ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின் 32ஆவது வருடாந்த மாநாடு - 2019 கொழும்பு, இலங்கை

ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின் 32ஆவது மாநாடு - 2019 இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையுடன் கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் 2019 ஒத்தோபர் 28-30 வரை நடைபெற்றது. 

ஆற்றல் வாய்ந்த கொடுகடன் துணைநிரப்பு முறைமைகளை ஊக்குவித்து விருத்தி செய்யும் குறிக்கோளுடன் ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியம் 1987இல் நிறுவப்பட்டது. ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியம் என்பது 11 நாடுகளிலிருந்து 16 உறுப்பு நிறுவனங்களை உள்ளடக்குகின்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான பாரிய ஆசிய கூட்டுறவு நிறுவனமாகும். ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின்; நடப்பு உறுப்பு நாடுகளாக இந்தியா, இந்தோனேசியா, யப்பான், கொரியா, மலேசியா, மொங்கோலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்வான் மற்றும் தாய்;லாந்து என்பன அங்கம் வகிக்கின்றன.  

ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின் 32ஆவது மாநாட்டின் தொனிப்பொருளாக 'கொடுகடன் துணைநிரப்பு: நீடித்து நிலைத்திருக்கும் அபிவிருத்தியை நோக்கி" என்பது அமைந்திருந்தது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு முக்கிய உரையினை நிகழ்த்தினார். தற்காலக் கொடுகடன் துணைநிரப்பு நோக்கெல்லை மற்றும் அபிவிருத்திகள் பற்றிக் கலந்துரையாடுவதற்கும் இனிவருகின்ற ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்களின் கூட்டு ஒன்றிய நிகழ்வுகளுக்கான வழிகாட்டலைத் தயாரிப்பதற்கும் ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்களின் கூட்டு ஒன்றிய உறுப்பு நிறுவனங்களின் தலைவர்களின் கூட்டத்துடன் மாநாடு ஆரம்பமானது.

இந்நிகழ்வு இரு நாட்களைக் கொண்ட தொழில்நுட்ப அமர்வுகளை உள்ளடக்கியிருந்ததுடன் கொடுகடன் உத்தரவாத முறைமைகளில் டிஜிட்டல் மயமாக்கத்தின் தாக்கம், கொடுகடன் துணைநிரப்பு புத்தாக்கம் மற்றும் நிலைபெறத்தக்க நிதியூடாக நிதியியல் வசதிக்குட்படுத்தல் என்பன பற்றி தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட முறையே போர்த்துக்களின் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், மற்றும் இடைநிலைக் கம்பனிகளிற்கான வேளாண்மைக் காப்புறுதி - பரஸ்பர கொடுகடன் உத்தரவாதச் சங்கத்தின் தலைவர்              திரு. ஜோஸ் பர்னாந்து பிக்கியுரெடோ, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் முனைவர் டப்ளியூ.ஏ. விஜேவர்த்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் மேலதிகப் பணிப்பாளர் முனைவர் ஆர்.ஏ. அனில் பெரேரா போன்றோரின் சிறப்புரைகளையும் உள்ளடக்கியிருந்தது.

இம்மாநாட்டில் வெளிநாட்டுப் பேராளர்கள் உட்பட 90 பங்கேற்பாளர்கள் பங்கேற்றதுடன்  கொடுகடன் துணைநிரப்பு மீதான அறிவினைப் பகிர்ந்துகொள்வதற்கு இது வாய்ப்பளித்தது. உறுப்பினர்கள் மத்தியில் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இது வழிவகுத்த அதேவேளை, எதிர்காலத்தில் நிலைபெறத்தக்க அபிவிருத்திக்கு நாடு பங்களிப்பது பற்றிய சாதகமான எண்ணப்பாங்கினையும் தோற்றுவித்தது. 

 

முழுவடிவம்

Published Date: 

Wednesday, November 6, 2019