அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எம்மைப் பற்றி

இலங்கை மத்திய வங்கி என்றால் என்ன?

இலங்கை மத்திய வங்கி என்பது இலங்கையின் நிதித் துறையில் உச்ச நிறுவனமொன்றாகும். இது 1949இன் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் ஓரளவு சுய நிர்ணய நிறுவனமொன்றாக 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாணயச் சபையொன்றினால் ஆளப்படுகின்றது.

நாணயச் சபை என்றால் என்ன?

மத்திய வங்கியானது தனித்துவமான சட்ட கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. இங்கு மத்திய வங்கி கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமொன்றல்ல. நாணய விதிச் சட்டத்தின் நியதிகளுக்கமைய அனைத்து அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளுடன் உரித்தளிக்கப்பட்ட நாணயச் சபையின் மீது நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆளுகின்ற அமைப்பாக நாணயச் சபையானது மத்திய வங்கியின் முகாமைத்துவம், தொழிற்பாடு மற்றும் நிருவாகம் என்பவற்றுடன் தொடர்புடைய அனைத்து கொள்கைத் தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கு பொறுப்புடையதாகும். 

நாணயச் சபையில் அங்கம் வகிப்போர் யார்? அவர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றார்கள்?

மத்திய வங்கியின் நாணயச் சபையானது ஐந்து (5) உறுப்பினர்களைக் கொண்டதாகும்.     

 1. ஆளுநர்
 2. நிதியமைச்சின் செயலாளர் (பதவிவழி உறுப்பினர்)
 3. மூன்று (3) நிறைவேற்றுத்தரமில்லாத உறுப்பினர்

ஆளுநர் நாணயச் சபையின் தலைவர் ஆவார் என்பதுடன் மத்திய வங்கியின் பிரதம நிறைவேற்று அலுவலராகவும் அவரே தொழிற்படுகின்றார். ஆளுநரும் நிறைவேற்றுத்தரமல்லாத சபை உறுப்பினர்களும் நிதியமைச்சரின் பரிந்துரையின் பேரில் சனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். நிறைவேற்றுத்தரமல்லாத உறுப்பினர்களின் நியமனத்திற்கு அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரமும் வேண்டப்படுகின்றது. ஆளுநரதும் நிறைவேற்றுத்தரமல்லாத சபை உறுப்பினர்களினதும் பதவிக் காலம் ஆறு (6) ஆண்டுகளாகும். நாணயச் சபைக்கான கூட்ட நடப்பெண் மூன்று உறுப்பினர்களாகும். நாணயச் சபையின் தீர்மானம் செல்லுபடியாவதற்கு மூன்று உறுப்பினர்களின் ஒத்திசைவு தேவைப்படுகின்றது. எனினும், ஒருமித்த தீர்மானமொன்று வேண்டப்படுகின்ற விடயத்தில், அனைத்து ஐந்து (5) உறுப்பினர்களினதும் ஒத்திசைவு அவசியமாகும். 

 

நாணயம்

இலங்கையில் நாணயத் தாள்களையும் குற்றிகளை வெளியிடுவதற்கான அதிகாரத்தினைக் கொண்டிருப்பவர் யார்?

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் 49ஆவது பிரிவின் கீழ் இலங்கையில் நாணயத் தாள்களையும் குற்றிகளையும் வெளியிடுகின்ற ஏக அதிகாரத்தினை இலங்கை மத்திய வங்கி கொண்டுள்ளது.

தற்போது என்ன இன நாணயத் தாள்களும் குற்றிகளும் சுற்றோட்டத்தில் இருக்கின்றன?

தற்போது சுற்றோட்டத்திலிருக்கும் நாணயத் தாள்களாக ரூ. 5,000/=, ரூ. 2,000/=, ரூ. 1,000/=, ரூ. 500/-, ரூ. 100/=, ரூ. 50/=, ரூ. 20/=, ரூ. 10/=, ரூ. 5/=, ரூ. 2/=, ரூ. 1/= (தற்பொழுது ரூ. 5/=, ரூ. /=, ரூ. 1/= நாணயத் தாள்களுக்குப் பதிலாக குற்றிகள் சுற்றோட்டத்திலுள்ளன) உள்ளன. சுற்றோட்டத்தில் ரூ. 10/=, ரூ. 5/=, ரூ. 2/=, ரூ. 1/=  /=50, /=25, /=10, /=05, /=02, /=01 ஆகிய நாணயக் குற்றிகள் இருக்கின்றன.

தற்போது சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தாள்களின் எண்ணிக்கை யாது?

2017 ஒத்தோபர் 30 அன்றுள்ளவாறு ரூ.562.54 பில்லியன் பெறுமதி கொண்ட ஏறக்குறைய 1,052 மில்லியன் எண்ணிக்கையான நாணயத் தாள்கள் சுற்றோட்டத்தில் இருந்ததுடன் ரூ.11.91 பில்லியன் பெறுமதி கொண்ட 5,258 மில்லியன் எண்ணிக்கையான குற்றிகளும் சுற்றோட்டத்தில் இருந்தன. 

மிகப்பொதுவான/மிக அதிகமான சுற்றோட்டத்தினைக் கொண்ட நாணயத் தாள்கள் யாவை?

சுற்றோட்டத்திலுள்ள நாணயத் தாள்களில் மிக அதிகளவான சுற்றோட்டத்தைக் கொண்ட வகைகளாக ரூ. 20 மற்றும் 100 என்பன காணப்படுகின்றன. 2017 ஒத்தோபர் 30 அன்றுள்ளவாறு 285.5 மில்லியன் எண்ணிக்கையான ரூ.20 கொண்ட நாணயத் தாள் மற்றும் 212.3 மில்லியன் எண்ணிக்கையான ரூ.100 கொண்ட நாணயத் தாள்களும் சுற்றோட்டத்தில் இருந்தன. 

நாணயத் தாள்களும் குற்றிகளும் எவ்வாறு சுற்றோட்டத்திற்கு விடப்படுகின்றன?

முக்கியமான வழி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளாகும். தமது கொடுக்கல்வாங்கல்களுக்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து நாணயத் தாள்களையும் குற்றிகளையும் கோருகின்ற போது அவர்களால் கோரப்பட்ட வகைகளில் நாணத்தாள்களும் குற்றிகளும் வழங்கப்படுகின்றது. இந்நாணயத் தாள்களும் குற்றிகளும் அவர்களது வாடிக்கையாளர்களுடனான கொடுக்கல்வாங்கல் ஊடாக சுற்றோட்டத்திற்கு சேர்க்கப்படுகின்றன.

இறுதியாக வார்க்கப்பட்டு சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட குற்றிகளின் விபரங்கள் யாவை?

அவை பின்வருமாறு:

வகை ரூ.1 ரூ.2 ரூ.5 ரூ.10
விட்டம் (மிமி) 20.0 28.5 23.5 26.4
தடிப்பு (மிமி) 1.75 1.80 2.50 2.30
வடிவம் வட்டம் வட்டம் வட்டம் பதினொரு கோணம்
ஆண்டு 2016 2016 2016 2016
உலோகம்/ கலப்பு துருப்பிடிக்காத உருக்கு துருப்பிடிக்காத உருக்கு துருப்பிடிக்காத உருக்கு துருப்பிடிக்காத உருக்கு
முன்பக்கம் படைக்கல சின்னம் படைக்கல சின்னம் படைக்கல சின்னம் படைக்கல சின்னம்
பின்பக்கம்  பெறுமதி, நாட்டின் பெயர் மற்றும் ஆண்டு பெறுமதி, நாட்டின் பெயர் மற்றும் ஆண்டு பெறுமதி, நாட்டின் பெயர் மற்றும் ஆண்டு பெறுமதி, நாட்டின் பெயர் மற்றும் ஆண்டு

நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் விசேட கடதாசி எது?

நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் விசேட கடதாசி 100 சதவீதம் பருத்திக் கூழிருந்து தயாரிக்கப்படுகின்றது. இது கடினமான உறுதியான இளையமைப்புமிக்கதாகும். எனினும், ரூ. 200 ஞாபகார்த்தத் தாள் பொலிமரினால் ஆக்கப்பட்டது. 

இலங்கைக்கான நாணயத்தாளினை யார் அச்சிடுகின்றார்கள், நாணயக் குத்திகளை யார் வார்க்கின்றார்கள்?

நாணயத் தாள்கள் இலங்கையிலேயே பியகமவிலுள்ள த டி லா றூ லங்கா கரன்சி அன்ட் செகுறிட்டி பிறின்ட் (பிறைவேட்) லிமிடெட்டினால் அச்சிடப்படுகின்றது. 

சுற்றோட்டத்திற்கு வழங்கிய பிந்திய குற்றிகள் சுலோவாக்கியாவில் உள்ள மின்குவானா கேர்மின்கா நிறுவனத்தினால் வார்க்கப்பட்டவை.

