ஊழியர் சேம நிதியம்

ஊழியர் சேம நிதியமானது 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதுடன் தற்போது இலங்கையில் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டமாகவும் விளங்குகின்றது. ரூ.1,665 பில்லியன் மதிப்புடைய நடப்புச் சொத்துத் தளமொன்றுடன் ஊழியர் சேம நிதியமானது தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் தாபனங்கள், அரச அனுசரனையுடனான கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்டசபைகள் மற்றும் தனிப்பட்ட வியாபாரங்கள் போன்றவற்றின் ஊழியர்களுக்காக ஒரு சிறிய 'மன நிம்மதி" ஆக விளங்குகின்றது. ஓய்வு வயதுக் காலகட்டத்தில் ஊழியர்களுக்கு நிதியியல் உறுதிப்பாட்டினை உறுதி செய்தலும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் பங்காற்றியமைக்காக ஊழியர்களுக்கு கைமாறளிப்பதும் ஊழியர் சேம நிதியத்தின் நோக்கமாகும்.

 

ஊழியர் சேம நிதியம் எவ்வாறு நிருவகிக்கப்படுகின்றது?

இலங்கையில் மிகப்பாரிய சமூகப் பாதுகாப்புத் திட்டமாகத் திகழ்கின்றதும் ரூ.1,665 பில்லியனிற்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்டிருப்பதுமான ஊழியர் சேம நிதியமானது உங்களுக்கு பாதுகாப்பானதும் நிலைத்திருக்கத்தக்கதுமான எதிர்காலத்தினை உறுதிப்படுத்துகின்றது. ஊழியர் சேம நிதியத்தினுடைய நிருவாகக் கருமங்கள் இலங்கைத் தொழில் திணைக்களத்தினால் கையாளப்படும் அதேவேளை, நிதி முகாமைத்துவமானது மத்திய வங்கியினுடைய ஊழியர் சேம நிதிய திணைக்களத்தினால் கையாளப்படுகின்றது. 

ஊழியர் சேம நிதியச் சட்டத்தின்படி ஊழியரது மொத்தச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 8 சதவீதத்தினை ஊழியரும், 12 சதவீதத்தினை தொழில்தருநரும் மாதாந்தம் பங்களிப்புச் செய்வதற்கு வேண்டப்படுகின்றார்கள். உங்களுடைய பணிச் சூழலில் நீங்கள் முதிர்வடைகின்றவாறு இலங்கை மத்திய வங்கியினால் பேணப்பட்டு திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள், பங்குரிமை மூலதனம், நிறுவனத் தொகுதிக் கடன்;கள் மற்றும் ரூபாய்ப் பிணையங்கள் போன்றவற்றில் முதலிடப்பட்டிருக்கின்ற தங்களுடைய ஊழியர் சேம நிதிய கணக்கின் திரண்ட நிலுவையானது வளர்ச்சியடைகின்றது. வருமான வீதத்தைப் பொறுத்து, வருடாந்த வட்டி வீதமானது அறிவிக்கப்பட்டு உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆகவே, நீங்கள் முதலிடுகின்ற காலமும் பணமும் ஊழியர் சேம நிதியத்தின் கைகளில் பாதுகாக்கப்பட்டு வருடாந்தம் சிறப்பாக வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு மன நிம்மதியளிக்கின்ற அதேவேளை, வாழ்க்கையினுடைய பிற்காலப் பகுதியில் உங்களுடைய குடும்பத்திற்கும் அன்பானவர்களுக்கும் ஆதரவளிக்க உங்களுக்கு உறுதியினையும் இயலுமையினையும் வழங்குகின்றது.

ஊழியர் சேம நிதியமானது ஓய்வுகால வாழ்க்கையில் வெறுமனே உதவும் கரமாகவோ அல்லது தோள்கொடுக்கின்றதாகவோ மட்டுமல்லாது தற்போதைய நிலுவையில் 3/4 பங்கினை பிணையாக வைப்பதன் மூலம் வீட்டுக் கடனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வழியை உங்களுக்கு அது வழங்கி, அது காலம் முழுவதும் ஒரு சிறந்த பங்காளியாக விளங்குகிறது. இதனால் ஊழியர் சேம நிதியமானது நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் உங்களுடைய கனவு இல்லத்தை நனவாக்குவதற்கு துணையளிக்கின்றது.