கொவிட் - 19 பரவலிற்கிடையில் வங்கிகளுக்கு திரவத்தன்மையை வழங்குவதற்கான அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிவகைகளை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களிற்கு உதவுவதற்காக கடன் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக உரிமம்பெற்ற வணிக வங்கிகளின் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளின் (உரிமம்பெற்ற வங்கிகள்) திரவத்தன்மை மற்றும் ஏனைய முதன்மை செயற்றிறன் குறிகாட்டிகளில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கத்தின் சாத்தியப்பாடு குறித்தும் உடனடித் திரவத்தன்மை தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய அவசியத்திற்காகவும் வங்கிகளின் திரவத்தன்மை நிலையை வலுப்படுத்துவது இன்றியமையாததெனக் கருதுகின்றது.

இதன்படி, இத்தகைய அசாதாரண சூழ்நிலைகளில் தொடர்ச்சியான கடன்வழங்கலை உறுதிசெய்யவும், அவசர திரவத்தன்மைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் வங்கிச் சட்டம் மற்றும் நாணய விதிச் சட்ட ஏற்பாடுகளின் படி உரிமம்பெற்ற வங்கிகளின் திரவத்தன்மை நிலையை வலுப்படுத்துவதற்கான பின்வரும் அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதென நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

       ()       தொழிற்படு மூலதனம் மற்றும் ஏனைய கடன்களை சலுகை வட்டிவீதத்தில் வழங்கி           பொருளாதாரத்தில் கேள்வியைத் தூண்ட வங்கித் துறையை இயலுமைப்படுத்துவதற்காக,   மீள்நிதியிடல் வசதியின் கீழ் அல்லது கடன் தொழிற்பாடுகளின் மூலம் மேலதிக நிதியை  வழங்குதல்.
       ()      2021 யூன் 30 வரை:
                (i)    நிபந்தனைகளுக்குட்பட்டு நியதிச் சட்ட திரவச்சொத்து சொத்து விகிதத்தைக் கணிப்பதற்கு குறிப்பிட்ட சொத்துக்களை திரவச் சொத்துக்களாகக் கருத்திற்கொள்ள உரிமம்பெற்ற வங்கிகளை அனுமதித்தல், மற்றும்
                (ii)    மேம்படுத்தப்பட்ட மேற்பார்வை மற்றும் தொடர்ச்சியான அறிக்கையிடலுடன் திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் மற்றும் தேறிய நிலையான நிதியிடல் விகிதம் என்பவற்றின் குறைந்தபட்ச தேவைப்பாட்டை 90 சதவீதத்திற்குக் குறைத்தல்.
       (ஏற்றுக்கொள்ளக்கூடிய பிணை மற்றும் திரவத்தன்மை எதிர்வுகூறல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை வைப்புக காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தினூடாக அல்லது உரிமம்பெற்ற வங்கிகளுக்கான அவசரக்கடன்கள் மற்றும் முற்பணங்கள் கட்டமைப்பின் கீழ் இலங்கை ரூபாவில் கடன்கள் மற்றும் முற்பணங்களாக உரிமம்பெற்ற வங்கிகளுக்கு திரவத்தன்மை கிடைக்க இயலுமைப்படுத்தல்.

சமகாலத்தில், இத்தகைய அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் வங்கிகளின் திரவத்தன்மை நிலையை வலுப்படுத்தும் நோக்கில் நாணயச்சபையானது, காசுப்பங்கிலாபங்கள் அல்லது இலாப மீளனுப்பல்களை அறிவித்தல், பங்குகளை மீளவாங்குதலில் ஈடுபடல், பணிப்பாளர் சபைக்கான முகாமைத்துவப் படிகள் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற கட்டாயமற்ற கொடுப்பனவுகளை 2020 திசெம்பர் 31 வரையான ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது. மேலும், உரிமம்பெற்ற வங்கிகள் மேலே குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் முன்மதியுடன் செயற்படுவதுடன், அத்தியாவசியமற்ற செலவுகள் மற்றும் மூலதன செலவினங்களைச் செய்வதிலிருந்து முடிந்தவரை விலகியிருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையில், தற்போது வங்கிகள் எதிர்கொள்ளும் வளப்பற்றாக்குறை மற்றும் கொவிட்-19 பரவலினால் நிலவும் சந்தை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, 2020ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு முறையியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான வருடாந்த மதிப்பீட்டை செய்யாதிருப்பதுடன், 2019 திசெம்பரில் வெளியிடப்பட்டவாறு உள்நாட்டு முறையியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்ட வங்கிகளை 2020ஆம் ஆண்டிலும் பேணிக்கொள்வதற்கு நாணயச்சபை தீர்மானித்துள்ளது.

உரிமம்பெற்ற வங்கிகளின் பணிப்பாளர் சபை மற்றும் மூத்த முகாமைத்துவமானது அந்தந்த வங்கிகளின் திரவத்தன்மை நிலைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், இத்தகைய அதிவிசேட வழிமுறைகளின் விளைவாக திரளும் திரவ நிதியினை முன்மதியுடன் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் வலுவாக அறிவுறுத்தப்படுகின்றது. இத்தகைய அதிவிசேட வழிமுறைகளினூடாக வங்கிகள் பொருளாதார நடவடிக்கைகளிற்கு புத்துயிர் அளிப்பதற்காக முன்மதியான முறையில் தடையற்ற கடன் பாய்ச்சலை வழங்கவேண்டுமென்றும் இதன் மூலமே பொருளாதாரத்தின் நிதித்துறை உட்பட அனைத்துத் துறைகளும் பயனடையுமென்றும் இலங்கை மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது. இத்தகைய அசாதாரண காலப்பகுதியில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து வழிவகைகளினதும் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்காக, பங்குதாரர்கள் உட்பட்ட வங்கிகளின் அனைத்து தொடர்புடைய தரப்பினரதும் ஆதரவினை இலங்கை மத்திய வங்கி கோருகின்றது

.

Published Date: 

Wednesday, May 13, 2020