இலங்கை மத்திய வங்கிக்கான சுற்றோட்ட குற்றிகளை வார்த்து வழங்கல் செய்வதற்கான வழங்குனர் (வழங்குனர்கள்) பன்னாட்டு விலைக்கோரல் செயன்முறையொன்றினூடாக தெரிவுசெய்யப்படுகின்றனர். 

போலி நாணயத்தாள் என்றால் என்ன?

இலங்கை மத்திய வங்கி தவிர்ந்த எவரேனும் ஆளினால் அல்லது நிறுவனத்தினால் சுற்றோட்டத்தினுள் வழங்கப்படுகின்ற நாணயத் தாள்கள் மற்றும் குற்றிகள் போலி நாணயமாக கருதப்படுகின்றன. மேலதிக தகவல்களுக்கு https//www.cbsl.gov.lk/en/notes-coins/damaged-notes-and-counterfeits/co…  என்ற வெப்தளத்தினைப் பார்க்க. 

போலி நாணயத் தாளினையும் உண்மையான நாணயத்தாளினையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்?

போலி நாணயத் தாள்களை ஒழிக்கும் விதத்தில் மத்திய வங்கியினால் வெளியிடப்படும் அனைத்து நாணயத் தாள்களும் உயர்ந்த பாதுகாப்புப் பண்புகளுடனேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. நாணயத் தாளில் அவதானிக்கக்கூடிய முக்கிய பாதுகாப்புப் பண்புகளாகப் பின்வருவன காணப்படுகின்றன:

 • பாதுகாப்பு நூலிழை
 • நீர்வரி அடையாளம்
 • வெளிச்சத்தினூடாகப் பார்த்தல்
 • செதுக்கு வேலைப்பாட்டு (புடைத்து மேலெழுந்த) அச்சிடல்
 • தாளின் அமைப்பு நயம்
 • நுண்ணிய எழுத்து அமைப்பு
 • மூலைக்கல் - நீர்வரி அடையாளம்

வெற்றுக்கண்ணால் பார்க்கக்கூடிய அம்சங்களையும் குறித்த உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நுண்ணிய அம்சங்களையும் வேறு விசேட அம்சங்களையும் அவதானியுங்கள். எப்போதும் பல பாதுகாப்பு அம்சங்களை பரிசோதியுங்கள். ஒரு அம்சத்தின் மீது மாத்திரம் நம்பியிருக்க வேண்டாம். உங்களுக்கு சந்தேகம் எழுமாயின் நிச்சயமாக உண்மையானதாக நீங்கள் அறிந்த தாளுடன் சந்தேகத்திற்கு இடமான தாளினை ஒப்பிடுங்கள்.

போலி நாணயத் தாளொன்று எனக்கு கிடைப்பின் நான் என்ன செய்ய வேண்டும்?

போலி நாணயத் தாள்களைக் கொடுப்பனவு நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. போலி நாணயத் தாள்களை கொடுக்கல்வாங்கல்களுக்காக வேண்டுமென்றே பயன்படுத்துவது சிறைத் தண்டனைக்குரிய அத்துடன்/அல்லது தண்டம் செலுத்தப்படுவதற்குரியதொரு கடுமையான குற்றமாகும். போலி நாணயத் தாள்களை வைத்திருப்பதும் கூட குற்றமாகும். ஆளொருவர் போலி நாணயத் தாள்களை கண்டுபிடிக்குமிடத்து அவன்/ அவள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட வேண்டும். அத்தகைய தாளினை ஆளொருவர் ஏற்கனவே பெற்றிருப்பின் அவர், அத்தாளினை எவ்வாறு பெற்றிருக்கக்கூடும் என்பதனை நினைவுபடுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டியதுடன் இதனை இலங்கை பொலிஸின் குற்றப் புலனாய்வு பிரிவின் போலி நாணயத் தாள் பணியகத்திற்கு உடனடி அழைப்பு எண்: 0112422176 அல்லது 0112326670 அறிவித்தலும் வேண்டும் என்பதுடன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக செயற்படவும் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும். 

பயன்படுத்துவதற்குப் பொருத்தமற்ற தாள் என்றால் என்ன?

சுற்றோட்டத்தின் போது கிழிந்த, மோசமாக அழுக்கடைந்த எழுதியதன் மூலம் இலக்கங்கள் மாற்றப்பட்ட அல்லது சிறிதளவு சேதமடைந்த அல்லது வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட உண்மையான தாளொன்று பொருத்தமற்ற தாளெனக் கருதப்படலாம்.
பொருத்தமற்ற தாள்கள் மூன்று வகைப்படும்: -
பயன்படுத்த முடியாத தாள்கள், சேதப்படுத்தப்பட்டஃ உருச்சிதைக்கப்பட்ட தாள்கள், வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட மாற்றம் செய்யப்பட்ட அல்லது உருக்குழைக்கப்பட்ட தாள்கள்

"பயன்படுத்த முடியாத தாள்கள்"
நாணயத் தாளொன்று சுற்றோட்டத்தின் போது தூய்மையற்று, தேய்வடைந்து/ மோசமாக அழுக்கடைந்து போன ஆனால் உருவம் சிதைக்கப்படாத தாள்கள்.

"சேதமடைந்த/ உருச்சிதைக்கப்பட்ட தாள்கள்"
தேய்ந்து அல்லது கிழிந்தமையின் காரணமாக ஆரம்ப அளவிலிருந்தும் அளவு குறைவடைந்த, சேதமடைந்த, தோற்றம் மாற்றப்பட்ட எரிந்த, சிதைந்த, துண்டுகளாக்கப்பட்ட கிழிந்த அத்துடன் பாதுகாப்புப் பண்புகள், தாளின் மீதான திகதி, தொடர் இலக்கம், கையொப்பம் என்பன வேண்டுமென்றோ அல்லது விபத்தினாலோ அல்லது பல்வேறு இயற்கை அனர்த்தங்களினாலோ மாற்றமடைந்த தாள்கள் என்பன சேதமடைந்த/ உருச்சிதைக்கப்பட்ட தாள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

"வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட மாற்றம் செய்யப்பட்ட அல்லது உருக்குழைக்கப்பட்ட தாள்கள்"
தாளின் மீதான திகதி, தொடர் இலக்கம், கையொப்பம், பெறுமதி அல்லது பாதுகாப்பு அம்சம் எதேனும் குறிப்பிடத்தக்க வழியில் மாற்றம் செய்யப்பட்டு வரைதல், சொற்கள், அடையாளங்கள் அல்லது குறியீடுகளால் உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள்.

பயன்படுத்த முடியாத நாணயத் தாள்களை வர்த்தக வங்கிகளிடம் மாற்றிக் கொள்ள முடியுமா?

ஆம்.

சேதமடைந்த/ உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் ஊடாக மாற்றிக் கொள்ள முடியுமா?

இல்லை. எவ்வாறெனினும், வர்த்தக வங்கிகள் சேதமாக்கப்பட்ட/ உருச்சிதைக்கப்பட்ட வங்கித் தாள்களை மாற்றுவதற்காக அல்லது வைப்புச் செய்வதற்காக ஏற்றுக்கொள்ளும் அதன் பின்னர் அவ்வங்கிகள் அத்தாள்களின் மீளளிப்புப் பெறுமதியினைப் பரீட்சிப்பதற்காக/ தீர்மானிப்பதற்காக மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கும்.

சேதமாக்கப்பட்ட/ உருச் சிதைக்கப்பட்ட நாணயத்தாளொன்று எனக்கு கிடைப்பின் நான் என்ன செய்ய வேண்டும்?

அத்தகைய நாணயத் தாள் (எரிந்த, சிதைவடைந்த, ஒரு பகுதி இல்லாத, துண்டுகளான அல்லது உருவம் மாற்றப்பட்டவை போன்றன) மத்திய வங்கியில் மீளளிக்கலாம். இவ்விடயத்தில் சேதமடைந்த நாணயத் தாள்களைத் தயார்ப்படுத்துவதற்காக பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றவும்;

இல. சேதத்தின் தன்மை வேண்டப்படும் தயார்ப்படுத்தல்
1. கிழிந்த ஆனால் முழுமையாக பிரிவுறாத கிழிந்த துண்டுகளை இணைத்து நாணயத் தாளின் இருபுறமும் தெளிவாக தெரியக்கூடிய பசையுடைய நாடாவில் ஒட்டவும்.
2. பல பாகங்களாக கிழிந்த ஆனால் அனைத்துப் பாகங்களும் கிடைக்கப்பெறுகின்றது

கிழிந்த துண்டுகளை இணைத்து நாணயத் தாளின் இருபுறமும் தெளிவாக தெரியக்கூடிய பசையுடைய நாடாவில் ஒட்டவும்.

ஒவ்வொரு பகுதியினையும் தாளின் கிட்டத்தட்ட மூல தோற்றத்திற்கான விதமொன்றில் இடம்பெறச் செய்யவும்.

