இலங்கை மத்திய வங்கியானது பொருளாதாரம் மறுமலர்ச்சி பெறுவதற்கு ஆதரவளிப்பதற்கான புதிய கொடுகடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது கடந்த சில ஆண்டுகளாக மோசமான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன் உடனடி தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் கொவிட்-19 உலகளாவிய தொற்று நோய்த் தாக்கமானது எதிர்வரும் காலங்களில் பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பன மீது தீவிரமான அழுத்தத்தினைத் தோற்றுவிக்கலாம். இப்பின்னணியில், பொருளாதாரத்திற்கு புத்துயிரளிப்பதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூன் 16ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 83ஆம் பிரிவின் கீழ் புதிய கொடுகடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 2020 மாச்சு 27ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட மீள்நிதியிடல் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்ட ரூ.27.5 பில்லியனுக்கு மேலதிகமாக மத்திய வங்கியானது பரந்தளவிலான பிணையுறுதி வாக்குறுதிகளுக்கெதிராக 1.00 சதவீதம் கொண்ட சலுகை வீதத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு நிதியளிப்புகளை வழங்கும். இதனூடாக இவ்வசதியின் சாத்தியமான பங்கீட்டினை பரந்தளவில் உறுதிசெய்கின்ற நிபந்தனையின் அடிப்படையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 4.00 சதவீதத்தில் உள்நாட்டு தொழில்களுக்கு கடன்வழங்கும். இத்திட்டமானது ஏற்கனவே காணப்படுகின்ற மீள்நிதியளித்தல் திட்டத்துடன் இணைந்து கொவிட்-19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு மொத்தமாக ரூ.150 பில்லியனை வழங்கும்.

இதற்கு மேலதிகமாக, மத்திய வங்கியினால் நிதியளிக்கபட்ட புதிய பிரத்தியேகமான கொடுகடன் மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட சலுகை வீதங்களில் கிடைக்கப்பெறச்செய்த திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சார்பில் செலுத்தவேண்டிய தொகைக்குச் சமனான அரசாங்கத்தினால் வழங்கப்படும் உத்தரவாதங்களைப் பயன்படுத்தி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளில் இருந்து கட்டடவாக்கத்துறை தொழில்முயற்சிகளுக்கு கடன்பெறுவதற்கான வசதி வழங்கப்படும். 

இப்புதிய கொடுகடன் திட்டங்களில் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் உரிய காலத்தில் உடனடியாக வழங்கப்படவுள்ளன. 

 

 

Published Date: 

Tuesday, June 16, 2020