இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை

2015 பெப்புருவரி 01 இலிருந்து 2016 மாச்சு 31 வரையான காலப்பகுதியின் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் சனாதிபதி புலனாய்வுக் குழுவின் விதந்துரைப்புக்கள் மற்றும் அறிக்கை தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அறிக்கையும் பொதுப்படுகடன் மற்றும் ஊழியர் சேம நிதியத்தின் முகாமைத்துவத்தினையும் கட்டுப்பாட்டினையும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட வழிமுறைகளும்.

2015 பெப்புருவரி 01 திகதி தொடக்கம் 2016 மாச்சு 31 வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்கியமை தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் சனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்றினை சனாதிபதியின் செயலாளர் 2018 சனவரி 10ஆம் நாளன்று அறிக்கையில் உள்ளடங்களப்பட்டுள்ள விதந்துரைப்புக்களை நடைமுறைப்படுத்தும் விதத்தில் அதனைப் பரிசீலிக்கும் பணியினை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் ஒப்படைக்கும் விதத்தில் கையளித்துள்ளார்.

மத்திய வங்கியானது, அதிலுள்ள சில பரிந்துரைகளை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ள அதேவேளை ஏனைய பரிந்துரைகளின் அநேகமானவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாணயச் சபையானது அது எடுத்துள்ள நடவடிக்கைகளில் பொருத்தமானவாறு சட்டமா அதிபருடன் ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறது. அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்டுள்ள அல்லது ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகளின் நிலைபற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதும் பொதுப்படுகடன் மற்றும் ஊழியர் சேம நிதிய முகாமைத்துவத்தின் வெளிப்படையான தன்மையினை பொதுவாக மேம்படுத்துவதும் பொருத்தமானதென சபை கருதுகின்றது. அறிக்கையானது தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வருவதுடன் நாணயச் சபை பொருத்தமானவிதத்தில் மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்.

1. சட்டவாக்கத் திருத்தங்கள்:

• 2017ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சட்ட மறுசீரமைப்புச் செயன்முறையொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்திற்கான புதிய ஏற்பாடுகளும்/ திருத்தங்களும் அதேபோன்று தற்காலப் பொருளாதார மற்றும் நிதியியல் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பன உள்ளடங்கலாக ஏனைய முக்கிய சட்டவாக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

• புதிய பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தினை 2018ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. பொறுப்பு முகாமைத்துவச் சட்டமானது மீண்டும் கொள்வனவு செய்தல், மாறுதல் மற்றும் முன் நிதியிடல் ஒழுங்குகள் போன்ற தீவிரமான படுகடன் முகாமைத்துவ முன்முயற்சிகளுக்கு நெகிழ்வுத் தன்மையினையும் வழங்குவதுடன், வெளிநிற்கின்ற படுகடன் இருப்பின் முதிர்வுத் தோற்றப்பாட்டினை மாற்றுவதன் மூலம் அடிப்படைப் படுகடன் இருப்பின் மீண்டும் மீண்டும் ஏற்படும் முதலீட்டு இடர்நேர்வினைக் குறைக்கும். மேலும், உபாயமல்லா சொத்துக்களின் விற்பனைப் பெறுகைகளிலிருந்து திரட்டப்பட்ட விசேட நிதியங்களைப் பேணுவதனையும் இது இயலச்செய்யும். பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொதுப்படுகடன் இடர்நேர்வுத் தோற்றப்பாட்டினை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றது.