3. மூலைகள் அல்லது சிறு பகுதிகளின் பாகங்கள் இல்லாத அல்லது சிறிய துளைகள் கடதாசியினை ஒட்டத்தேவையில்லை
4. கணிசமான பகுதியின் பாகமொன்று இல்லாமை தெரியக்கூடிய பசை நாடாவினை அல்லது ஒட்டும்  பசையினைப்  பயன்படுத்தி உருச்சிதைக்கப்பட்ட தாளின்  பின்பகுதியில் இல்லாத பகுதியின் கிட்டத்தட்ட அண்ணளவான அளவுடைய வெறுமையான வெள்ளை கடதாசியை ஒட்டவும்.
ஒட்டப்பட்ட உருச்சிதைக்கப்பட்ட தாள் நாணயத்தாளின் குறித்த வகையின் நியமமான பரிமாணத்தை ஒத்ததாக இருப்பதனை உறுதிசெய்க.

குறித்த நாணயத் தாளுக்கான தொடர்பான நடைமுறையினைப் பின்பற்றி அதனை மதிப்பீடு செய்து சாத்தியமாக மீளளிப்பதற்கு பின்வரும் முகவரிக்கு இலங்கை மத்திய வங்கிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பவும்.
     நாணயக் கண்காணிப்பாளர்
     நாணயத் திணைக்களம்,
     இலங்கை மத்திய வங்கி,
     சனாதிபதி மாவத்தை,
     கொழும்பு 1.

மேலும், பாவனைக்கு பொருத்தமற்ற அல்லது சேதமடைந்த/ உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை விடுமுறை நாள் தவிர்ந்த திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் மு.ப. 9.00 - பி.ப. 12.30 மணி வரை இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தின் நாணய கருமபீடப் பிரிவில் நேரடியாகவும் நீங்கள் பின்வரும் முகவரியில் கையளிக்கலாம்:
     கருமபீடப் பிரிவு,
     மாடி 4, கோபுரம் 5,
     தலைமை அலுவலகக் கட்டிடம்,
     இலங்கை மத்திய வங்கி,
     சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1.

சேதமாக்கப்பட்ட/ உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் அவற்றின் முழு முகப்புப் பெறுமதியினையும் பெற தகுதியுடையனவா?

தொடர் முன்னெழுத்துடன் தொடர் இலக்கத்தில் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான இலக்கங்களுடன் 3/4 இற்கும் கூடுதலான பகுதியினைப் பயன்படுத்த பொருத்தமற்ற தாள் உள்ளடக்கியிருக்குமாயின், அத்தாள் முழுப் பெறுமதிக்கும் தகுதியுடையதாகும். முழுமையான தொடர் இலக்கத்துடன் 1/2 பங்கிற்கு கூடுதலாகவும் 3/4 பங்கிற்கு குறைவாகவும் தாள் ஒன்று காணப்படுமாயின், அது அதன் அரைப்பங்கு பெறுமதிக்கே தகுதியுடையதாகும். எனினும், வங்கித் தாளின் பெறுமதி, மத்திய வங்கியின் கொடுப்பனவிற்கு அங்கீகாரமளிக்கின்ற, அலுவலரின் தற்றுணிவின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. 

பாவனைக்கு பொருத்தமற்ற அல்லது சேதமடைந்த, உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை மத்திய வங்கி என்ன செய்கிறது?

இலங்கை மத்திய வங்கி பாவனைக்கு பொருத்தமற்ற அல்லது சேதமடைந்த, உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை சுற்றோட்டத்திலிருந்து மீளப் பெற்று துகள்களாக்கும் பொறியின் மூலம் அழித்து விடுகின்றது.

நாணயத் தாள்களை வேண்டுமென்றே உருச்சிதைத்தல் மாற்றம் செய்தல் அல்லது தோற்றத்தினை திரிவுபடுத்தல் தொடர்பாக ஏதாவது ஒழுங்குவிதிகள் காணப்படுகின்றனவா?

ஆம். நாணயவிதிச் சட்டத்தின் 58ஆம் பிரிவின் நியதிகளில் இலங்கை மத்திய வங்கியினது நாணயச் சபையின் அதிகாரமின்றி பின்வருவனவற்றை மேற்கொள்ளின் அவர் தண்டனைக்குரிய குற்றமொன்றினை இழைத்தவராவர்.,

 1. வெட்டுதல், துளையிடுதல் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் எந்தவொரு நாணயத்தினையும் உருச் சிதைத்தல்;
 2. எந்தவொரு நாணயத் தாளிலும் அச்சிடுதல், முத்திரை பதித்தல் அல்லது எதனையும் வரைதல் அல்லது எந்தவொரு நாணயத் தாள்களின் மீதும் ஏதாவது சீல் அல்லது முத்திரைகளை ஒட்டுதல்;

விளம்பரம் போன்ற நோக்கத்திற்காகவும் எந்தவொரு நாணயத் தாளினையும் இணைத்தல் அல்லது ஒட்டுதல்.

ஆபரணங்களை அல்லது வேறு ஏதாவது பொருட்களைச் செய்வதற்கு நான் நாணயக் குற்றிகளைப் பயன்படுத்த முடியுமா?

இல்லை. இலங்கையில் சட்ட ரீதியான அந்தஸ்தினைக் கொண்ட எந்தவொரு நாணயக் குற்றியினையும் உருக்குதல், உடைத்தல், துளையிடுதல், உருச் சிதைத்தல் அல்லது சட்ட ரீதியான நோக்கங்களுக்குப் புறம்பாக பயன்படுத்துதல் நாணயச் சட்டத்தின் நியதிகளின்படி குற்றமாகும்.

நாணயத் தாளொன்றினை நான் மீளத் தயாரிக்க முடியுமா?

இல்லை, நாணய விதிச் சட்டத்தின் 58(ஈ)ஆம் பிரிவின்படி நாணயச் சபையின் அங்கீகாரமின்றி போட்டோ பிரதியெடுத்தல், ஸ்கான் பண்ணுதல், வரைதல் போன்ற எந்த வடிவத்திலேனும் நாணயத் தாளொன்றினை மீள தயாரித்தல் குற்றமாகும்.

நாணயத் தாளை வடிவமைப்பதனை யார் தீர்மானிக்கின்றார்கள் அதற்கு என்ன காரணிகள் பரிசீலனைக்கெடுக்கப்படுகின்றன?

நாணயத் தாள்களை வடிவமைத்து உற்பத்தி செய்து வழங்குதல் என்பன மத்திய வங்கியின் பொறுப்பாகும். வடிவமைத்தலை தீர்மானிப்பது தொடர்பில் மத்திய வங்கி இலங்கை அரசாங்கத்துடனும் ஆலோசிக்கலாம். அத்துடன் பொதுமக்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். நாணயவிதிச் சட்டத்தின் 53ஆம் பிரிவின்படி நாணயத்; தாள்கள் தொடர்பான பண்புகள் நிதியமைச்சரின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

இலங்கை நாணயங்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பான வரலாற்று ரீதியான தகவல்களை நான் எங்கே பெற்றுக் கொள்ளலாம்?

நாணயத்தின் வரலாற்று ரீதியான தகவல்களைப் பின்வரும் அரும்பொருட்காட்சி சாலைகளிலிருந்தும் வெளியீடுகளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

i) இலங்கை மத்திய வங்கி பின்வரும் இடங்களில் இரண்டு அரும்பொருட்காட்சிச் சாலைகளை நிறுவியிருக்கிறது. அங்கு பொதுமக்களுக்காக வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கத்தக்கதாகவுள்ளன.

நாணய அரும்பொருட்காட்சிச் சாலை,
சென்ரல் பொயின்ட் கட்டடம்,
54, செத்தம் வீதி,
கொழும்பு 01.
நாணய அரும்பொருட்காட்சிச் சாலை,                                                    
பிரதேச அலுவலகம்,
இலங்கை மத்திய வங்கி,
கட்டம் 1,
அநுராதபுரம்.

மேற்கூறப்பட்டவற்றிற்குப் புறம்பாக, எவரும் தகவல்களை பின்வரும் இடங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்:

www.museum.gov.lk

தேசிய அரும்பொருட்காட்சிச் சாலை,
தேசிய அரும்பொருட்காட்சிச் சாலைத் திணைக்களம்
சேர் மார்காஸ் பர்னாந்து மாவத்தை
கொழும்பு 7

ii) மத்திய வங்கியின் பின்வரும் வெளியீடுகளும் உதவும்.

 1. "அண்மைக் காலத்தில் இலங்கையின் நாணயம்" - ஆசிரியர் திரு. ரி. எம். யு. சாலி.
 2. "இலங்கையில் நாணயக் குற்றிகள் மற்றும் நாணயத் தாள்களின் வரலாறு" - ஆசிரியர் திரு. எச்.எஸ்.த. சில்வா
 3. "போலி நாணயத்தினைக் கண்டறிதல்" - சிங்கள மொழியில் ஆசிரியர் திரு. யசபால பெரேரா (இவ்வெளியீடுகள் இலங்கை மத்திய வங்கியின் தொடர்பூட்டல் திணைக்களத்தில் விற்பனைக்கு கிடைக்கத்தக்கதாகவுள்ளன).
 4. "இலங்கையிலுள்ள நாணயக் குற்றிகள், நாணயத் தாள்கள் மற்றும் ஞாபகார்த்தக் குற்றிகளின் வரலாறு" சிங்கள மொழியில் (இவ்வெளியீடு மத்திய வங்கியின் நாணய அரும்பொருட்காட்சி சாலையில் கிடைக்கத்தக்கதாகவுள்ளது)
 5. மற்றைய கையேடுகள் மற்றும் சிற்றேடுகளும் மத்திய வங்கியின் நாணய அரும்பொருட்காட்சி சாலைகளில் கிடைக்கும்.

