இலங்கை மத்திய வங்கியானது சீன மக்கள் வங்கியுடன் இருபுடை நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைச் செய்திருக்கிறது

இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் இரு நாடுகளினதும் இருபுடை வர்த்தகத்தினையும் பொருளாதார அபிவிருத்திக்கான நேரடி முதலீடுகளையும் மேம்படுத்தும் நோக்குடனும் இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் ஏனைய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்காகவும் இருபுடை நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைச் செய்துகொண்டன. சீன மக்கள் குடியரசு இலங்கையின் மிகப்பெரிய இறக்குமதி மூலமாக தொடர்ந்தும் இருந்துவருகிறது. 2020இல் சீனாவிலிருந்தான இறக்குமதிகள் ஐ.அ.டொலர் 3.6 பில்லியனாக விளங்கின. (இலங்கையின் இறக்குமதிகளில் 22.3 சதவீதம்).

இப்பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கைக்கு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் விதந்துரைப்புடன் அமைச்சரவை ஒப்புதலளித்திருக்கிறது. இரு மத்திய வங்கிகளினதும் ஆளுநர்களான, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி லக்ஷ்மன் மற்றும் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் முனைவர். ஜி காங் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கின்றனர்.

இவ்வுடன்படிககையின் கீழ், இலங்கை மத்திய வங்கி சீன யுவான் 10 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) தொகை கொண்ட பரஸ்பரபரிமாற்றல் வசதியைப் பெற தகைமை பெறுகிறது. இவ்வுடன்படிக்கையானது மூன்று (3) ஆண்டு காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும்.

 

Published Date: 

Monday, March 22, 2021