2. படுகடன் முகாமைத்துவத் தொழிற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் வெளிப்படைத் தன்மையினை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

2.1 அரசாங்கப் பிணையங்களுக்கான முதலாந்தர வழங்கலுக்காக இலங்கை அபிவிருத்தி முறிகளுக்கான இரண்டாந்தரச் சந்தையை மேம்படுத்துவதற்காகப் புதிய ஏல முறைமையினை அறிமுகப்படுத்தல்:

• 2017 யூலையில், அரசாங்கத்தின் உள்நாட்டு கடன்பாடுகளின் வினைத்திறனையும் வெளிப்படைத்தன்மையினையும் மேலும் அதிகரிப்பதற்காக திறைசேரி முறிகளுக்கான முழுமையாக ஏலத்தினை அடிப்படையாகக்கொண்ட வழங்கல் முறைமைக்குப் பதிலாக திறைசேரி முறிகளுக்கான புதிய முதனிலை வழங்கல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று மிகவிரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

• மேற்குறித்த வழிமுறைகளின் விளைவாக 2017 யூலை முதல் ஏலங்களில் ஏதேனும் பற்றாக்குறைகளுக்கு நிதியளிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியினை தேவைப்படுத்தாது சந்தையிலிருந்து அனைத்துத் திறைசேரி நிதியிடல் தேவைப்பாடுகளையும் மத்திய வங்கி திரட்டக்கூடியதாகவிருந்து வருகின்றது. இதற்கு மேலதிகமாக புதிய ஏலமுறைமையின் கீழ், 2018ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் திறைசேரியின் உயர்ந்த நிதியிடல் தேவைப்பாட்டினைப் பூர்த்திசெய்வதற்காக 2017ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டின் போது புதிய திறைசேரி முறி வழங்கலூடாக ரூ.110.16 பில்லியன் மேலதிகத் தொகையொன்றினை இலங்கை மத்திய வங்கி திரட்டக்கூடியதாகவிருந்தது.

• இலங்கை அபிவிருத்தி முறிகளுக்காக இலத்தரனியல் விலைக்குறிப்பீட்டு முறைமையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை அபிவிருத்தி முறிகளின் இரண்டாந்தரச் சந்தைச் செயற்பாடுகளுக்கு வசதியளிக்கப்படும்.

2.2 பொதுப்படுகடன் தொழிற்பாடுகள் மற்றும் அரசாங்கப் பிணையங்களின் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களின் உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிப்படைத் தன்மையினை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

• அரசாங்கப் பிணையங்களின் முதலாந்தர வழங்கலுக்கு முன் விலைக்குறிப்பீட்டு கூட்டங்க;டாக முதனிலை வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதனை அதிகரித்தல்;

• திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் வழங்கல்கள் பற்றிய காலாண்டு கலண்டர்களை வெளியிடுதலும், வெளியிடப்பட்ட கலண்டர்களுக்கிசைவாக அவற்றின்  வழங்கல்களை ஒழுங்குபடுத்தல். இலங்கை அபிவிருத்தி முறிகளை வழங்குவதற்காக, மீட்பு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட வரையறையினை அடிப்படையாகக் கொண்ட கலண்டரொன்றிற்கான சாத்தியம் பற்றி ஆராயப்பட்டு வருகின்றது;

• ஏலக் கூட்டுக்களில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தொகையானது முன்வைக்கப்பட்ட தொகைக்கு மட்டுப்படுத்தப்படுவதன் மூலம் ஊகத்தன்மை ஊக்குவிக்கப்படுகிறது;

• திறைசேரி முறிகள், திறைசேரி உண்டியல்கள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகளின் கேள்விச்சபை திறைசேரிச் செயலாளரின் இரண்டு பிரதிநிதிகளுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

• 2016ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கப் பிணையங்கள் கொடுக்கல்வாங்கல்களுக்காக இலத்திரனியல் முறி வர்த்தகத் தளமொன்றினை பயன்படுத்துவது முதனிலை வணிகர்களுக்கும் உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

• விலை கண்டறிதலை மேம்படுத்துவதற்கும் சீரற்ற தகவல்களைக் குறைப்பதற்கும் அரசாங்கப் பிணையங்களின் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் புளூம்பேர்க் தளத்தில் அறிக்கையிடப்படுவதுடன் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல் சுருக்க அறிக்கை நாளாந்த அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்தில் வெளியிடப்படுகின்றது.