 வரலாற்றுத் தகவல்களையும், உருவத் தோற்றங்களையும் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திலிருந்தும் சேகரித்துக் கொள்ளலாம்.

www.cbsl.gov.lk

நாணயக் கொள்கை

நாணயக் கொள்கை என்றால்?

நாணயக் கொள்கை என்பது விலை உறுதிப்பாட்டை அடையும் முக்கிய நோக்குடன் பொருளாதாரமொன்றிலுள்ள பணத்தின் நிரம்பல் மற்றும் செலவை (பண நிரம்பல்/ திரவத்தன்மை) மத்திய வங்கி முகாமைப்படுத்தும் செயன்முறையாகும்.

நாணயக் கொள்கையினை கொண்டு நடாத்துபவர் யார்?

இலங்கையில் நாணயக் கொள்கையினை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரி இலங்கை மத்திய வங்கியாகும். நாணயச் சபையானது இலங்கையில் நாணயக் கொள்கை தீர்மானத்தினை ஆக்குகின்ற அமைப்பொன்றாகும். 

விலை உறுதிப்பாட்டுக்கு பொறுப்பாகவுள்ள துணை ஆளுநரினால் தலைமை வகிக்கப்படுகின்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு நாணயச் சபைக்கு நாணயக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கு பொறுப்புடையதாகும். வளர்ந்துவரும் நாணய மற்றும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை மதிப்பிடுவதும் நாணயச் சபையின் பரிசீலனைக்காக நாணயக் கொள்கையின் பொருத்தமான நிலைபற்றி பரிந்துரைகளை மேற்கொள்வதும் நாணயக் கொள்கைக் குழுவின் முதனிலை தொழிற்பாடாகும். 

இலங்கை மத்திய வங்கியின் நடைமுறை நாணயக் கொள்கைக் கட்டமைப்பு யாது?

தற்பொழுது, இலங்கை மத்திய வங்கி, விரிவாக்கப்பட்ட நாணயக் கொள்கை கட்டமைப்பொன்றினுள் அதன் நாணயக் கொள்கையினை மேற்கொண்டு நடாத்துகின்றது. நடுத்தர காலத்தில் நெகிழ்வு மிக்க பணவீக்க இலக்கிடல் அமைப்பொன்றிற்கு இலங்கை மத்திய வங்கி நகரும் வரை இடைக்கால ஒழுங்கொன்றாகக் காணப்படும் இக்கட்டமைப்பு நாணய இலக்கிடல் மற்றும் நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்கிடல் இரண்டினதும் அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்விரிவாக்கப்பட்ட நாணயக் கொள்கை கட்டமைப்பானது குறுகிய கால வட்டி (தொழிற்படுத்தும்) இலக்கு வீதத்தில் நேரடியாக செல்வாக்குச் செலுத்துகின்ற அதேவேளை, இடைநிலை இலக்கொன்றிற்கான அடையாளமாக பரந்த பண நிரம்பலில் வளர்ச்சி மூலம் நிலைத்திருக்கின்றமை ஊடாக நடு தனி இலக்கமட்டத்தில் பணவீக்கத்தினைப் பேணுவதற்கு முயற்சிக்கின்றது. 

நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்கு என்றால் என்ன?

நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்கிடலின் கீழ், பணவீக்க இலக்கினைச் சூழ பணவீக்கத்தினை நிலைப்படுத்துகின்ற அதேவேளை உண்மைப் பொருளாதாரத்திற்கான இடைத்தடங்கலினைக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி நாடும். வழிகாட்டல்: 2017 மற்றும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகளில் அறிவிக்கப்பட்டவாறு, இலங்கை மத்திய வங்கி, நடுத்தர காலத்தில் நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பினைப் பின்பற்றும்.

அதன் நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் பயன்படுத்தப்படும் சாதனங்கள் யாவை?

நாணயக் கொள்கை சாதனங்களாக பயன்படுத்தப்படுவதற்கு இலங்கை மத்திய வங்கி பரந்த வகையிலான கருவிகளை உடமையில் வைத்திருக்கின்றது. முக்கிய சாதனங்களாக கொள்கை வட்டிவீதங்கள், திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், நியதி ஒதுக்கு விகிதம் என்பன காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, வங்கி வீதம், மீள்நிதியளித்தல் வசதிகள், கொடுகடன் மீதான பண்புசார் கட்டுப்பாடுகள், வட்டிவீதங்கள் மீதான உச்சங்கள், மற்றும் தார்மீகப் பொறுப்பு என்பனவும் பயன்படுத்தப்படும். நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்கு பொருத்தமான சாதனங்களை தெரிவுசெய்கின்ற சுயாதீனத்தை இலங்கை மத்திய வங்கி கொண்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியினால் பயன்படுத்தப்படும் கொள்கை வட்டிவீதங்கள் யாவை?

துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன இலங்கை மத்திய வங்கியின் முக்கிய வட்டி வீதங்களாகும். இவை முன்னர் முறையே மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என அறியப்பட்டனவாகும். துணை நில் வைப்பு வசதி வீதமானது இலங்கை மத்திய வங்கியினால் வங்கித் தொழில் முறைமையில் இருந்து ஓரிரவு மிகை திரவத்தன்மையினை ஈர்ப்பதற்கான ஆரம்ப மட்ட (குறைந்தபட்ச வீதம்) வீதமாகும்.

2014 பெப்புருவரி 1 தொடக்கம் செயற்படும் விதத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணை நில் வைப்பு வசதி பிணைய உறுதி நீக்கப்பட்டது. 

துணைநில் கடன் வழங்கல் வசதி என்பது இலங்கை மத்திய வங்கியினால் வங்கித் தொழில் முறைமைக்கு ஒரிரவு திரவத்தன்மையினை செலுத்துவதற்கான உச்சவீதமாகும் (உயர்ந்தபட்ச வீதம்).  

துணைநில் வீத வீச்சு என்றால் என்ன?

துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமும் கொள்கை வீத வீச்சு எனவும் அறியப்படுகின்ற துணைநில் வீத வீச்சினை உருவாக்குகின்றன. துணைநில் வைப்பு வசதி வீதமானது குறைந்த மட்டமாகவும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமானது உயர்ந்த மட்டமாகவும் இருக்கின்றன. இவ் ஆரம்ப வீதத்திற்கும் உச்சவீதத்திற்குமான மாற்றங்கள் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலையின் மாற்றங்களை குறித்துக் காட்டுகின்றன. துணை நில் வீத வீச்சானது குறுகிய கால சந்தை வட்டிவீதங்களில் பாரியளவு தளம்பல்களின் சாத்தியத் தன்மையினை மட்டுப்படுத்துவதுடன் நாணயக் கொள்கையின் நடப்பு தொழிற்படுத்தல் இலக்காக காணப்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணச் சந்தை வீதத்தினை பொருத்தமான மட்டங்களில் பேணுவதற்கு உதவுகின்றது. 

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்றால் என்ன?

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பது இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைக்கு அமைவாக சந்தைத் திரவத் தன்மையினைப் பொருத்தமான மட்டங்களில் பேணுவதற்காக ஏற்றுக்கொள்ளத்தக்க பிணையங்களைப் பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்படுகின்ற சந்தை அடிப்படையில் அமைந்த நாணயக் கொள்கை தொழிற்பாடுகள் ஆகும். இந்நோக்கத்திற்காக இலங்கை மத்திய வங்கியானது அரசாங்க அல்லது அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்ட பிணையங்களையும் இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான பிணையங்களையும் பயன்படுத்தலாம். 

நாணயக் கொள்கை ஆலோசனைக் குழுவின் வகிபாகம் என்ன?

நாணயக் கொள்கை ஆலோசனைக் குழுவானது நாணய கொள்கைத் தீர்மானத்தினை மேற்கொள்ளும் செயன்முறையில் பயன்படுத்தப்படுவதற்கான நாணயக் கொள்கை நிலை மற்றும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகள் மீது தனியார் துறை பற்றிய கருத்துக்களை வழங்குகின்றது. தொழில்சார் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறை ஆளணி போன்றோரை கொண்ட பலதுறைகளிலுமான ஆர்வலர்களை இக்குழு  உள்ளடக்குகின்றது. இதன் மூலம் இலங்கை மத்திய வங்கி அவர்களின் நிபுணத்துவம் அனுபவம் என்பவற்றிலிருந்து பயன்பெறுகின்றது. 

