மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2020இன் முக்கிய பண்புகளும் 2021 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி,“அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2020இன் முக்கிய பண்புகளும் 2021 இற்கான வாய்ப்புக்களும்”என்பதனை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுரம் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் மூன்று மொழிகளிலும் தரவிறக்கப்படலாம்.*

பொருளாதார அபிவிருத்திகளின் கிரமமான இற்றைப்படுத்ததலுக்கு மேலதிகமாக, “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகளானது” 2020 ஒத்தோபர் நடுப்பகுதி வரையில் கிடைக்கத்தக்கதாகவுள்ள தகவல்களை கருத்திற்கொண்டு 2020 ஏப்பிறலில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நடுத்தர கால பேரண்டப்பொருளாதார எறிவுகளுக்கான இற்றைப்படுத்தலினையும் வெளிப்படுத்துகின்றது. கொவிட்-19 உலகளாவிய நோய்ப்பரவலினால் ஏற்பட்ட பன்மடங்கு சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் நிச்சயமற்றதன்மைக்கிடையில் பொருளாதாரமானது பயணிக்கின்ற முக்கியமானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வருடத்தின் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரசுரத்தின்படி, கடந்த ஆண்டுகளில் உள்ளார்ந்தளவினை விடத் தாழ்ந்த வளர்ச்சியினை அனுபவித்த இலங்கைப் பொருளாதாரம் கொவிட்-19 நோய்ப்பரவலிற்கு மத்தியில் புதுப்பிக்கப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்தது. கொவிட்-19 இன் உள்நாட்டிலான பரவல் மற்றும் முடக்குதல் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டமை, உலகளாவிய பொருளாதாரச் செயற்பாட்டின் மெதுவடைதல் மற்றும் நாட்டில் பாதகமான வானிலை நிலைமைகளின் தாக்கம் என்பவற்றின் இணைந்த தாக்கங்களையும் பிரதிபலித்து  தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீட்டிற்கமைய பொருளாதாரம் 2020இன் முதற்காலாண்டில் ஆண்டிற்காண்டு அடிப்படையில் 1.6 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. இடையூறுகளின் உண்மைத்தன்மையினையும் உலகளாவிய நோய்ப்பரவலின் தொடக்கத்துடன் இவ்வாண்டில் தோற்றம்பெற்றுள்ள புதிய செயற்பாடுகளினையும் தொழில்புரிவதற்கான புதுமையான வழிகளையும் கைப்பற்றிக்கொள்வதிலுள்ள சிக்கல்களினை மேற்கோள்காட்டி தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் இரண்டாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், 2020 ஒத்தோபரில் கொவிட்-19 நோய்த்தொற்றின் புத்துயிர்ப்பிற்கும் அதன் விளைவான கட்டுப்படுத்தல் வழிமுறைகளுக்கு முன்னர் மிக அண்மிய மாதங்களில் பொருளாதாரச் செயற்பாட்டின் பல விடயப்பரப்புகளில் வலுவானதொரு மீட்சியினை துரிதமாகக் கிடைக்கக் கூடியதாகவுள்ள தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பொருளாதாரச் செயற்பாட்டின் மீட்சியானது அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் ஒன்றிணைந்த முயற்சிகளினால் ஆதரவளிக்கப்பட்டது. உலகளாவிய நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிற்கும் தனிப்பட்டவர்களுக்கும் ஆதரவளிப்பதற்காக  நிவாரண வழிமுறைகளும் பாரியளவிலான கொள்கைத் தூண்டுதல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய வங்கியானது உலகளாவிய நோய்ப்பரவலின் காரணத்தினாலான முன்னெப்போதுமில்லாத சூழ்நிலையில் பன்மடங்கான வட்டி வீதங்களின் மற்றும் நியதி ஒதுக்கு விகிதத்தின் குறைப்பும் அதன் மூலம் சந்தைக்குப் போதியளவு திரவத்தன்மையினை உட்புகுத்தல் மற்றும் கணிசமானளவில் கடன்பாட்டுச் செலவினத்தைக் குறைத்தல் உள்ளடங்கலாக நாணயத் தளர்த்தல் வழிமுறைகளினொரு தொடரினை முன்னெடுத்தது. உலகளாவிய நோய்ப்பரவலின் பாதகமான தாக்கங்கள், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளின் தேவைகளினைப் பூர்த்தி செய்வதற்கு சலுகைக் கொடுகடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவதனையும் அதனுடன் உலகளாவிய நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட  வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான படுகடன் கால தாமதத்தையும் தூண்டின. இத்தகைய வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தி தனியார் துறைக்கான கொடுகடன் முன்னைய மாதங்களில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலை மறுதலித்து 2020 ஓகத்து மற்றும் செத்தெம்பரில் ஒரு கணிசமான முன்னேற்றத்தினைக் காட்டியது. மத்திய வங்கியானது முதலாந்தர ஏலங்களில் திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான நிதிகளை வழங்கியது. அரச துறைக்கான அதிகரித்த கொடுகடன் பாய்ச்சல்கள் 2020 செத்தெம்பரில் முடிவடைகின்ற ஒன்பது மாதங்களில் விரிந்த பண நிரம்பலின் வளர்ச்சி விரைவடைவதற்குப் பிரதானமாகப் பங்களிப்புச் செய்தது. இதேவேளை, நிதியியல் முறைமை உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார மெதுவடைதலிலிருந்து  எழுகின்ற பாதகமான தாக்கத்திற்கு ஈடுகொடுத்துள்ள அதேவேளையில் பொருளாதாரத்தின் மீளெழுச்சிக்கு ஆதவளித்தது.

