கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 ஓகத்தின் 6.0 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2020 செத்தெம்பரில் நிலவிய உயர் தள புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தின் 11.5 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தின் 3.5 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஓகத்தின் 4.3 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.









இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திரு . அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகர் அதி மேதகு தாரிக் முஹம்மது அரிபுல் இஸ்லாம் அவர்களை இன்று, (செத்தெம்பர் 24) இலங்கை மத்திய வங்கியில் சந்தித்திருந்தார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வங்காளதேச ஏற்றுமதிகளுக்காக கொழும்பு துறைமுகத்தின் உச்ச பயன்பாடு பற்றியும் இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக திரு. அஜித் நிவாட் கப்ரால் 2021 செத்தெம்பர் 15, புதன்கிழமை அன்று கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டது. அதற்கமைய, திரு. கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகத் தொழிற்படுவார்.