இலங்கையிலுள்ள முக்கிய நாணயக் கூட்டுக்கள் யாவை?

இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணய கூட்டுக்களின் முக்கிய வரைவிலக்கணம் பின்வருமாறு;

 1. ஒதுக்குப்பணம்/ நாணயத் தளம் - செலுத்த வேண்டிய நாணயத்தினை (பொதுமக்கள் மூலம் வைத்திருக்கப்படும் நாணயமும் வணிக வங்கிகளுடனான நாணயமும்), இலங்கை மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியுடனான அரசாங்க முகவராண்மைகளின் வைப்புக்களை உள்ளடக்குகின்றது.
 2. ஒடுங்கிய பணம் (M1) - பொதுமக்களால் வைத்திருக்கப்படும் நாணயத்தையும் வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கேள்வி வைப்புகளையும் உள்ளடக்குகின்றது.
 3. விரிந்த பணம் (M2) - ஒடுங்கிய பண நிரம்பலையும் வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகளையும் உள்ளடக்கப்படுகின்றது.
 4. விரிந்த பணம் (M2b) - ஒடுங்கிய பண நிரம்பல்;, வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகள் என்பவற்றை  உள்ளடக்கப்படுவதுடன் வணிக வங்கிகளின் வெளிநாட்டு நாணய வைப்புளின் ஒரு பகுதியினையும் உள்ளடக்குகின்றது.
 5. விரிந்த பணம் (M4) - விரிந்த பணம் (M2b) நிரம்பல் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மூலம் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகள் என்பவை உள்ளடக்கப்படுகின்றது.

சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் (AWCMR) என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் (AWCMR) என்பது வங்கிகளுக்கிடையிலான அழைப்புப்பணக் கொடுப்பனவு வங்கிகளின், ஓரிரவு கொடுக்கல்வாங்கல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி வீதமொன்றாவதுடன் இது இலங்கை மத்திய வங்கியின் நடப்பு விரிவாக்கப்பட்ட நாணயக் கொள்கை கட்டமைப்பின் தொழிற்படுகின்ற இலக்காக செயற்படுகின்றது. 

இலங்கை வங்கிகளுக்கிடையில் முன்வைக்கப்பட்ட வீதம் (SLIBOR) என்றால் என்ன?

இலங்கை வங்கிகளுக்கிடையில் முன்வைக்கப்பட்ட வீதம் என்பது அழைப்புப் பணச் சந்தையில் வேறுபட்ட முதிர்ச்சிகளுக்காக நிதியங்களை வழங்குவதற்கு அவர்கள் விரும்புகின்ற தெரிவுசெய்யப்பட்ட வணிக வங்கிகள் மூலம் குறிக்கப்படும் வட்டி வீதங்களின் சராசரியொன்றாகும். இவ்விலைக் குறிப்பீடுகளின் அடிப்படையில், 1 நாள், 7 நாட்கள், 1 மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் முதிர்ச்சிகளுக்காக இலங்கை வங்கிகளுக்கிடையிலான முன்வைக்கப்பட்ட வீதம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்பட்டு நாளாந்தம் வெளியிடப்படுகின்றது. இலங்கை வங்கிகளுக்கிடையிலான முன்வைக்கப்பட்ட வீதம் என்பது குறிகாட்டிப் பணச் சந்தை வீதமாகும். 

சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் (AWLR) என்றால் என்ன?/சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதம் (AWPR) என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் என்பது தனியார் துறைக்கு வணிக வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து நிலுவையாக உள்ள கடன்களினதும் முற்பணங்களினதும் வட்டி வீதங்களின் அடிப்படையில் மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது.
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதமானது வாரத்தின் போது தமது முதன்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வணிக வங்கியின் கடன்வழங்கல் வீதங்களின் அடிப்படையில் வாராந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது.

சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (AWDR) என்றால் என்ன?/ சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் (AWFDR) என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (AWDR) என்பது வணிக வங்கிகளினது வட்டியுடைய அனைத்து வைப்புக்களினதும் நிறையேற்றப்பட்ட சராசரி வீதங்களின் அடிப்படையில் மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுவதாகும். 
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதமும் (AWFDR) வணிக வங்கிகளுடன் வைத்திருக்கப்படும் செலுத்த வேண்டிய அனைத்துக் கால வைப்புக்கள் தொடர்பிலும் நிறையேற்றப்பட்ட சராசரி வீதங்களின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியினால் மாதாந்தம் கணிக்கப்படுவதாகும்.

சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் (AWNDR) என்றால் என்ன?/சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம் (AWNLR) என்றால் என்ன? 

சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதமானது (AWNDR) ஒரு மாத காலப்பகுதியின் போது வணிக வங்கிகளில் வைக்கப்பட்ட அனைத்து புதிய வட்டியுடைய வைப்புகளினதும் தொடர்புடைய வட்டி வீதங்களைக் உள்ளடக்குகின்றது. 
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம் (AWNLR) என்பது ஒரு மாத காலப்பகுதியின் போது வணிக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட அனைத்து புதிய கடன்கள் மற்றும் முற்பணங்களினதும் வட்டி வீதங்களைக் உள்ளடக்குகின்றது. 

சட்ட ரீதியான/ சந்தை வட்டி வீதம் என்றால் என்ன?

சட்ட ரீதியான வீதமானது 1990ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க குடியியல் நடைமுறைக் கோவை (திருத்தம்) சட்டத்தின் கீழ் வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதுடன் பணத்தொகையொன்றினை மீள அறவிடுவதற்கான ஏதேனும் நடவடிக்கைக்கு ஏற்புடையதாகும். சந்தை வீதமானது 1990ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க படுகடன் மீள அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இணங்கிய வட்டி வீதம் காணப்படாத வர்த்தக ரீதியான கொடுக்கல்வாங்கல்களிலிருந்து தோன்றுகின்ற ரூ.150,000 தொகையினை விஞ்சுகின்ற படுகடனை மீள அறவிடுவதற்காக கடன் வழங்கும் நிறுவனங்களினால் தொடுக்கப்படும் வழக்குகள் தொடர்பில் மாத்திரம் ஏற்புடையதாகும். 
ஆண்டொன்றுக்கான சந்தை வீதமும் சட்ட ரீதியான வீதமும் முன்னுறுகின்ற பன்னிரண்டு மாதங்களில் நிலவிய அனைத்து வணிக வங்கிகளினதும் மாதாந்த சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதங்களில் சாதாரண சராசரிகளைக் கருத்திற்கொண்டு திசெம்பர் மாதத்தில் கணிக்கப்படுகின்றது. 

 

நிதியியல் உறுதிப்பாடு

நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்றால் என்ன?

பாதகமான அதிர்வுகள் மற்றும் அழுத்தமான நிலைமைகளைக் கொண்ட நிகழ்வுகள் உள்ளடங்கலாக அனைத்து வேலைகளிலும் நிதியியல் இடையேற்பாட்டு நிதியங்கள் இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் கொடுப்பனவுகளை வினைத்திறனுடன் தீர்ப்பனவு செய்தல் போன்ற அதன் முக்கிய தொழிற்பாடுகளை சீராக செயலாற்றுவதற்கான நிதியியல் முறைமையின் இயலுமை என நிதியியல் முறைமை உறுதிப்பாடு வரையறை செய்யப்படலாம். உறுதியான நிதியியல் முறைமையொன்றில் நிதி நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் மற்றும் கொடுப்பனவுகள் முறைமை செயற்திறன் மிக்கவாறு செயற்படுவதுடன் வங்கித்தொழில், நாணய, கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் நெருக்கடி அங்கு காணப்படாது. 

நிதியியல் முறைமை உறுதிப்பாடு மத்திய வங்கியின் குறிக்கோளொன்றாகப் பேணப்படுவது ஏன்?

உறுதியான நிதியியல் முறைமையானது ஒரு புறத்தில் நாணயக் கொள்கையினை ஆக்கபூர்வமாகக் கடத்துவதற்கும் கொடுப்பனவு முறைமையின் சீரான தொழிற்பாட்டிற்கும் அவசியமாகக் காணப்படுகின்றது. மறுபுறத்தில், நிதியியல் உறுதியின்மையானது உற்பத்தி இழப்புகள், இறைச் செலவுகள் நியதிகளில் உயர்வான தாக்கம் கொண்டதாகக் காணப்படுவதுடன் நிதியியல் முறைமையில் காணப்படும் பொது மக்கள்; நம்பிக்கையினை வலுவிழக்கச் செய்யும். 

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை மத்திய வங்கி எவ்வாறு பேணுகின்றது?

தேவையான சட்ட ரீதியான கட்டமைப்பினை நிறுவுவதன் மூலம் முக்கிய நிதியியல் சந்தையினை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்தல், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையினை மேற்பார்வை செய்தல், இறுதிக் கடன் ஈவோனாக செயற்படல், மற்றும் ஒட்டுமொத்த நிதியியல் முறைமையினையும் கண்காணித்தலூடாக மத்திய வங்கி அதன் பொறுப்புடைமையினை நிறைவேற்றுகின்றது. 

