வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத் தொகுப்பு - 2026 யூலை

வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 யூலையில் ஐ.அ.டொலர் 142 மில்லியன் கொண்ட பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்து, தொடர்ச்சியான நான்காவது மாதத்திற்கான பற்றாக்குறையாக விளங்கி மத்திய கிழக்கில் ஏற்பட்ட அபிவிருத்திகளின் தாக்கத்தினைப் பிரதிபலித்தது. 2025 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மிகையொன்றுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 387 மில்லியன் கொண்ட ஒன்றுசேர்ந்த பற்றாக்குறையொன்றினை இது தோற்றுவித்தது.

உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினம் மற்றும் தாழ்ந்தளவிலான ஏற்றுமதி வருவாய்கள் என்பவற்றினால் உந்தப்பட்டு, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2026 யூலையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் விரிவடைந்தது. இதன்விளைவாக, 2025 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 3.9 பில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில் ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 6.5 பில்லியனிற்கு விரிவடைந்தது.

மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினமானது 2026 யூனில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 465 மில்லியனிலிருந்து 2026 யூலையில் ஐ.அ.டொலர் 453 மில்லியனிற்குச் சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், மசகெண்ணெய் இறக்குமதிகள் மீதான உயர்ந்தளவிலான செலவினத்தினால் முக்கியமாக உந்தப்பட்டு, எரிபொருள் இறக்குமதிகள் மீதான செலவினமானது 2026 யூலையில் 68.0 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தது. ஒன்றுசேர்ந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினமானது 2026இன் சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3,622 மில்லியனாகக் காணப்பட்டு, 2025இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 59.9 சதவீதம் கொண்ட (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. 

தனியாள் மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான செலவினமானது 2026 யூலையில் ஐ.அ.டொலர் 241 மில்லியனாகக் காணப்பட்டது. அதேவேளை, மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினமானது 2026இன் சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,495 மில்லியன் தொகையாகக் காணப்பட்டது.

ஏற்றுமதி விலைகளிலும் பார்க்க விரைவான வேகமொன்றில் இறக்குமதி விலைகள் அதிகரித்தமையினால் வர்த்தக மாற்று விகிதமானது 2026 யூலையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் தேய்வடைந்து காணப்பட்டது. அதேபோன்று, 2025இன் சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வர்த்தக மாற்று விகிதமானது 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் தேய்வடைந்து காணப்பட்டது.

பணிகள் கணக்கு மிகையானது 2026 யூலையில் ஐ.அ.டொலர் 244 மில்லியனிற்கு மிதமடைந்து, முன்னைய ஆண்டிலிருந்து 23.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், சுற்றுலாத் துறையிலிருந்தான உயர்ந்தளவிலான வருவாய்களினால் முக்கியமாக உந்தப்பட்டு, மிகையானது 50.7 சதவீதத்தினால் மாதாந்த அடிப்படையொன்றில் அதிகரித்தது. மாதாந்த பணிகள் கணக்கு மிகையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் ஏற்பட்ட தொடர்ச்சியான மிதமடைதலை பிரதிபலித்து 2026 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த பணிகள் கணக்கு மிகையானது ஐ.அ.டொலர் 1.8 பில்லியனிற்கு 22.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2026 யூலையில் 1.7 சதவீதம் கொண்ட சிறியளவிலான ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2025இன் சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 1,368,288 வருகைகளுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் 1,343,418ஆகக் காணப்பட்டன. அதேவேளை, சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2026 யூலையில் ஐ.அ.டொலர் 286 மில்லியனாக மதிப்பிடப்பட்டமையானது முன்னைய ஆண்டிலிருந்து 10.3 சதவீத வீழ்ச்சியொன்றினைப் பிரதிபலித்த வேளையில், மாதாந்த அடிப்படையொன்றில் 88.9 சதவீத அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. 2025இன் சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒன்றுசேர்ந்த சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1.8 பில்லியனிற்கு 11.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. 

தொழிலாளர் பணவனுப்பல்கள் 2026 யூலையில் ஐ.அ.டொலர் 778 மில்லியனிற்கு 11.5 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்தன. இதன்விளைவாக, 2026இன் முதலாவது ஏழு மாத காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த பணவனுப்பல்கள்  ஐ.அ.டொலர் 5.4 பில்லியனிற்கு 21.4 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் அதிகரித்தன. 

அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஐ.அ.டொலர் 159.4 மில்லியன் தொகையிலான குறிப்பிடத்தக்க தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த வேளையில், முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாகக் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2026 யூலை மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 6.3 மில்லியன் கொண்ட சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.

மத்திய வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளினால் ஆதரவளிக்கப்பட்டு, சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 யூலை இறுதியளவில் ஐ.அ.டொலர் 6.6 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டன.

2026 ஓகத்து இறுதியளவில், ஐ.அ.டொலரிற்கெதிராக இலங்கை ரூபாவானது ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலான அடிப்படையொன்றில் 5.5 சதவீதத்தினால் பெறுமதித்தேய்வடைந்தது. ஒட்டுமொத்த பெறுமதித்தேய்விற்கு மத்தியில், இலங்கை ரூபாவானது அண்மைய வாரங்களில் ஓரளவு பெறுமதியுயர்வடைந்தமையானது அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நாணய, இறை மற்றும் பேரண்டப்பொருளாதாரக் கொள்கை வழிமுறைகளின் தாக்கத்தினைப் பிரதிபலித்தன.

PDF

Published Date: 

Monday, August 31, 2026