மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி, “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை இன்றைய தினம் கணனிவழி அதேநேர முறைமையில் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுரம் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரவிறக்கப்படலாம் . 

மேற்குறிப்பிட்ட வெளியீட்டில் பிரதிபலிக்கப்பட்டவாறு 2019இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பான சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கசிவுத் தாக்கத்தினை உள்ளடக்கிய உள்நாட்டுப் பக்கத்திலிருந்து எழுந்த சவால்களுக்கு மத்தியில் ஆண்டின் முதலரைப் பகுதியில் மெதுவடைந்திருந்தது. இதன்படி, உண்மை நியதிகளில் பொருளாதாரம் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் 3.9 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதலரைப் பகுதியில் 2.6 சதவீதமான மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைந்திருந்தது. மந்தமான பொருளாதார வளர்ச்சியுடன் இசைந்து செல்லும் வகையில் தொழிலின்மை வீதமும் 2019இன் முதலரைப்பகுதியில் அதிகரித்திருந்தது.

நிரம்பல்பக்க அபிவிருத்திகளின் காரணமாக இடைக்கிடையிலான தளம்பல்களுடன் முதன்மைப் பணவீக்கம் ஆண்டுகாலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட வீச்சினுள் தொடர்ந்துமிருந்தது. வீட்டு வாடகையின் ஒரே நேரத்திலான திருத்தத்தின் முக்கிய காரணத்தினால் மையப் பணவீக்கம் 2019 சனவரியில் உயர்வடைந்திருந்ததுடன் இத்திருத்தத்தின் தாக்கம் 2020 சனவரியில் இல்லாதொழியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேம்படுத்தப்பட்ட நாணயக்கொள்கை கட்டமைப்பின் கீழ் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிப்படுத்துவதனை இலக்காகக் கொண்டு ஒரு முன்னோக்கிய அடிப்படையில் மத்திய வங்கி தொடர்ந்தும் நாணயக்கொள்கையை நடாத்தியிருந்த அதேவேளை முழுமையான நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலுடன் நிலைமாறுவதனை நோக்கி விரைவாக முன்னேறிவருகின்றது. நன்கு உறுதி நிலைப்படுத்தப்பட்ட பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகளின் பின்னணியில் மந்தமான பொருளாதார வளர்ச்சி, நாணய மற்றும் கொடுகடன் விரிவாக்கத்தின் தொடர்ச்சியான மெதுவடைதல் மற்றும் உலகளாவிய நாணயக்கொள்கைத் தளர்த்தலைக் கருத்திற்கொண்டு மத்திய வங்கி 2019இல் தளர்த்தப்பட்டதொரு நாணயக்கொள்கை நிலைப்பாட்டினைப் பின்பற்றியிருந்தது. எனினும் நாணயக்கொள்கை மீதான முன்னோக்கிய வழிகாட்டல் அடுத்துவரவுள்ள சம்பள அதிகரிப்பினால் நடுநிலைப்படுத்தப்படல் வேண்டும். 

நாணயத் தளர்த்தலுக்கு மாறாக சந்தை வட்டிவீதங்கள் பெயரளவு மற்றும் உண்மை நியதிகளில் தொடர்ந்தும் உயர்வாகவிருந்து நாணயக்கொள்கைப் பரிமாற்றத்தினை விரைவுபடுத்துவதற்காக 2019 ஏப்பிறலில் நிதியியல் நிறுவனங்களின் வைப்பு வட்டிவீதங்கள் மீது மத்திய வங்கி உச்ச எல்லையினை விதிப்பதற்கு வழிகோலியது. வைப்பு வட்டிவீதங்களும் நிதியியல் செலவும் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் பொருளாதார செயற்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்காக செத்தெம்பரில் உரிமம்பெற்ற வங்கிகளின் வைப்பு வட்டி வீதங்கள் மீதான உச்ச எல்லைகளை நீக்கியிருந்ததுடன் கடன்வழங்கல் வீதங்கள் மீது உச்ச எல்லையை மத்திய வங்கி விதித்திருந்தது. இதேவேளை, நிதியியல் துறை தொடர்ந்தும் உறுதியாகவிருந்த அதேவேளையில் ஒரு சில இடர்பாட்டு நிதிக்கம்பனிகளிலுள்ள பிரச்சனைகளை தீர்க்கமாக தீர்ப்பதற்கான வழிமுறைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து சுற்றுலாத்துறையின் பின்னடைவிற்கு மத்தியிலும் வெளிநாட்டுத்துறை தொடர்ந்தும் தாக்குபிடிக்கும் தன்மையுடன் இருந்தது. தாழ்ந்த இறக்குமதி செலவினம் மற்றும் அதிகரித்த ஏற்றுமதி வருவாய்களுடன் வர்த்தகப் பற்றாக்குறை 2018இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதல் எட்டு மாதங்களில் கணிசமானளவு சுருக்கமடைந்தது. இரண்டாம் காலாண்டில் சுற்றுலா வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களின் குறிப்பிடத்தக்க மெதுவடைவு ஆண்டின் முதலரைப்பகுதியில் நடைமுறைக்கணக்கின் மிதமானதொரு பற்றாக்குறைக்கு காரணமாகவிருந்த போதிலும் வர்த்தகப்பற்றாக்குறையின் சுருக்கம் மற்றும் பணிகள் கணக்கின் மீதான ஆரோக்கியமான உட்பாய்ச்சல்கள் ஆண்டின் முதற்காலாண்டில் நடைமுறைக் கணக்கில் மிகையொன்றை பதிவுசெய்வதற்கு துணைபுரிந்தன.

