வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 ஏப்பிறல்

2022 ஏப்பிறலில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் இறக்குமதிச் செலவினம் குறைவடைந்த அதேவேளையில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்து காணப்பட்டது. சுங்கத்திலிருந்தான தற்காலிகமான தரவுகளின்படி, இறக்குமதியில் ஏற்பட்ட இக் குறைவானது 2022 மேயில் வேகத்தை கூட்டியுள்ளது. இதன் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் குறிப்பிடத்தக்க சுருக்கமொன்றினைப் பதிவுசெய்துள்ளது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஏப்பிறலில் மிதமான செயலாற்றமொன்றினைக் காண்பித்தன. இருப்பினும், 2022 மேயில் தொழிலாளர் பணவனுப்பல்கள் மீளெழுச்சியடைந்து வெளிநாட்டு நடைமுறைக்கணக்கின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளித்தது. அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 ஏப்பிறல் மாத காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தொடர்ந்து காணப்பட்ட அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு, முறைசார சந்தை நடவடிக்கைகளைக் குறைக்கவும் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தை செலாவணி வீதங்களுக்கிடையிலான இடைவெளியைச் சுருக்கவும் உதவிய திறந்த கணக்குகள் மற்றும் சரக்குக் கொடுப்பனவுகள் முறைமைகள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய வங்கி 2022 மேயில் அறிமுகப்படுத்தியது. மேலும், மத்திய வங்கியானது அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் 2022 மே 13 முதல் வங்கிகளுக்கிடையிலான சந்தையில் முன்னைய நாளில் நிர்ணயிக்கப்பட்ட செலாவணி வீதத்தின் அடிப்படையில் தளம்பல் தன்மையின் அளவு (அனுமதிக்கக்கூடிய இரு பக்க மாறுபாட்டு எல்லையுடன்) குறித்த தினசரி வழிகாட்டலை வழங்கத் தொடங்கியது. இப்புதிய ஏற்பாடுகளின் நடைமுறைப்படுத்தலானது இதுவரையிலான செலாவணி வீத நிர்ணயத்தில் பாரியளவிலான உறுதிப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Sunday, June 12, 2022