பொதுப்படுகடன் திணைக்களத்தின் முன்னரங்க அலுவலகத்தில் குரல் ஒலிப்பதிவு முறைமை பயன்படுத்தப்படுவதுடன் பொதுப்படுகடன் திணைக்களத்தில் சிசிடிவி முறைமையொன்றும் பொருத்தப்பட்டுள்ளது. பொதுப்படுகடன் திணைக்களத்தில் அணுகுவழி கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெளியிலிருந்து வருகைதருபவர்கள் இலங்கை மத்திய வங்கியின் வருகைதருநர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பதிவேட்டில் பதிவுசெய்வதற்கு வேண்டப்படுகின்றனர்.

• பொதுப்படுகடன் திணைக்களத்தின் கண்காணிப்பு, கட்டுப்பாடு, மேற்பார்வை, பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு உள்ளடங்கலான நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன் நிபுணத்துவத் தொழில்நுட்ப உதவியுடன் மேலதிக மேம்படுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

• இணைத்தரப்பினர்களுக்கான இடர்நேர்வினைக் குறைப்பதற்காக இலத்திரனியல் வர்த்தகப்படுத்தல் தளம் மற்றும் மத்திய இணைத்தரப்பு முறைமையொன்றினை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

3. ஊழியர் சேம நிதியத்தின் முதலீட்டுத் தீர்மானம் எடுத்தல் அதேபோன்று கட்டமைப்பின் உள்ளகக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றின் வெளிப்படைத் தன்மையினையும் ஆளுகையினையும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

3.1 ஊழியர் சேம நிதிய முதலீடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

• 2016 மே தொடக்கம் செயற்படத்தக்கவாறு இரண்டந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டதுடன் அதன் சந்தைச் செயற்பாடுகளிலிருந்து தோன்றுகின்ற கரிசனைகளின் காரணமாக, 2016 ஒத்தோபரில் நாணயச் சபையானது ஊழியர் சேம நிதியம், திறைசேரி முறிகள் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவுகள் என்பனவற்றுக்கான இரண்டாந்தரச் சந்தையில் பங்கேற்பதனை உள்ளகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் வரை மட்டுப்படுத்தியது. 

• ஊழியர் சேம நிதியத்திற்கு கிடைக்கப்பெறுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டு வாய்ப்புக்களினைக் கருத்திற்கொண்டு நாணயச் சபையானது இடைக்கால நடவடிக்கையொன்றாக அரச வங்கிகளில் நிலையான வைப்புகள், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதிக்கான அணுகுவழி போன்ற முதலீடுகளுக்கான மாற்றுவழி வழிமுறைகளை அனுமதித்துள்ளது.

• ஊழியர் சேம நிதியத்தின் முதலீட்டுத் தீர்மானம் மேற்கொள்ளல் செயன்முறையினை வலுப்படுத்துவதற்கும் சொத்துப்பட்டியல் முகாமைத்துவச் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்குமான அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு 2017.07.06ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும்விதத்தில் நாணயச் சபையானது முதலீட்டுக் குழுவினால் உருவாக்கப்பட்ட முதலீட்டு மற்றும் வர்த்தக வழிகாட்டல்களுடன் கண்டிப்பாக இணங்கிச் செல்லும்விதத்தில் சந்தைப் பங்கேற்பாளர்களுடன் மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்களை மீள ஆரம்பிப்பதற்கும் இரண்டாந்தரச் சந்தையிலிருந்து அரசாங்கப் பிணையங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கும் அனுமதியளித்தது.

3.2 ஊழியர் சேம நிதியத்தின் முதலீட்டுத் தீர்மானம் எடுக்கும் செயன்முறையின் நம்பகத்தன்மையினை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

• ஊழியர் சேம நிதியத்தின் முதலீட்டுத் தீர்மானங்கள் மேற்கொள்ளும செயன்முறையின் உள்ளகக்கட்டுப்பாட்டினை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு ஊழியர் சேம நிதியத்திற்குப் பொறுப்பான துணை ஆளுநரின் தலைமையிலான முதலீட்டுக் குழு 2016 நவெம்பரிலிருந்து நாளாந்தக் கூட்டங்களைத் தொடங்கியது.

