• The Central Bank of Sri Lanka tightens its Monetary Policy Stance

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 ஓகத்து 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும், ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 5.00 சதவீதத்திற்கு 6.00 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, 2021 செத்தெம்பர் 01ஆம் திகதியன்று தொடங்குகின்ற ஒதுக்குப் பேணுதல் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2.0 சதவீதப் புள்ளிகளால் 4.00 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கும் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. மேம்பட்ட வளர்ச்சி எதிர்பார்க்கைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறை மீதான சமமின்மையினை கையாளுவதற்கும்  நடுத்தர காலத்தில் எவையேனும் மிதமிஞ்சிய பணவீக்க அழுத்தங்கள் தோற்றுவிக்கப்படுவது தொடர்பிலான முன்னெச்சரிக்கை வழிமுறை நோக்கிலும் இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

  • Licensed Banks have not been asked to “Devalue” the Sri Lanka Rupee

    உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளன என்ற செய்திகள் பரப்பப்பட்டுவருவதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது.

    அத்தகைய செய்திகள் எவ்விதத்திலேனும் அடிப்படையற்றவை என பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுவதுடன் செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதன் மீதான இலங்கை மத்திய வங்கியின் நிலைக்கு அல்லது தொழிற்பாட்டுரீதியான ஏற்பாடுகளுக்கு இலங்கை மத்திய வங்கி எந்தவித மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை.

  • Sri Lanka Purchasing Managers’ Index - July 2021

    தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 யூலையில் விரிவடைந்தன.

    தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2021 யூனுடன் ஒப்பிடுகையில் 7.4 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 57.8 சுட்டெண் பெறுமதியொன்றினை பதிவுசெய்து 2021 யூலையில் மேலும் அதிகரித்தது. இதற்கு, புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளில் இருப்பு துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் பிரதான காரணமாக அமைந்தது.

    பணி நடவடிக்கைகளின் மேலும் விரிவாக்கத்தினை சமிக்ஞைப்படுத்தி,  பணிகள் கொ.மு.சுட்டெண் 2021 யூலையில் 55.7 இனைக் கொண்ட சுட்டெண் பெறுமதிக்கு மேலும் அதிகரித்தது. இவ்வதிகரிப்பானது புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கை, நிலுவையிலுள்ள பணி அத்துடன் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பனவற்றில் காணப்பட்ட அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது.

  • External Sector Performance - June 2021

    2021 யூனில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ந்து நான்காவது மாதமாக விரிவடைந்து காணப்படுகிறது. 2021 யூனில் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் இரண்டும் 2020 யூனுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவிற்கு உயர்வாகக் காணப்பட்டன. ஆண்டின் முதலரைப்பகுதியைப் பரிசீலனையில் கொள்கையில் ஏற்றுமதிகள் ஆரோக்கியமான வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்த போதும் இறக்குமதிச் செலவினம் உயர்ந்த வேகத்தில் அதிகரித்தது. 2021 யூனில் தொழிலாளர் பணவனுப்பல்கள் ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் குறைந்தளவு மட்டத்தில் காணப்பட்டன. நிதியியல் கணக்கில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆகிய இரண்டிலும் வெளிநாட்டு முதலீடு இம்மாத காலப்பகுதியில் சிறிதளவு தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைத் தொடர்ந்தும் பதிவுசெய்தது. இலங்கை ரூபா 2021 யூனில் பெருமளவிற்கு உறுதியாகக் காணப்பட்டது.

  • Closure of Public Relations Counters of Employees’ Provident Fund (EPF) Department of the Central Bank of Sri Lanka

    லொயிட்ஸ் கட்டடம், சேர் பாரன் ஜெயதிலக மாவத்தை, கொழும்பு – 01 இல் அமைந்துள்ள ஊழியர் சேமலாப நிதியத்தின் பொதுமக்கள் தொடர்புகள் மற்றும் விசாரணைகள் கருமபீடங்கள் பிரிவில் பல ஊழியர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பதனால் இப்பிரிவு 2021.08.20 வரை மூடப்படுமென ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கும் தொழில்தருநர்களுக்கும்  இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

    ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் ஏனைய அனைத்து பணிகளும் தடையின்றி தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். மேலதிக தகவல்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விபரங்களைப் பார்க்கவும் அல்லது www.epf.lk என்ற எமது இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.

