இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் ‘பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலினை’ 2021 ஒத்தோபர் 01ஆம் திகதி அறிவிக்கவுள்ளார். இந்நிகழ்வானது இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுவதுடன் மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.
நிலவுகின்ற கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுச் சூழல் மற்றும் தேவையான சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் என்பவற்றின் காரணமாக பங்குபற்றுதலானது அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆளுநரினால் மேற்கொள்ளப்படும் விளக்கவுரையானது யூடியூப் (YouTube)மற்றும் முகநூல் (Facebook) என்பவற்றின் ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படும்.









இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திரு . அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகர் அதி மேதகு தாரிக் முஹம்மது அரிபுல் இஸ்லாம் அவர்களை இன்று, (செத்தெம்பர் 24) இலங்கை மத்திய வங்கியில் சந்தித்திருந்தார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வங்காளதேச ஏற்றுமதிகளுக்காக கொழும்பு துறைமுகத்தின் உச்ச பயன்பாடு பற்றியும் இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக திரு. அஜித் நிவாட் கப்ரால் 2021 செத்தெம்பர் 15, புதன்கிழமை அன்று கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டது. அதற்கமைய, திரு. கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகத் தொழிற்படுவார்.