பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட ஒழுங்குகளின் ஆறாவது மீளாய்வினைப் பூர்த்தி செய்துள்ளது

•இலங்கை ஆறாவது மீளாய்வினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து ஆதரவு நிதியத்தின் அடுத்த பகிர்ந்தளிப்பினை இயலச் செய்துள்ளது. 

•தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்கும் உறுதியானதும் அனைத்தையுமுள்ளடக்கியதுமான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நிலைத்து நிற்கும்கொள்கை ஒழுங்காற்று தொடர்ந்தும் இன்றியமையாததாகவிருக்கின்றது. 

•அரசிறையின் சேகரிப்பு அரச படுகடனை ஒரு கீழ்நோக்கிய பாதையில் வைத்திருக்கும் வேளையில், சமூக மற்றும் முதலீட்டு செலவினத்தினை பாதுகாப்பதற்கும் மையமாகவிருக்கும். 

விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஒரு விரிவாக்கப்பட்ட ஒழுங்கினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2019 நவெம்பர் 01 இல் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை இலங்கையின் பொருளாதாரச் செயலாற்றத்தின் ஆறாவது மீளாய்வினைப் பூர்த்திசெய்துள்ளது. ஆரம்ப நிலுவையின் 2019 யூன் இறுதிக்கான செயலாற்றப் பிரமாணத்தினை அடையத்தவறியமை தொடர்பாக ஒரு தளர்த்தலை வழங்கி ஆறாவது மீளாய்வு பூர்த்தி செய்யப்பட்டமை சிஎஉ 118.5 மில்லியன் (ஏறத்தாள ஐ.அ.டொலர் 164 மில்லியன்) பகிர்ந்தளிப்பினை இயலச் செய்ததுடன் ஒழுங்கின் கீழான மொத்தப் பகிர்ந்தளிப்புக்களை சிஎஉ 952.23 மில்லியனுக்கு (ஏறத்தாள ஐ.அ.டொலர் 1.31 பில்லியனுக்கு) கொண்டு வந்திருக்கின்றது.

இலங்கையின் விரிவாக்கப்பட்ட ஒழுங்குகள் சிஎஉ 1.1 பில்லியன் பெறுமதியுடன் (ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் அல்லது ஒழுங்குகள் ஒப்புதலளிக்கப்பட்ட வேளையிலிருந்த பன்னாட்டு நாணய நிதியத்தின் சந்தாவின் 185 சதவீதமாக) 2016 யூன் 3ஆம் திகதி ஒப்புதலளிக்கப்பட்டது. ஒழுங்குகளினை மேலுமொரு வருடத்தினால் 2020 யூன் 2ஆம் நாள்வரை விரிவாக்குவதற்கும் எஞ்சியுள்ள பகிர்ந்தளிப்புக்களை மீள்கட்டுப்படுத்துவதற்கும் 2019 மே 13ஆம் நாளன்று நிறைவேற்றுச் சபை ஒப்புதலளித்தது.

மீளாய்வு தொடர்பான நிறைவேற்று சபையின் கலந்துரையாடலினைத் தொடர்ந்து சபையின் பதில் தலைவரும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு. மிற்சுகிரோ புறுசலா பின்வரும் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

 'உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் தாக்கத்திலிருந்து இலங்கைப் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது. சுற்றுலாப்பயணிகளின் வருகை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளின் படிப்படியான மீட்சியுடன் வளர்ச்சியானது 2019இல் 2.7 சதவீதத்திலிருந்து 2020 இல் 3.5 சதவீதத்திற்கு வலுவடையுமென எதிர்வுகூறப்படுகிறது. உயர்ந்தளவான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிச்சயமற்றதன்மைக்கு மத்தியில் முக்கிய பாதகமான இடர்பாடுகள் தொடர்ந்துமிருப்பதனால் இறைக்கொள்கையின் ஒழுக்காற்று தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்கும் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் தொடர்ந்தும் இன்றியமையாததாகவிருக்கின்றது". 

'பயங்கரவாதத் தாக்குதல்களின் காரணத்தினாலாக அரசிறையின் துண்டு விழுதல்களைக் குறைப்பதற்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கடினமாகப் பெற்றுக் கொண்ட வெற்றியின் பலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அரச படுகடனை கீழ்நோக்கிய பாதையில் வைத்திருப்பதற்கும் அதேவேளையில் இன்றியமையாத சமூக மற்றும் முதலீட்டு செலவீனங்களுக்கான இறை இடைவெளியினைப் பாதுகாத்துக் கொள்வதற்வதற்குமாக அரசிறையை சேகரிப்பதற்கான நிலைத்துநிற்கும் முயற்சிகள் 2020 இல் வேண்டப்படுகின்றன. புதிய இறை விதிகள் கட்டமைப்பு மற்றும் நடுத்தர காலத்தில் ஒரு சுயாதீனமான அரச படுகடன் முகாமைத்துவ முகவராண்மை போன்றவை அரச படுகடனின் தாக்குப்பிடிக்கும் தன்மையை உறுதி நிலைப்படுத்துவதற்கு துணைபுரியும். மின்சாரத் துறையில் அரசிற்கு சொந்தமான தொழில்முயற்சிகளின் சீர்திருத்தங்களும் இறை இடர்நேர்வுககைளைக் குறைப்பதற்கு இன்றியமையாதவையாகும். 

'இலங்கை மத்திய வங்கி தரவினை அடிப்படையாகக் கொண்ட நாணயக் கொள்கையினைப் பேண வேண்டும். நெகிழ்ச்சித் தன்மை மிக்க பணவீக்க இலக்கிடலை பின்பற்றுதலை நோக்கிய ஒரு மைல்கல் சீர்திருத்தமாக புதிய மத்திய வங்கிச் சட்டம் விளங்கும். சந்தை அழுத்தங்களின் நிகழ்வுகளின் போது செலாவணி வீதத்தின் நெகிழ்ச்சியினை அதிகரித்து பொருளாதாரத்தினை அதிர்வுகளுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கு ஒதுக்கினைக் கட்டியெழுப்புவதற்கான நிகழ்ச்சிகள் நிலைத்திருக்க வேண்டும்".

'பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் முறைமையினை வலுப்படுத்துவதில் இலங்கை முக்கிய முன்னேற்றத்தினை எட்டியுள்ளது. நிதி நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்வதனை இணங்குவித்தல், பேரண்ட முன்மதியுடைய கொள்கைக்கட்டமைப்பை வலுப்படுத்தல், நிகழத்தக்க கட்டமைப்பை தரமுயர்த்தல் போன்றவை நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கு துணைபுரியும்". 

'போட்டித் தன்மையினை தூண்டுவதற்கும் வலுவானதும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைந்துகொள்வதற்கும் கட்டமைப்புச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தினை மேலும் முன்னேற்றமடையச் செய்வது இன்றியமையாததாகும். மேலதிக தீர்வைகளைப் படிப்படியாக நீக்குவதன் மூலம் வர்த்தகத்தை தாராளமாக்குகின்ற அதேவேளை, அவற்றின் அரசிறை மீதான தாக்கத்தினைத் தீர்த்துக்கொள்ளல், ஆளுகையினை வசப்படுத்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான கட்டமைப்பு, பெண்களின் பொருளாதார வலுவூட்டலினை மேம்படுத்தல், வானிலை தொடர்பான தாக்குப்பிடிக்கும் தன்மையினை கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பாதுகாப்பினை உயர்த்துதல் போன்றவற்றை நோக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்".

 

Published Date: 

Saturday, November 2, 2019