  • Streamlining Complaint Handling Procedure and Introducing a Hotline for Inquiries from the Central Bank of Sri Lanka

    நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களமானது திருத்தப்பட்டவாறான 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் கீழ் நிறுவப்பட்டு இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் சேவை வழங்குநர்களுக்கெதிரான முறைப்பாடுகளைக் கையாளும் ஒரு முக்கிய தொடர்புப் புள்ளியாகத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.

    நிதியியல் வாடிக்கையாளர் திணைக்களமானது இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் சேவை வழங்குநர்களுக்கெதிராக முறைப்பாடொன்றினைச் சமர்ப்பிக்க விரும்பும் நிதியியல் வாடிக்கையாளர்களிற்காக முறைப்பாடு சமர்ப்பித்தல் படிவம்  ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, முறைப்பாடு கையாளல் செயன்முறையினை வினைத்திறனாக ஒழுங்குமுறைப்படுத்துவதுடன் நிதியியல் வாடிக்கையாளர்கள் முறைப்பாடு சமர்ப்பித்தல் படிவத்தினைப் பயன்படுத்தி செம்மையான தகவல்களுடனான தெளிவான மற்றும் சுருக்கமான முறைப்பாட்டினை சமர்ப்பிக்கும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர். முறைப்பாடு சமர்ப்பித்தல் படிவத்தின் மென் பிரதி தரவிறக்கம் செய்வதற்காக இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் கிடைக்கும்.

  • Land Valuation Indicator - First Half of 2021

    கொழும்பு மாவட்டத்தின் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2021இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 155.1இற்கு அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் 9.5இனைக் கொண்ட ஆண்டு அதிகரிப்பும் 6.8இனைக் கொண்ட அரையாண்டு அதிகரிப்பும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காணி விலைமதிப்பீட்டு அதிகரிப்புக்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியடையும் போக்கினை திரும்பலடையச் செய்துள்ளன.

    காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிடக் காணி விலைமதிப்பீட்டு குறிகாட்டி, வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி ஆகிய அனைத்தும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி 10.1 சதவீதம் கொண்ட உயர்வான ஆண்டு அதிகரிப்பினையும் பதிவுசெய்ததுடன் அதனைத் தொடர்ந்து வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிக்காட்டியும் வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் காணப்பட்டன.

  • CCPI based Inflation increased to 5.7 per cent in July 2021

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 யூனின் 5.2 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவல்லா வகைகளின் பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதன் பின்னர், உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 11.3 சதவீதத்திலிருந்து 2021 யூலை 11.0 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 2.5 சதவீதத்திலிருந்து 2021 யூலை 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 யூனின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

  • NCPI based Inflation remained unchanged in June 2021

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூனில் 6.1 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. இதற்கு, 2020 யூனில் நிலவிய உயர்வான தள புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மேயின் 10.3 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 9.8 சதவீதத்திற்கு குறைவடைந்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மேயின் 2.5 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2021 யூனில் 5.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. 

  • Imposition of Administrative Penalties by the Financial Intelligence Unit (FIU) to Enforce Compliance on Financial Institutions during the Second Quarter of 2021

    2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில்கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.

    அதற்கமைய, பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநராக நிதியியல் உளவறிதல் பிரிவானது நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு 2021 ஏப்பிறல் 01 தொடக்கம் 2021 யூன் 30 வரையான காலப்பகுதிக்காக மொத்தமாக ரூ.3.0 மில்லியன் தொகையுடைய தண்டங்களை விதித்துள்ளது. தண்டங்களாகச் சேகரிக்கப்பட்ட பணம், திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டன.

Pages