இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஓகத்து 17ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தை மேற்கொள்கையில் சபையானது முன்னைய நாணயக்கொள்கை மீளாய்வுடன் ஒப்பிடுகையில் பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்டதனைக் காட்டிலும் பாரிய சுருக்கத்தினையும் விலை அழுத்தங்களின் எதிர்பார்க்கப்பட்டதனைக் காட்டிலும் விரைவான தளர்த்தலையும் எடுத்துரைக்கின்ற பிந்திய மாதிரி அடிப்படையிலமைந்த எறிவுகளை பரிசீலனையில் கொண்டிருந்தது. அவசரமற்ற இறக்குமதிச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளுடன் ஒன்றிணைந்து ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள சுருக்க நாணயக்கொள்கை மற்றும் இறைக்கொள்கைகள் அண்மைய காலத்தில் தனியார் துறைக்கான கொடுகடனில் குறிப்பிடத்தக்க சுருக்கத்தினையும் தொழிலின்மையில் மீட்சிக்கான நிச்சயமற்ற சாத்தியப்பாட்டு இடர்நேர்வுகளையும் விளைவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மைய காலத்தில் மையப் பணவீக்கமானது உயர்ந்தளவில் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளமைக்கு மத்தியிலும், இதுகாலவரையிலும் மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை சார்ந்த வழிமுறைகள் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் உலகளாவிய பண்ட விலைகளில் எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சியுடனும் உள்நாட்டு விலைகளுக்கு அது கடத்தப்படுவதுடனும் இணைந்து எவையேனும் மொத்தக்கேள்வி அழுத்தங்களை கட்டுப்படுத்துவதற்கு உதவியளித்து, அதனூடாக பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்துமென நாணயச்சபை அபிப்பிராயப்பட்டுள்ளது. 

முழுவடிவம்

Published Date: 

Thursday, August 18, 2022