இலங்கையில் மெய்நிகர் நாணயங்களின் (Virtual Currency) பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வு

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு சந்தைகளில் மெய்நிகர் நாணய பயன்பாட்டுடன் தொடர்புடைய அண்மைய அபிவிருத்திகளையும் அதேபோன்று, மெய்நிகர் நாணயத்துடன் தொடர்புடைய விசாரணைகளையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு பின்வருவனவற்றை தெரிவிக்க விரும்புகின்றது.

மெய்நிகர் நாணயங்கள், தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் பெருமளவில் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டிஜிட்டல் ரீதியான பெறுமதியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் இலத்திரனியல் ரீதியாக வர்த்தகப்படுத்தப்படக் கூடியவையாகும்.

2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் ஊடக அறிக்கைகளூடாக இலங்கை மத்திய வங்கியால் முன்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, மறைகுறிநாணயங்கள் (Cryptocurrencies) உட்பட மெய்நிகர் நாணயங்களை ஈடுபடுத்துகின்ற திட்டங்களை தொழிற்படுத்துவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது கம்பனிக்கோ ஏதேனும் உரிமத்தை அல்லது அதிகாரத்தை இலங்கை மத்திய வங்கி வழங்கவில்லை என்பதுடன் ஏதேனும் ஆரம்ப குற்றி வழங்கல் (Initial Coin Offerings), வார்த்தல் தொழிற்பாடுகள் (Mining Operations) அல்லது மெய்நிகர் நாணய பரிமாற்றல்கள் (Virtual Currency Exchange) என்பவற்றுக்கு  அதிகாரம் வழங்கப்படவில்லை. மேலும், இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணித் திணைக்களத்தால் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 2021ஆம் ஆண்டின் 03ஆம் இலக்கப் பணிப்புரைகளுக்கமைவாக, பற்று அட்டைகள் (Debit Cards) மற்றும் கொடுகடன் அட்டைகள் (Credit Cards) போன்ற இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகள் (Electronic Fund Transfer Cards)> மெய்நிகர் நாணயக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆகவே, மெய்நிகர் நாணயங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிதியியல் சாதனங்களாக (unregulated financial instruments) கருத்திற்கொள்ளப்படுவதுடன் இலங்கையில் அவற்றின் பயன்பாடு தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்பார்வையையும் பாதுகாப்பையும் கொண்டிருக்கவில்லை.

ஆகையால், மெய்நிகர் நாணயங்களின் முதலீடுகள் மூலம் பயன்பாட்டாளர்களுக்கு ஏற்படக்கூடிய கணிசமான நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய இடர்நேர்வுகள் அதேபோன்று வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது. இணையதளம் அதேபோன்று வேறு ஊடக வடிவங்கள் ஊடாக வழங்கப்படும் பல்வேறு வகையான மெய்நிகர் நாணய திட்டங்களுக்கு இரையாக வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.

Published Date: 

Tuesday, July 12, 2022