 

அரசாங்க படுகடன் பிணையங்கள்

அரசாங்க படுகடன் பிணையங்கள் என்றால் என்ன?

அரசாங்க பிணையம் என்பது முதிர்ச்சியின் மீது மீள் கொடுப்பனவு வாக்குறுதியொன்றுடன் கூடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் படுகடன் சாதனமொன்றாகும். திறைசேரி முறிகள், இலங்கை அபிவிருத்தி முறிகள், நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் போன்ற அரசாங்க பிணையங்கள் முதிர்ச்சியில் கால முறையான நறுக்குகள் அல்லது வட்டிக் கொடுப்பனவுகள் மற்றும் முதன்மைத் தொகை ஆகியவற்றுக்கு வாக்குறுதி அளிக்கின்றன. திறைசேரி உண்டியல்கள் என்பது கழிவொன்றில் வழங்கப்பட்டு முதிர்ச்சியில் முதன்மைத் தொகையினைக் கொடுப்பனவு செய்வதாகும். இலங்கையில் இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திறைசேரி உண்டியல்களையும் திறைசேரி முறிகளையும் இலங்கை அபிவிருத்தி முறிகளையும் வழங்குவதுடன் முதிர்வில் முதிர்வுப் பெறுகைகளை மீள்கொடுப்பனவு செய்கின்றது. இப்பிணையங்களுக்;கு இலங்கை அரசாங்கத்தினால் துணையளிக்கப்படுவதனால் இவை தவணை தவறுதல் இடர்நேர்வற்ற சாதனங்களாக கருதப்படுகின்றன;

முதலீட்டாளர்களுக்காகக் கிடைக்கப்பெறுகின்ற இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உள்நாட்டு படுகடன் பிணையங்கள் யாவை?

மூன்று வகையான உள்நாட்டு படுகடன் பிணையங்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றன. அவையாவன:

 1. திறைசேரி உண்டியல்கள்
 2. திறைசேரி முறிகள்
 3. இலங்கை அபிவிருத்தி முறிகள்

உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கான இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் சந்தைப்படுத்தத்தக்க படுகடன் சாதனங்கள் யாவை?

திறைசேரி உண்டியல்களும் திறைசேரி முறிகளும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்காகக் கிடைக்கப்பெறுகின்ற சந்தைப்படுத்தத்தக்க படுகடன் சாதனங்களாகும்.

திறைசேரி உண்டியல் என்றால் என்ன?

திறைசேரி உண்டியல் என்பது வரவுசெலவுத் திட்ட நோக்கங்களுக்காக இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் பொதுப் படுகடனை திரட்டுகின்றபோது 1923இன் 8ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறான) கீழ் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் குறுங்கால படுகடன் சாதனமொன்றாகும். 

திறைசேரி முறி என்றால் என்ன?

திறைசேரி முறி என்பது வரவுசெலவுத் திட்ட நோக்கங்களுக்காக இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் பொதுப் படுகடனை திரட்டுகின்றபோது 1937இன் 7ஆம் இலக்க பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறான) கீழ் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நடுத்தரகால மற்றும் நீண்டகால படுகடன் சாதனமொன்றாகும். 

திறைசேரி உண்டியல் மற்றும் முறிகளின் பிரதான பண்புகள் யாது?

அ) தவணை தவறுதல் இடர்நேர்வற்றவை, நிறைகாப்புடை படுகடன் சாதனம்

ஆ) திறைசேரி உண்டியலானது குறுகிய கால பூச்சிய நறுக்கு படுகடன் சாதனமொன்றாவதுடன் திறைசேரி முறி நடுத்தர காலம் தொடக்கம் நீண்;ட காலம் வரையான படுகடன் சாதனமொன்றாகும்.

இ) திறைசேரி உண்டியல்களுக்காக முதிர்ச்சி பெறுகைகள் (முகப் பெறுமதி) முதிர்வில் கொடுப்பனவு செய்யப்படும். திறைசேரி முறிகள் அரையாண்டு நறுக்குக் கொடுப்பனவுகளைக் கொண்டதுடன் முதன்மைத் தொகை முதிர்வில் மீள்கொடுப்பனவு செய்யப்படுகின்றது.

ஈ) விளைவு வீதங்கள் சந்தை மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன

உ) இரண்டாம் தரச் சந்தையில் வர்த்தகப்படுத்தக்கூடிய சாதனங்களாகும்

ஊ) பத்திரங்களற்ற வடிவில் வழங்கப்படுகின்றது

வெளிநாட்டு முதலீட்டாளரொருவராக திறைசேரி உண்டியல் மற்றும் முறிகளில் நான் முதலீடு செய்ய முடியுமா?

ஆம், நீங்கள் பின்வரும் வகைகளில் உள்ள ஒருவராயின்;

எ) நாட்டு நிதியங்கள், பரஸ்பர நிதியங்கள் அல்லது பிராந்திய நிதியங்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டு நிறுவனசார் முதலீட்டாளர்கள்.

ஏ) இலங்கைக்கு வெளியில் கூட்டிணைக்கப்பட்ட கூட்டு நிறுவனங்கள்;

ஐ) இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வதிகின்ற வெளிநாடுகளின் பிரசைகள்.

ஒ) இலங்கையில் வதியாத இலங்கையர்கள்.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளில் முதலீடு செய்வதன் மூலம் எவ்வாறான நன்மைகளை நான் பெற முடியும்?

அ) இறைமைமிக்க அரசாங்கத்தினால்  அது வழங்கப்படுவதனால்  எவ்வித இடர்நேர்வுமற்ற முதலீடாகும். இதனால் அவை, நிறைகாப்புடைய பிணையங்கள் என அழைக்கப்படுகின்றன. இதன் அர்த்தம், தங்கத்தின் மூலம் அவை காப்பளிக்கப்பட்டுள்ளன என்பதாகும்.

ஆ) விளைவு வீதங்கள் சந்தையில் நிர்ணயிக்கப்படுகின்றமையினால் உயர் வட்டி வீதங்களை நீங்கள் பெறலாம்.

இ) இவ் உண்டியல்கள் இரண்டாந் தரச் சந்தையில் வர்த்தகப்படுத்தத்தக்கவை என்பதனால் சந்தையில் அவற்றை விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் உடனடித் திரவத்தன்மையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஈ) முதிர்ச்சிப் பெறுகைகளின் அனைத்து வரும்படிகளும் மூலதன ஆதாயங்களும் முழுமையாக சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடியவை.

உ) வேறு ஆளுடன் அல்லது ஆட்களுடன் இணைந்த முதலீடொன்றினை நீங்கள் மேற்கொள்ளவும் முடியும். எனவே, நீங்கள் விரும்புகின்ற ஆட்களுடன் உங்களது முதலீடுகளை பகிர்ந்துகொள்வதற்கு இது மிகச் சிறந்த வழியொன்றாகும்.

ஊ) அதன் அதிநவீன, பத்திரங்களற்ற பிணையத் தீர்ப்பனவு முறைமை மற்றும் முழுமையான தன்னியக்கமான மத்திய வைப்பக முறைமையில் உங்களது முதலீட்டினைப் பேணுகின்ற இலங்கை மத்திய வங்கியிடமிருந்து மிகச் சிறந்த சேவையினை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்).

திறைசேரி உண்டியல்/ முறிகளை கொள்வனவு செய்வதற்கும்ஃ விற்பனை செய்வதற்கு மற்றும் பெறுகைகளை சேகரிப்பதற்கும் பின்பற்ற வேண்டிய நடைமுறை யாது?

திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் கொள்வனவு மற்றும் விற்பனை தொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வதியாத இலங்கையர்களுக்கான 08/24/031/0018/001ஆம் இலக்க 2013 ஏப்பிறல் 10ஆம் திகதியிடப்பட்ட இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல் மற்றும் நடைமுறைகளை தயவுசெய்து பார்க்க.

இலங்கை அபிவிருத்தி முறிகள் என்றால் என்ன?

இலங்கை அபிவிருத்தி முறிகள் என்பது 1957இன் 29ஆம் இலக்க வெளிநாட்டுக் கடன்கள் சட்டத்தின் நியதிகளுக்கமைய இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற ஐ.அ.டொலர்களில் மாற்றப்பட்ட படுகடன் சாதனங்களாகும். மீள்கொடுப்பனவு இலங்கை அரசாங்கத்தினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அபிவிருத்தி முறிகளின் முக்கிய பண்புகள் யாவை?

அ) வருடத்திற்கு இருமுறை வட்டிக் கொடுப்பனவுகள்

ஆ) குறைந்தபட்ச முதலீடு ஐ.அ.டொலர் 10,000 மற்றும் ஐ.அ.டொலர் 10,000இன் பெருக்கங்கள்

இ) முதலீட்டு நாணயம் ஐ.அ.டொலர்

ஈ) நிலையான மற்றும் நெகிழ்வுமிக்க (ஆறு மாத லண்டன் வங்கிகளுக்கிடையிலான  முன்வைக்கப்பட்ட வங்கி வீதங்கள் அல்லது அதனைத் தொடர்ந்து வருகின்ற வீதங்களுடன் சேர்த்து) வட்டி வீதங்கள்ஃ நறுக்கு வீதங்களில் கிடைக்கப்பெறுகின்றது.

