கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம், 2026 ஓகத்தில் உயர்வடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை  (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) முதன்மையாக உணவுப் பணவீக்கத்தில் புள்ளிவிபரத் தளத் தாக்கத்தின் காரணமாக, 2026 யூலையின் 7.3 சதவீதத்திலிருந்து 2026 ஓகத்தில் 8.0 சதவீதமாக அதிகரித்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு), 2026 யூலையின் 6.3 சதவீதத்திலிருந்து 2026 ஓகத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்து, முதன்மைப் பணவீக்கத்தில் அதிகரிப்பிற்குப் பிரதானமாக பங்களித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு), 2026 யூலையின் 7.8 சதவீதத்திலிருந்து 2026 ஓகத்தில் 7.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

மாதத்திற்கு மாத அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது 2026 ஓகத்தில் 0.28 சதவீதத்தால் அதிகரித்தது. பால்மா விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாக 0.20 சதவீதப் புள்ளிகளால் பெருமளவில் பங்களிப்புச்செய்த உணவு வகையினால் இவ்வதிகரிப்பு பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்த அதேவேளை உணவல்லா வகை 0.07 சதவீதப் புள்ளிகளால் சிறிதளவு பங்களித்தது.

அதேவேளை, மையப் பணவீக்கமானது (ஆண்டிற்காண்டு), 2026 யூலையின் 4.4 சதவீதத்திலிருந்து 2026 ஓகத்தில் 5.1 சதவீதமாக உயர்வடைந்தது.

2026 யூலை நாணயக் கொள்கைச் சுற்றில் மேற்கொள்ளப்பட்ட பணவீக்க எறிவுகளுக்கமைய, முதன்மைப் பணவீக்கமானது பொருத்தமான கொள்கை வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு, நடுத்தர காலத்தில் தளர்வடைந்து இலக்கினை அண்மித்து நிலையுறுதியடைவதற்கு முன்னர் அண்மைக் காலத்தில் 5 சதவீத இலக்கிற்கு மேல் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் பதற்றங்கள் மற்றும் அவற்றின் கசிவுத் தாக்கங்கள், தற்காலிகமானவை அத்துடன் படிப்படியாக மறைந்துபோகும் என்ற எதிர்பார்க்கையின் மீது, இவ்வெறிவுகள் ஏனைய ஊகங்களுக்கு மத்தியில் நிபந்தனைக்குட்பட்டவையாகக் காணப்படுகின்றன.

PDF

Published Date: 

Monday, August 31, 2026