இலங்கையில் நிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றினை மத்திய வங்கி வெளியிட்டிருக்கிறது

Dr. P Nandalal Weerasinghe, Senior Deputy Governor, Central Bank of Sri Lanka Launching the Roadmap for Sustainable Finance in Sri Lanka at the Sustainable Banking Network Global Meeting of the International Finance Corporation.

இலங்கை மத்திய வங்கியின் மூத்த துணை ஆளுநர் முனைவர். பி. நந்தலால் வீரசிங்க அவர்கள் பன்னாட்டு நிதியக் கூட்டுத்தாபனத்தின் நிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் உலகளாவிய வலையமைப்புக் கூட்டத்தில் இலங்கையின் நிலைத்திருகக்கூடிய நிதிக்கான வழிகாட்டலினை வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கை மத்திய வங்கி ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி இலுள்ள பன்னாட்டு நிதி கூட்டுத்தாபனத்தின், நிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழிலின் உலகளாவிய வலையமைப்புக் கூட்டத்தில், 2019 ஏப்பிறல் 10ஆம் நாளன்று இலங்கையின் நிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றினை வெளியிட்டிருக்கிறது. இவ்வழிகாட்டலானது, நிதியியல் ஒழுங்குமுறைப்படுத்துநர்களுக்கும் நிதியியல் நிறுவனங்களுக்கும் சூழலையும் சமூகங்களையும் காத்திரமான முறையில் முகாமைப்படுத்துவதற்கும் அவர்களின் நிதியியல் செயற்றிட்டங்களுடன் இணைந்த இடர்நேர்வுகளை ஆளுகை செய்வதற்கும் பசுமையான, காலநிலை - சிநேகபூர்வத்தன்மை கொண்ட மற்றும் சமூகரீதியான வசதிகளைக் கொண்ட வியாபாரங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கும் பரந்தளவிலான பணிப்புரைகளை வழங்குகின்றது.

வழிகாட்டலானது, சூழல், சமூக மற்றும் ஆளுகை இடர்நேர்வுகளுக்குப் பதிலிறுத்துவதற்காகவும் நிலைத்திருக்கக்கூடிய நிதியியல் வாய்ப்புக்களுக்காகவும் கொள்கை வழிகாட்டல்களையும் விதிதந்துரைப்புக்களையும் வழங்குவதன் மூலம் வங்கித்தொழில் மற்றும் மூலதனச் சந்தைகள் மற்றும் காப்புறுத்தொழில் துறை என்பனவற்றை உள்ளடக்கிய நிதியியல் துறையின் பங்களிப்புக்களின் அளவை அதிகரிப்பதற்கும் கூடியளவு தாக்குப்பிடிக்கக்கூடிய, நிலைத்திருக்கக்கூடிய பசுமைப் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் விதத்தில் உதவுவதற்கும் முயற்சிக்கின்றது. உலக வங்கிக் குழுமத்தின் ஒரு பகுதியாக விளங்கும் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் செயலகமாகவும் தொழில்நுட்ப மதியுரையாளராகவும் பணியாற்றுவதுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்;டம் அதன் உயிரினபல்லினத் தன்மை நிதி முன்னெடுப்புக்களினூடாக, மத்திய வங்கி நிலைத்திருக்கக்கூடிய நிதி வழிகாட்டலை வடிவமைப்பதற்கான நிதியியல் உதவியையும் வழங்குகின்றது. இவ்வழிகாட்டலானது, வரையறுக்கப்பட்ட (உத்தரவாதப்படுத்தப்பட்ட) இலங்கை வங்கியாளர் சங்கம், இலங்கை நிதியகங்கள் சங்கம், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு என்பனவற்றை உள்ளடக்கியஅக்கறையுடைய தரப்பினரின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவ் வழிகாட்டலானது, இலங்கையில் நிலைத்திருக்கக்கூடிய நிதியினை நடைமுறைப்படுத்துவதற்கான உபாய நடவடிக்கைத் தொடர்களை விளக்குகின்ற அதேவேளை, இது தொடர்பான அக்கறையுடைய தரப்பினரால் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடவடிக்கைத் திட்டத்தினையும் விபரமாகத் தருகிறது. வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டுள்ள உபாய நடவடிக்கைகள் ஆறு முக்கிய கவனத்திற்குரிய துறைகளான நிதியியல் தொலைநோக்கு 2030, சூழல், சமூக மற்றும் ஆளுகையினை நிதியியல் சந்தைகளுடன் ஒருங்கிணைத்தல், நிதியியலினுள் உட்படுத்துதல், இயலளவினைக் கட்டியெழுப்புதல், பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் அளவிடல் மற்றும் அறிக்கையிடல் என்பனவற்றை மையமாகக் கொண்டிருக்கின்றன.

 

Published Date: 

Thursday, April 11, 2019