அதேநேரத்தில் உலகளாவிய நோய்ப்பரவலின் ஆரம்பக் கட்டங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் துறை வர்த்தக நிலுவையினாலானதொரு முன்னேற்றம், தொழிலாளர் பணவனுப்பல்களின் மீளெழுச்சி, உறுதியானதொரு செலாவணி வீதம் மற்றும் அலுவல்சார் ஒதுக்குகளின் போதியளவானதொரு மட்டம் போன்றவற்றுடன் ஒரு குறிப்பிடத்தக்க மீளுருவாக்கத்தினை குறித்துநின்றது. வெளிநாட்டுத் துறையின் உறுதிப்பாடு அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட வெளிப்பாய்ச்சல்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அத்துடன் தாழ்ந்த உலகளாவிய பெற்றோலிய விலைகளினால் ஆதரவளிக்கப்பட்டது. அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கையுடன் கூடிய  வழிமுறைகள் மற்றும் 2020 யூனிலிருந்து தொழிலாளர் பணவனுப்பல்களில் எதிர்பாராத மீளெழுச்சி என்பவை நீடித்த உலகளாவிய போக்குவரத்துக் கட்டுப்பாடுகளினூடாக சுற்றுலாவிலிருந்தான வருவாய்களின் கணிசமான குறைவின் தாக்கத்தினை பகுதியளவில் தணிப்பதில் துணைபுரிந்தன. உலகளாவிய நோய்ப்பரவல் எல்லை கடந்த நிதியியல் பாய்ச்சல்களினைப் பாதித்ததனால் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு மந்தமான செயலாற்றத்தினை அனுபவித்தது. எனினும், உள்நாட்டு வெளிநாட்;டுச் செலாவணிச் சந்தையில் வெளிநாட்டு செலாவணியின் தேறிய கொள்வனவுகள் உள்ளடங்கலாக அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்குமான உட்பாய்ச்சல்களினால் நன்மையடைந்து மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் போதுமான மட்டங்களில் தொடர்ந்துமிருந்தன.

பாதகமான ஊகம் மற்றும் நாட்டிற்கான தரமிடலின் தரமிறக்குதலுக்கு மத்தியிலும் 2020 ஒத்தோபர் தொடக்கத்தில் முதிர்வடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறியின் தீர்ப்பனவு உள்ளடங்கலாக அரசாங்கம் அதன் படுகடன் பணிக்கொடுப்பனவுக் கடப்பாடுகளைப்  பூர்த்திசெய்தது. இதேவேளை, பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அரசாங்கத்தின் அரசிறையின் வீழ்ச்சியுடன் இறைத்துறையின் செயலாற்றம் கணிசமாகப் பாதிக்கப்பட்ட அதேவேளையில் கடந்த ஆண்டிலிருந்து முற்கொணரப்பட்ட பாரியளவிலான வெளிநின்ற பட்டியல்கள் அரசாங்கத்தின் செலவின முகாமைத்துவத்திற்கு சுமையாகவிருந்தன. நடுத்தர காலத்தில் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கும்  எதிர்வரும் காலத்தில் பொதுப் படுகடனின் நீடித்து நிலைத்திருக்கும்தன்மைக்கும் இன்றியமையாததாகவுள்ளன.

இதே வேளையில் உணவு விலைகளின் உயர்வினால் தற்காலிக அதிகரிப்பு அவதானிக்கப்பட்ட போதிலும் மந்தமான கேள்வி நிலைமைகளும் நன்கு உறுதி நிலைப்படுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புகளும் 2020 இன் இதுவரையான காலப்பகுதியில் இலக்கிடப்பட்ட வீச்சான 4-6 சதவீதத்திற்குள் பணவீக்கத்தினைப் பேணுவதில் துணைபுரிந்தன. மத்திய வங்கியின் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புக்குள் பொருத்தமான கொள்கை வழிமுறைகளுடன் பணவீக்கமானது நடுத்தர காலத்தில் இந்த வீச்சிக்கிடையில் பேணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இதேவேளை, பொருளாதார வளர்ச்சி 2021இல் மீளெழுச்சியடையுமெனவும் அரசாங்கத்தின்  வளர்ச்சியை நோக்கிய கொள்கைகளினால் ஆதரவளிக்கப்பட்டு நடுத்தரகாலத்தில் மேல்நோக்கிய பாதையில் பேணப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கான கொள்கைகளும் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையின் மீதான  அழுத்தத்தினை நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அடிப்படையில் தணிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், கொவிட் - 19 இனை உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் வெற்றிகரமாக மட்டுப்படுத்துவது எதிர்வரும் காலத்தில் உள்நாட்டுப் பொருளாதார மீட்சியினதும் மீளெழுச்சியினதும் வேகத்தினையும் பிரமாணத்தினையும் தீர்மானிப்பதில் தொடர்ந்தும் பிரதானமானதாகவுள்ளது.

* https://www.cbsl.gov.lk/ta/வெளியீடுகள்/பொருளாதார-மற்றும்-நிதியியல்-அறிக்கை/அண்மைய-பொருளாதார-அபிவிருத்திகள்/அண்மைய-பொருளாதார-அபிவிருத்திகள்-2020

Published Date: 

Saturday, October 31, 2020