இலங்கை மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2021இன் முக்கிய பண்புகளும் 2022இற்கான வாய்ப்புக்களும்” இனை இன்று நிகழ்நிலையில் வெளியிட்டது. இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தின் வாயிலாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
“அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகளில்” பிரதிபலிக்கப்பட்டவாறு 2021இல் இலங்கைப் பொருளாதாரச் செயலாற்றத்தின் பொதுநோக்கொன்று கீழே தரப்பட்டுள்ளது:
இலங்கைப் பொருளாதாரம் 2020இன் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் தூண்டப்பட்ட சுருக்கத்திலிருந்து வலுவாக மீளெழுச்சியடைந்திருக்கின்றது. பொருளாதாரத்தின் முக்கிய துறைகளின் பரந்துபட்ட மீட்சியினைப் பதிவுசெய்து உண்மைப் பொருளாதாரம் 2021இன் முதலரைப்பகுதியில் 8.0 சதவீதத்தினால் (ஆண்டுக்காண்டு) வளர்ச்சியடைந்திருந்தது. இம்மீட்சியானது அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் பரந்தளவிலான வியாபாரங்களிற்கும் தனிநபர்களிற்கும் வழங்கப்பட்ட அசாதாரணமான கொள்கைத் தூண்டல்கள், நாடளாவிய ரீதியிலான தடுப்பூசி நிகழ்ச்சித் திட்டத்திற்கிசைவாக தெரிவு செய்யப்பட்ட நகர்வு மீதான கட்டுப்பாடுகளின் படிப்படியான தளர்த்தல் மற்றும் உலகளாவிய நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்புதல் போன்றவற்றினால் ஆதரவளிக்கப்பட்டுள்ளது.