இதேவேளை, குறிப்பாக நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலுடன் நிதியியல் கணக்கு முன்னேற்றமடைந்திருந்தது. இத்தகைய அபிவிருத்திகளுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018இன் இறுதியில் ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிலிருந்து 2019 செத்தெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 7.6 பில்லியனுக்கு அதிகரித்ததுடன் ஆண்டின் இதுவரை காலத்தில் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக உயர்வடைந்துள்ளது.

இறைப்பக்கத்தில் இறைத்திரட்சியை நோக்கிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மாறாக முக்கிய இறைக் குறிகாட்டிகளினால் பிரதிபலிக்கப்பட்டவாறு 2019இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகள் பலவீனமடைந்திருந்தன. தனியார் உந்து ஊர்திகளின் இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான கொள்கை வழிமுறைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து மந்தமான பொருளாதாரச் செயற்பாடு மற்றும் 2019இன் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குறித்த அரசிறை முன்மொழிவுகளை அமுல்படுத்துவதிலான தாமதம் போன்றவற்றின் தாக்கத்தினைப் பிரதிபலித்து அரசிறை வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், புதிய உண்ணாட்டரசிறைத் சட்டத்தின் அமுலாக்கத்தினால் வருமான வரிச் சேகரிப்பு மேம்பாடடைந்;தது. குறைந்த அரசிறை மற்றும் அதிகரித்த செலவினத்துடன் வரவுசெலவுத் திட்டத்தின் ஒட்டுமொத்தப் பற்றாக்குறை 2018இன் அதே காலப்பகுதியின் 3.2 சதவீதத்திலிருந்து 2019இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதமாகத் தேய்வடைந்த வேளையில் அரசாங்கத்தின் குறைச் சேமிப்பினைக் குறித்துக்காட்டி நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை விரிவடைந்தது. அரசிறைக்கும் வட்டியல்லா செலவினத்திற்குமிடையான வேறுபாடான ஆரம்ப நிலுவை 2017 மற்றும் 2018இல் பதிவுசெய்யப்பட்ட மிகையினைப் புறக்கீடு செய்து 2019இன் முதல் ஏழு மாதங்களில் பற்றாக்குறையொன்றிற்குத் திரும்பியது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட அரசாங்கத்தின் கட்டமைப்பு சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்ததுடன் ஆறாவது மீளாய்வு வெற்றிகரமாக முடிவடைந்ததும் 2019 நவெம்பர்  மாதத்தின் தொடக்கத்தில் இவ்வசதியின் கீழான ஏழாவது தொகுதி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 1 இணையத்தளத்தில் தமிழில் பெற்றுக்கொள்வதற்கு https://www.cbsl.gov.lk/ta/வெளியீடுகள்/பொருளாதார-மற்றும்-நிதியியல்-அறிக்கை/அண்மைய-பொருளாதார-அபிவிருத்திகள்/அண்மைய-பொருளாதார-அபிவிருத்திகள்-2019

முழுவடிவம்

Published Date: 

Monday, November 4, 2019