அண்மைக்கால கொள்கைத் தீர்மானங்களை சந்தைக் கடன்வழங்கல் வீதங்களுக்குக் கொண்டு சேர்க்கும் வினைத்திறனை அதிகரித்தல்

சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பொன்றினைத் தூண்டுவதற்கு கடந்த பதினொரு மாதங்களாக இலங்கை மத்திய வங்கி பல எண்ணிக்கையான நாணய மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கொள்கை வழிமுறைகளை எடுத்துள்ளது. மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் இரு கட்டங்களில் 100 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்தல், நிதியியல் சந்தைக்கு ஏறத்தாழ ரூ.150 பில்லியன் கொண்ட மேலதிகத் திரவத்தன்மையை விடுவித்த உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் ரூபா வைப்பு பொறுப்புக்கள் மீது ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2.50 சதவீதப் புள்ளிகளினால் குறைத்தல் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிதியங்களைத் திரட்டும் செலவினைக் குறைப்பதற்கு உரிமம் பெற்ற நிதியியல் நிறுவனங்களை இயலச்செய்த அந்நிறுவனங்களினால் வழங்கப்படும் ரூபா வைப்பு வட்டி வீதங்கள் மீது உச்சங்களை விதித்தல் போன்றவற்றை இவ்வழிமுறைகள் உள்ளடக்குகின்றன.

மத்திய வங்கியானது சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் இவ்வழிமுறைகளை எடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் அவதானிக்கப்பட்ட மேலும் மெதுவடைதலானது குறைவான சந்தைக் கடன்வழங்கல் வீதங்களுக்கான தேவையினை தீவிரப்படுத்தியுள்ளது. அதேவேளை, தனியார் துறைக்கு வழங்கப்படும் கொடுகடன் வளர்ச்சியானது இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து துரிதமாக வீழ்ச்சியடைந்ததுடன் பல்வேறு காரணங்களினால் செயற்படா  முற்பணங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றுக்கு மத்தியில் கொடுகடன் விரிவடைதல் மெதுவடைவதற்கும் உயர்வடைந்து செல்லுகின்ற செயற்படா முற்பணங்கள் உயர்வடைவதற்கும் மிதமிஞ்சிய உயர்வான பெயரளவிலான மற்றும் உண்மைக் கடன்வழங்கல் வீதங்கள்  முக்கிய காரணமொன்றாகக் காணப்படுகிறது என மத்திய வங்கி நோக்குகின்றது. 

உண்மையில், அதன் இணையான பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் உண்மைக் கடன்வழங்கல் வீதங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவாறு காணப்படுவதுடன் கடந்த 10 ஆண்டுகளாக நாடு அனுபவிக்கின்ற தாழ்ந்த பணவீக்க அமைப்புடனோ அல்லது முன்மொழியப்பட்ட நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் எதிர்பார்க்கப்பட்ட 4–6 சதவீத பணவீக்க மட்ட எதிர்பார்க்கைகளுடனோ ஒத்திசைந்ததாகக் காணப்படவில்லை.

அதற்கமைய, நாணயச் சபையானது திருத்தப்பட்டவாறான 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 104(1)(ஆ) பிரிவின் கீழ் சில விலக்களிப்புக்களுக்குட்பட்டு 2019 ஏப்பிறல் 30 அன்றுள்ளவாறான ஏற்புடைய வட்டி வீதங்களுடன் ஒப்பிடுகையில் 2019 ஒத்தோபர் 15ஆம் திகதியளவில் அனைத்து ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீது ஏற்புடைய வட்டி வீதங்களை குறைந்தபட்சம் 200 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்கு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு கட்டளையிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

2019 நவெம்பர் 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் கடனட்டை முற்பணங்கள் விடயத்தில் ஏற்புடைய உயர்ந்தபட்ச வட்டி வீதமானது ஆண்டிற்கு 28 சதவீதமாக இருக்கும் அதேவேளை முன்கூட்டி ஒழுங்கேற்பாடு செய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுக்கள் விடயத்தில் ஏற்புடைய உயர்ந்தபட்ச வட்டி வீதங்கள் ஆண்டிற்கு 24 சதவீதமாக இருக்கும். 2019 ஓத்தோபர் 15ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் கடன்கள் மற்றும் முற்பணங்களுக்குச் சேர்க்கப்படும் தண்ட வட்டி வீதங்கள், அனுமதிக்கப்பட்ட எல்லையின் மிகைத் தொகைக்கு அல்லது நிலுவைகளுக்கு செலுத்த வேண்டிய காலப்பகுதியின் போது ஆண்டிற்கு 400 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட வரையறையினைக் கொண்டிருக்கும். 

2019 ஏப்பிறல் 26இல் உள்ளவாறு மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டவாறான அதன் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 திசெம்பர் 27ஆம் திகதியளவில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதத்தினை 250 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்கு ஒவ்வொரு உரிமம் பெற்ற வர்த்தக வங்கியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. 2019 நவெம்பர் 1ஆம் திகதியளவில் ஒவ்வொரு உரிமம் பெற்ற வர்த்தக வங்கியினதும் சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதமானது 2019 ஏப்பிறல் 26 அன்றுள்ளவாறான அதன் சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதத்தை விடக் குறைந்தபட்சம் 150 அடிப்படைப் புள்ளிகள் குறைவாக இருக்க வேண்டும். 

நிதியியல் முறைமையினூடாக மிகவும் காத்திரமான நாணயக் கொள்கை பரப்புதலினை உறுதி செய்வதற்கு சந்தைக் கடன்வழங்கல் வீதங்களிலுள்ள அசைவுகளை மத்திய வங்கி தொடர்ச்சியாக உன்னிப்பாகக் கண்காணிக்கும். 2020 மாச்சு இறுதியில் இக்கட்டளையினை மீளாய்வு செய்வதற்கும் மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது. 

 

Published Date: 

Tuesday, September 24, 2019