2015 திசெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் (2013 = 100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2015 நவெம்பரில் 4.8 சதவீதத்திலிருந்து 2015 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2015 திசெம்பரில் ஆண்டுச் சராசரி அடிப்படையிலான பணவீக்கம் 3.8 சதவீதமாக இருந்தது.  

2015 திசெம்பரில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் நவெம்பரிலிருந்து திசெம்பருக்கு 1.1 சதவீதத்தினால் அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு மற்றும் மதுவல்லா குடிபான வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். காய்கறிகள், பச்சை மிளகாய், அரிசி மற்றும் உடன் மீன் என்பனவற்றின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன. அதேவேளை பெரிய வெங்காயம், எலுமிச்சம்பழம், உருளைக்கிழங்கு, நெத்தலி மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. 2015 திசெம்பர் காலப்பகுதியில் மதுக் குடிவகைகள், புகையிலை, போதைப்பொருட்கள், தளபாடங்கள், வீட்டலகுச் சாதனங்கள் மற்றும் வீட்டலகுகளின் கிரமமான பேணல்; போக்குவரத்து; கல்வி மற்றும் உணவகங்கள், சுற்றுலாவிடுதிகள் துணை வகைகளும் அதிகரித்தன. துணிவகை மற்றும் காலணி; வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருள் துணைவகைகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. நலம்; தொடர்பூட்டல்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைளின் மாற்றமின்றி சராசரியாகக் காணப்பட்டன.   

முழுவடிவம்

Published Date: 

Thursday, January 21, 2016