தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2022 யூலையில் 66.7 சதவீதத்தைப் பதிவுசெய்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 யூனின் 58.9 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 66.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு  பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூனின் 75.8 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 82.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூனின் 43.6 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 52.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 யூலையில் 5.57 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு, முறையே 2.42 சதவீதத்தினையும் 3.15 சதவீதத்தினையும் கொண்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. அதற்கமைய, உணவு வகையினுள் பால்மா, அரிசி, உடன் மீன்கள், பிஸ்கட்டுகள் மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புக்கள் பதிவாகின. எவ்வாறாயினும், மாதகாலப்பகுதியில் காய்கறிகள், தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் என்பவற்றின் விலைகள் குறைவடைந்தன. மேலும், உணவல்லா வகையினுள் மாதகாலப்பகுதியில் போக்குவரத்து  (பேரூந்துக் கட்டணம், பெற்றோல் மற்றும் டீசல்), தளபாடங்கள், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப் பராமரிப்பு (கழுவுவதற்குப் பயன்படுத்தும் சவர்க்காரம்) அத்துடன் வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (பராமரிப்புப் பொருட்கள்) போன்ற துணை வகைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

முழுவடிவம்

Published Date: 

Monday, August 22, 2022