நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் உதவி ஆளுநர் திரு.எஸ்.லங்காதிலகவை 2016 சனவரி 24ஆம் நாளிலிருந்து இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது.
திரு. எஸ்.லங்காதிலக
திரு.எஸ்.லங்காதிலக, இலங்கை மத்திய வங்கியில் பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு, நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் முகவர் தொழிற்பாடுகள் ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தினைக் கொண்டிருக்கிறார். இந்நியமனத்திற்கு முன்னர் உதவி ஆளுநர் பதவியிலிருந்த அவர் வங்கி மேற்பார்வை, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வை, நிதியியல் துறை ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவு ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருந்தார்.
திரு.எஸ்.லங்காதிலக பொருளாதாரத்தில் M.A பட்டத்தினையும் பொருளாதாரத்தில் பட்டப்பின் படிப்பிற்கான டிப்ளோமாவையும், ஐக்கிய இராச்சியத்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்தும், முதலாம் வகுப்புடன் கூடிய சிறப்பு B.com பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றுக் கொண்டார். இலங்கை மத்திய வங்கியின் 30 ஆண்டு காலப்பணியில் திரு.எஸ்.லங்காதிலக பேரண்டப் பொருளாதார முகாமைத்துவம், பேரண்டப் பொருளாதார மாதிரிப்படுத்தல், வர்த்தக் கொள்கைகள், போட்டித்தன்மை, செயற்றிட்ட முகாமைத்துவம், வெளிநாட்டு முதலீடு, உபாயமுகாமைத்துவம், மனிதவளங்கள் முகாமைத்துவம், தொடர்பூட்டல் கொள்கை போன்ற துறைகளில் பெரும் எண்ணிக்கையான பன்னாட்டு ரீதியான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்றிருக்கின்றார். திரு.எஸ்.லங்காதிலக இலங்கை ஏற்றுமதிக் கொடுகடன் காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை, பதிவாளர் நாயகத் திணைக்களங்களின் உறுதி காப்புறுதி நிதிய முகாமைத்துவச் சபையின் பணிப்பாளர் சபை, தேசிய தொழிலாளர் மதியுரைக்குழு என்பனவற்றிலும் மற்றைய பல குழுக்களிலும் இலங்கை மத்திய வங்கியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினராக பணியாற்றியிருக்கின்றார். மேலும், திரு.எஸ்.லங்காதிலக குறிப்பாக வங்கித்தொழில் உறவுமுறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பான பல அரச பேராளர்குழுக்களிலும் பேச்சுவார்த்தைக் குழுக்களிலும் இலங்கை மத்திய வங்கியைப் பிரதிநிதிதுவப்படுத்தியிருக்கின்றார். நாணயக் கொள்கை குழுவிலும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவிலும் உறுப்பினராக இருந்து இலங்கை மத்திய வங்கியின் மையக்குறிக்கோள்களை எய்துவதில் அளப்பரிய முறையில் பங்காற்றியிருக்கின்றார். திரு.எஸ்.லங்காதிலக பிரதேச அபிவிருத்தியின் கீழ்வருகின்ற கொடுகடன் வழங்கலை மேம்படுத்துவதற்கும் ஏற்கனவேயுள்ள கொடுகடன் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் பல வழிமுறைகளை அறிமுகப்படுத்திருப்பதுடன் மக்களுக்கு நிதியியல் பணிகள் கிடைப்பதனை அதிகரிப்பதற்கும் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வேளாண்மையாளர்களுக்கு நிதிவசதிகளை கிடைக்கச் செய்வதற்காக புதிய நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதில் வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கின்றார். குறிப்பாக, சிறிய அளவுக் கைத்தொழில்கள், பன்னாட்டு வர்த்தகம், இரத்தினக்கல் கைத்தொழில் மற்றும் ஆடைக்கைத்தொழில் போன்ற துறைகளில் அமைந்த பல்வேறு கட்டுரைகளுக்கு ஆசிரியராக திரு.எஸ்.லங்காதிலக இருப்பதுடன் அக்கட்டுரைகள் புகழ்பெற்ற பன்னாட்டு மற்றும் உள்நாட்டு சஞ்சிகைகளில் வெளியாகின.
செயற்றிட்ட முகாமைத்துவம், செயற்றிட்ட மதிப்பீடு, நலிவடைந்த செயற்றிட்டங்கள் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் புகழ்பெற்ற வளஆளணியினராக விளங்கிய திரு.எஸ்.லங்காதிலக வேறுபட்ட பரிமாணங்களில் பல்வேறு மாநாடுகளிலும் பங்குபற்றியிருக்கின்றார்.