• 2016 நவெம்பர் தொடக்கம் அனைத்து முதலீடுகளும் முதலீட்டுக் குழுவின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை, அரசாங்கப் பிணையங்களுக்கு வெளியிலான முதலீடுகளுக்காக நாணயச் சபையின் முன்னனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது.

3.3 உள்ளகக் கட்டுப்பாட்டு கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

• ஊழியர் சேம நிதியத்தின் முதலீட்டுச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பாண்மையும் முதலீடு மற்றும் வர்த்தக வழிகாட்டியினை திருத்துதல் உள்ளடங்கலாக முதலீடுகளுக்கான இடர்நேர்வு சாராமாரிகளை உருவாக்குவதற்கான பொறுப்பாண்மையும் இடர்நேர்வு முகாமைத்துவத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

• பௌதீக ரீதியான அணுகுவழிக் கட்டுப்பாடுகளும் குரல் ஒலிப்பதிவுகளும் முன்னரங்க அலுவலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவை மத்திய, பின்னரங்கு மற்றும் நிதிய முகாமைத்துவத்தில் ஈடுபடுகின்ற மூத்த முகாமையாளர்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது. சிசிடிவி கமராக்கள் பொருத்தும் செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

• அரசாங்கப் பிணையங்களின் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுவதில் இலத்திரனியல் வர்த்தகத் தளங்களை (புளூம்பேர்க்) பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள அதேவேளை, புளூம்பேர்க் தரவுத்தளங்கள் நிதிய முகாமைத்துவப் பிரிவின் ஏனைய பிரிவுகளுக்கும் கிடைக்கப்பெறச் செய்யப்பட்டன.

• நிறுவனசார் கொள்ளளவினை கட்டியெழுப்பும் செயன்முறையினை அதிகரிக்கும் நோக்குடன் மூலதனச் சந்தை அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து தொழில்நுட்ப உதவியினை ஊழியர் சேம நிதிய திணைக்களம் தொடர்ந்தும் பெற்றுக்கொள்கின்றது. இதற்குமேலதிகமாக ஊழியர் சேம நிதியத் திணைக்களமானது அதன் ஒட்டுமொத்த முதலீட்டு உபாயத்தினை மேம்படுத்துவதற்கு உலக வங்கியிடமிருந்து உதவியினைப் பெறுகின்றது.

• முதலீடுகளுடன் தொடர்புபான முதலீட்டுக்குழுக் கூட்டங்களின் கலந்துரையாடல்கள் 2017 சனவரி தொடக்கம் ஒலிப் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.

• நிதிய முகாமைத்துவப் பிரிவில் மேலதிக அலுவலர் பணிக்கமர்த்தப்பட்டதுடன் நிதிய முகாமைத்துவப் பிரிவானது அணுகுவழிக் கட்டுப்பாட்டு முறைமையுடன் மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டது.

4. பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் லிமிடெட் மற்றும் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி மீது எடுக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள்

4.1 பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் லிமிடெட்

• பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் லிமிடெட்டின் தலத்திலான பரீட்சிப்பு அறிக்கை மற்றும் ஏனைய விசாரணைகளில் இனங்காணப்பட்ட மேற்பார்வைக் கரிசனைகள் மற்றும் இணங்கியொழுகாமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நாணயச் சபையானது முதனிலை மற்றும் இரண்டாந்தரச் சந்தையில் அதன் தொழிற்பாட்டு மட்டங்களை நிறுத்தி மற்றும் நிதி பாராதீனப்படுத்தலை தடைசெய்கின்ற பணிப்புரைகளை 2016.11.07 நாளன்று பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் லிமிடெட்டிற்கு விடுத்தது. தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு காலத்திற்குக் காலம் மேலதிகப் பணிப்புரைகள் வழங்கப்பட்டு தற்பொழுது அவர்களது செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் லிமிடெட்டானது இலங்கை மத்திய வங்கியின் முன்னனுமதியின்றி சொத்துக்களை விற்பனை செய்தல், இலாபங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் ஆகியவற்றிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. இப்பணிப்புரைகள் 2018 யூலை 06 வரை நடைமுறையிலிருக்கும். இலங்கை மத்திய வங்கியானது இலங்கை மத்திய வங்கியுடன் பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் லிமிடெட் வைத்துள்ள சொத்துகளை முடக்கியுள்ளதுடன் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் மேற்பார்வை வரம்பின்கீழ் வருகின்ற பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் லிமிடெட்டின் சொத்துகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