உ) போட்டி விலைக்குறிப்பீடு ஊடாக வழங்கப்படும்.

ஊ) பத்திரங்கள் வடிவில் வழங்கப்படும்

அரசாங்கப் பிணையங்கள் தொடர்பான தகவல்களை நான் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?

அ) அரசாங்க பிணையங்கள் பற்றி கிடைக்கப்பெறுகின்ற விபரங்களையும் நிலவுகின்ற சந்தை வீதங்களையும் உரிமம்பெற்ற வணிக வங்கிகள், முதனிலை வணிகர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளம் என்பவற்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

ஆ) நடப்பு ஏலங்கள் பற்றிய விபரங்களை உரிமம்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் முதனிலை வணிகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

இ) அரசாங்க பிணையங்கள் பற்றிய ஏதேனும் விபரத்தினை இலங்கை மத்திய வங்கியின் பொதுப் படுகடன் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் படுகடன் பிணையங்கள் தொடர்பான சந்தை விபரங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

சந்தை விபரங்களை செய்திப் பத்திரிகைகளிலிருந்தும் இவ்வெப்பதளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

பத்திரங்களற்ற அரசாங்க பிணையங்கள் என்றால் என்ன?

பத்திரங்களற்ற அரசாங்க பிணையங்கள் என்பது கடதாசிச் சான்றிதழின்றி தரவுப் பதிவு வடிவில் வழங்கப்படுபவையாகும்.

லங்கா செய்குயர் என்றால் என்ன?

லங்கை செய்குயர் முறைமையென்பது நாணய விதிச் சட்டத்தின் நியதிகளுக்கமைய நிறுவப்பட்ட பத்திரங்கலற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை மற்றும் மத்திய வைப்பக முறைமையென பொருளாகும். இது பத்திரங்கலற்ற பிணையங்களின் முதனிலை வழங்கல் தீர்ப்பனவு மற்றும் பதிவுசெய்தல் மற்றும் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல் பதிவினை மேற்கொள்ளுதல் என்பவற்றை வசதிப்படுத்துகின்றது.

பத்திரங்கலற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையென்றால் என்ன?

பத்திரங்கலற்ற பிணையங்கள் கொடுக்கல்வாங்கல்கள், பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்;ப்பனவு முறைமையென அறியப்படுகின்ற இலத்திரனியல் தீர்ப்பனவு ஒழுக்கேற்பாடொன்றினூடாக தீர்ப்பனவு செய்யப்படும். பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையில் பிணையங்களின் தீர்ப்பனவானது கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெறுகின்ற சமகாலத்தின் போது இடம்பெறும். கொடுக்கல்வாங்கலொன்று இடம்பெறும்போதெல்லாம் இலத்திரனியல் தரவுப்பதிவொன்றின் வடிவத்தில் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பிணையங்கள் மாற்றல் செய்யப்படும். 

மத்திய வைப்பக முறைமை என்றால் என்ன?

மத்திய வைப்பக முறைமை என்பது அரசாங்க பிணையங்களின் உரித்துப் பதிவுகளைப் பேணுகின்ற தரவுத் தளத்தின் அடிப்படையில் அமைந்த கணனியொன்றாகும். மத்திய வைப்பக முறைமையானது முறைமைப் பங்கேற்பாளர்களது கணக்குகளையும் ஒவ்வொரு பிணையங்களின் தனியுரிமையாளரினதும் தனிப்பட்ட கணக்குகளையும் பேணுகின்றது. பத்திரங்களற்ற பிணையங்களின் உரித்துகளின் மாற்றலானது பங்கேற்பாளர்களிடமிருந்து அதாவது, முதனிலை வணிகர்கள், உரிமம்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நாணயச் சபையினால் அனுமதிக்கப்பட்ட ஏதேனும் வேறு நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெறும் அறிவுறுத்தல்களுக்கமைவாக மத்திய வைப்பக முறைமையில் இலத்திரனியல் ரீதியாக பதிவு செய்யப்படுகின்றது. 

முதலீட்டாளர்களுக்கு லங்கா செக்குயர் உடனான தொடர்பு யாது?

அரசாங்க பிணையங்களிலுள்ள முதலீட்டாளர்கள் வணிகர் நேரடி பங்கேற்பாளர்கள் அதாவது முதனிலை வணிகர்கள் மற்றும் உரிமம்பெற்ற வணிக வங்கிகள் என்பன ஊடாக லங்கா செக்குயர் இல் கணக்குகளை ஆரம்பித்து பேண முடியும். முதலீட்டாளர்களுடன் தொடர்புடைய அனைத்துக் கொடுக்கல்வாங்கல்களும் அவர்களது முதனிலை வணிகர்கள் மற்றும் உரிமம்பெற்ற வணிக வங்கிக;டாக முதலீட்டாளர் கணக்குகளில் பதிவுசெய்யப்படும்.

அரசாங்க பிணையங்களில் நான் முதலிட்டிருப்பின் கூற்றுகள் லங்கா செக்குயர் மூலம் எனக்கு கிடைக்குமா?

கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கும் பின்வரும் தகவல்களை உள்ளடக்குகின்ற கூற்றுகளை லங்கா செக்குயர் வழங்கும்.

அ) மாதத்தின் போது இடம்பெற்ற கொடுக்கல்வாங்கல்களை உறுதிப்படுத்துகின்ற மாதாந்த கூற்று. கொடுக்கல்வாங்கல்கள் எதுவும் மாதத்தின் போது இடம்பெற்றிருக்காவிடின்; முறைமை கூற்று எதனையும் உருவாக்காது.

ஆ) ஒவ்வொரு முதலீட்டாளரினாலும் வைத்திருக்கப்படும் நிலுவையாகவுள்ள மீதியினை உறுதிப்படுத்துகின்ற வருடத்திற்கு இரண்டு கூற்று 

இ) முதலீட்டாளருக்கு பணக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் முதிர்வுப் பெறுகைகள் அத்துடன்/ அல்லது நறுக்குக் கொடுப்பனவுகளை குறித்துக் காட்டுகின்ற கூற்று

இக்கூற்றுக்கள் லங்கா செக்குயர் இன் மத்திய வைப்பக முறைமையில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதலீட்டாளரின் பெயர் மற்றும் முகவரிக்கு நேரடியாக வழங்கப்படும்.

எனது லங்கா செக்குயர் கணக்குகளை இணையத்தளம் ஊடாக எனக்குப் பார்க்க முடியுமா?

இணையத்தளமூடாக எந்நேரத்திலும் தமது முதலீடுகள் பற்றிய தகவல்கள் தொடர்பான விபரங்களைப் பார்ப்பதற்கு அரசாங்க பிணையக் கணக்கு வைத்திருப்போரை இயலச் செய்கின்ற லங்கா செக்குயர்நெட் என அழைக்கப்படுகின்ற முறைமையொன்றினை இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

லங்கா செக்குயர்நெட் என்பது யாது?

லங்காசெக்குயர்நெட் என்பது அரசாங்க பிணையங்களின் முதலீட்டாளர்கள் தமது கொடுக்கல்வாங்கல்கள், வட்டி, மற்றும் முதிர்வுக் கொடுப்பனவுகள் அத்துடன் நிலுவையாக உள்ள மீதிகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகவிருக்கின்ற இணையத்தள அடிப்படையிலான வசதியொன்றாகும். இவ்வசதியானது, முதலீடுகள் தொடர்பில் நடப்புத் தகல்வல்களையும் வரலாற்று ரீதியான தகவல்களையும் வழங்குகின்றது. ஐந்து கலண்டர் நாட்களுக்காக மாத்திரம் வரலாற்றுத் தகவல்களை அவர்களுக்கு வழங்குவதற்கான உலாவி பணி நிலையம் கிடைக்கப்பெறுகின்றமையினால் லங்கா செட்டில் இன் பங்கேற்பாளர்களும் இவ் வசதியிலிருந்து நன்மை பெறலாம். 

லங்கா செக்குயர்நெட் வசதியினை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

இணையத்தளம் ஊடாக இவ்வசதியினைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற முதலீட்டாளரொருவர் லங்கா செக்குயர் வாடிக்கையாளர் தகவல் முறைமை இணையத்தளத்தில் தரப்பட்டுள்ள பின்வரும் படிமுறைகள் மூலம் முறைமைப் பெறு வழியினை அடையலாம் (https://www.cbsl.lk/lankasec/).

 

வங்கித் தொடர்பாடல்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் வெளியீடுகளை எவ்வாறு கொள்வனவு செய்வது?

இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்,

 1. பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சி சாலை (தொ.பே. 011-2444502)
 2. நாட்டிலுள்ள பிரபல புத்தகசாலைகள்
 3. பிரதேச அலுவலகம் மாத்தளை (தொ.பே. 066 2223367), அனுராதபுரம் (தொ.பே. 025 2222055), மாத்தறை (தொ.பே. 041 2222774), திருகோணமலை (தொ.பே. 026 2226966), கிளிநொச்சி (தொ.பே. 021 2285914) மற்றும் நுவரெலியா (தொ.பே. 052 3059004).

வைப்பகத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக சந்தா செலுத்துவது எவ்வாறு?

வாசகர்கள் வைப்பகத்தைப் பெற்றுக் கொள்வதற்கு (ஒரு வருடத்திற்கு அல்லது 6 மாதங்களுக்கு) இலங்கை மத்திய வங்கியின் பேரில் காசுக் கட்டளை அல்லது காசோலை மூலம் சந்தாக் கொடுப்பனவை செலுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

எனது சந்தாவினை மீள் புதுப்பிப்பது எவ்வாறு?

தமது சந்தாக் காலத்தின் முடிவில் விரும்பிய காலப்பகுதிக்காக உரிய கொடுப்பனவினை செய்வதன் மூலம் சந்தாவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் ஆசிரிய குழுக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி எடுத்துரைப்புகளை வழங்குகின்றதா?

ஆம், அதன் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் விரிவுரைகள்ஃ செயலமர்வுகள்/ கருத்தரங்குகள் போன்றவற்றுக்கு தொடர்பூட்டல் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொள்கின்றது. அத்தகைய எடுத்துரைப்பொன்றினை உங்களது பாடசாலையில் நடாத்துவதற்கு நீங்கள் விரும்பினால் தொடர்பூட்டல் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்து மூலக் கோரிக்கையொன்றினை முன்வைக்கலாம் (தொ.பே. இல. 011-2477418). வளவாளர்கள் கிடைக்கப்பெறும் தன்மைக்குட்பட்டு தொடர்பூட்டல் திணைக்களம் உங்களது கோரிக்கையினை நிறைவேற்றும்.

நாணய அரும்பொருட்காட்சி சாலை திறந்திருக்கும் நேரம்?

நாணய அரும்பொருட்காட்சி சாலை அரசாங்க மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தவிர்ந்த வாரநாட்களில் மு.ப. 9.00 தொடக்கம் பி.ப. 5.00 வரைத் திறந்திருக்கும். 

பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

மத்திய வங்கி அதன் பொதுமக்கள் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் பல்வேறு அமைச்சுக்களாலும் ஏற்பாடு செய்கின்ற கல்விசார்ந்த மற்றும் வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்கின்றது. நாணய அரும்பொருள் காட்சிசாலை, ஊழிய சேம நிதிய வினவல்கள், மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள் மற்றும் வெளியீட்டு விற்பனை நிலையம் போன்றன இலங்கை மத்திய வங்கியின் கூடங்களில் முக்கிய அம்சங்களாகும். 
மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டுவதற்கும் வங்கியின பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் வங்கியினால் வழங்கப்படுகின்ற பணிகள் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கும் தொடர்பூட்டல் திணைக்களம் ஆவணப் படங்களைத் தயாரிக்கின்றது. 

 

இவ்வெப்தளம் பற்றி

பெறுவழி

இலங்கை மத்திய வங்கியானது தகவல் தேவை மற்றும் புவியியல் அமைவிடம் என்ற நியதிகளில் அதன் சேவைநாடிகளின் பன்முகத் தன்மையினை அங்கீகரிக்கின்றது என்பதுடன், சிலர் இணையத்தளத்தினை பயன்படுத்துவதற்கு இயலாமை அல்லது தடைப்படுத்துகின்ற தொழில்நுட்பத் தடங்கல்கள் காணப்படுகின்றது என்பதால் இவ்வெப்தளத்தில் கிடைக்கப்பெறுகின்ற தகவல் பணிகளின் முழு அணுகூலத்தினையும் பெற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு உதவுவதற்கு பின்வரும் தகவல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

பின்னூட்டல்

இவ்வெப்தளம் மற்றும் அதன் தகவல்களை அணுகும் தன்மை பற்றிய கருத்துக்களையும் பின்னூட்டல்களையும் இலங்கை மத்திய வங்கி வரவேற்கின்றது.
<பின்னூட்டல் படிவும்>

ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று வழிகள்

நீங்கள் தேடுகின்ற ஆவணத்திற்கு இவ்வெப்தளத்தினூடாக பெறுவழி காணப்படவில்லையாயின் அதனை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பின் <cbslgen@cbsl.lk>  என்ற மின்னஞ்சலுக்கு உங்களது கோரிக்கையினை சமர்ப்பியுங்கள்.

உலாவி

இளைய சாளரம் மற்றும் Machintosh கணனிகள் மீதான Microsoft Internet Explorer 5.0 (அல்லது அதனைவிட உயர்வான பதிப்பு) Netscape 6.0 என்பவற்றினூடாக இவ்வெப்தளத்தை மிகச் சிறப்பாக பார்வையிட முடியும்.

திரை பிரிதிறன்

இவ்வெப்தளத்தை 1024 x 768 பிக்ஸல் திரை பிரிதிறனுடன் சிறப்பாகப் பார்வையிட முடியும்.

அச்சிடல்

இவ்வெப்தளத்தின் அனேகமான பக்கங்கள் அச்சிடுவதற்குத் தயாரான இலகுவாக அச்சிடக்கூடிய பதிப்பினைக் கொண்டவை. 

Microsoft Excel கோவைகளைப் பார்வையிடல்

இவ்வெப்தளம் மீதான அனைத்து Excel விரிதாள்களும் இலவசமாக தரவிறக்கம் செய்யக் கூடியவை. இவ்வெப்தளத்தின் மீதான அனேகமான Excel கோவைகள் Microsoft Excel 2003இல் உருவாக்கப்பட்டவை. Excel விரிதாள் கோவைகளைப் பார்வையிடுவதற்கு Microsoft Excel 2003 உங்களுக்குத் தேவைப்படும். 

கொண்டு செல்லக் கூடிய ஆவண வடிவம் (PDF) கோவைகளைப் பார்த்தல்

அனைத்துப் PDF கோவைகளும் இலவசமாகத் தரவிறக்கம் செய்யக்கூடியவை. உமது கணனியில் Adobe Acrobat Reader நிறுவப்பட வேண்டும். Adobe Acrobat Reader (Version 7.0) இன் பிந்திய பதிப்பு PDF ஆவணங்களை மிகவும் இலகுவாக  அணுகுவதற்கு இயலாதிருக்கின்ற வாசகர்களை இயலச் செய்கின்றது. 

நான் மிகப் பிந்திய தரவுகளைப் பார்வையிடுகின்றேன் என்பதனை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வது? 

உங்களது இணைய உலாவியில் Refresh அல்லது Reload என்ற பொத்தானை சொடுக்கவும். வெப்தளத்திற்கு நுழைகின்ற போது Reload செய்துள்ள வெப்தளப் பதிப்பு நடப்பு வெப்தளம் அல்ல என்பதனைக் காண சாத்தியமாகும். உங்களது கணனி வன்வட்டின் மீது அல்லது உங்களது ஈட்டு வழங்கி சேமிப்பகத்தின் மீது ஏற்கனவே சேமிக்கப்பட்ட பக்கங்களை இணைய உலாவி மீளேற்றம் செய்யலாம். பிந்திய தரவுகள் இன்னும் தென்படவில்லையாயின் உமது இணைய உலாவியிலிருந்து இடைமாற்று நினைவகத்தை நீக்கவும். இணைய உலாவி இனிமேலும் ஏற்கனவேயிருந்த கோவைகளுக்கு பெறுவழியினைக் கொண்டிருக்காது என்பதுடன் நடப்புப் பதிப்பினைக் ஏற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இச்செயன்முறைக்கு பொதுவாக உங்களது நிறுவனம் அல்லது இணையத்தள சேவை வழங்குனர் மூலம் ஈட்டு வழங்கி 'அமைப்பாக்கம்" ஏற்படுத்தப்பட்டிருக்குமெனில் உதவி தேவைப்படாது. அல்லது உங்களது இணையத்தள சேவை வழங்குனரை தொடர்பு கொண்டு அல்லது உமது தகவல் தொழில்நுட்பத் திணைக்களம்ஃ கணனி நிருவகிப்பவரைத் தொடர்புகொண்டு உதவியினைக் கோரவும்.

எழுத்துருவின் அளவினை அதிகரிப்பது எவ்வாறு?

உரைப்பகுதியினை பெரிய எழுத்துருவில் காண்பிப்பதற்கு உங்களது இணை உலாவியில் பின்வரும் அமைப்புக்களை மாற்றம் செய்யவும்.

-     காட்சிப் பட்டியலிலிருந்து உரை அளவினைத் தெரிவு செய்க
-     உங்களுக்குத் தேவையான அளவினை தெரிவு செய்க. (உதாரணமாக Larger)