப்பல் நடமாடும் செயலியை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் இச்செயலியிலுள்ள வசதிகளை செய்துகாட்டுவதற்கு 2022 ஓகத்து 26 அன்று இலங்கை மத்திய வங்கியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் இணைந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைபவமொன்றினை ஏற்பாடுசெய்தன. LankaRemit செயலியானது இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு விரைவான, பாதுகாப்பான, மிகவும் வசதியான பணம் அனுப்பும் வழியினை வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வழங்குகின்றது.
இலங்கை மத்திய வங்கியானது லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டிணைந்து "LankaRemit" நடமாடும் செயலியை உருவாக்கி 2022 பெப்புருவரியில் அதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் போன்ற ஆர்வலர்களின் உதவியுடன் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் "LankaRemit" பற்றிய விழிப்புணர்வினைத் தோற்றுவிக்கும் செயன்முறையினை இலங்கை மத்திய வங்கி முன்னெடுக்கின்றது.
