4.2 பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி

• பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி அரசாங்கப் பிணையங்கள் சந்தையில் கணிசமமான சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என்பது முதற்தோற்றத்தில் தோன்றிய கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபட்டுள்ளது என்பதனை வெளிப்படுத்திய விசாரணைகளைத் தொடர்ந்து நாணயச் சபையானது உரிய செயன்முறைகளின் பின்னர் 2017.08.14 நாளன்று முதன்மை வணிகரெருவராக பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் வர்த்தகம் மற்றும் செயற்பாடுகளை 2017.08.15 முதல் நடைமுறைக்குவரும்விதத்தில் ஆறு மாதகாலத்திற்கு இடைநிறுத்தியது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

5. ஒழுக்காற்று நடவடிக்கைமுறைகள்

• மத்திய வங்கியினால் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைகள் மற்றும் புலனாய்வுகளைத் தொடர்ந்து, அத்தகைய விசாரணைகள் மற்றும் புலனாய்வுகளின் கண்டறியப்பட்டவைகளினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் கைநூலின் வகைப்படுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் மேன்முறையீட்டு விதிகளுக்கிசைவாக சில அலுவலர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் நான்கு அலுவலர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

6. ஏனைய நடவடிக்கைகள்

• மத்திய வங்கியானது நாணயச் சபையின் உறுப்பினர்களுக்கும் பொதுவாக அலுவலர்களுக்கும் நடத்தைக் கோவைகளையும், குறிப்பாக, ஊழியர் சேம நிதியத்திலும் பொதுப்படுகடன் திணைக்களத்திலுமுள்ள ஊழியர்களுக்கான நடத்தைக் கோவைகளையும் ஏற்கனவே வரைந்துள்ளது. நாணயச் சபையின் அனுமதி கிடைத்தவுடன் இவை அமுல்படுத்தப்படும்.

• பின்தொடர் நடவடிக்கைக்காகவும் மற்றும் கடைப்பிடித்தலுக்காகவும் பரந்த நடவடிக்கையொன்றாக மத்திய வங்கியானது சட்ட மற்றும் இணங்குவிப்புத் திணைக்களத்தினை வலுப்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் 2018 சனவரி 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும்விதத்தில் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தினை நிறுவியுள்ளது.

• நாணயச் சபைக்கு சுயாதீன உத்தரவாதமொன்றினை வழங்கும்விதத்தில் இதன் காத்திரமான தன்மையினை அதிகரிக்கும்பொருட்டு அதன் நோக்கெல்லையினை மேலும் விரிவுபடுத்தி அதன் செயன்முறைகளை வலுப்படுத்தும் நோக்குடன் மத்திய வங்கியின் உள்ளகக் கணக்காய்வுத் தொழிற்பாட்டினை நாணயச் சபை மதிப்பீடு செய்யும்.

7. மத்திய வங்கியானது 2008 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியில் திறைசேரி  முறிகள் வழங்குதல் மற்றும் 2016 மாச்சில் இடம்பெற்ற திறைசேரி முறி ஏலங்கள் தொடர்பில் தடயம்சார்ந்த கணக்காய்வுகளைக் கொண்டு நடத்துவதற்கான வழிமுறைகளை ஆரம்பிக்கும்.

Published Date: 

Thursday, January 11, 2018