போலி நாணயத்தாள்களினை தடுத்தல்

பரிசோதித்தல்  - தடுத்தல் - அறிவித்தல்

உங்கள் நாணயத்தாள்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

நாணயத்தாள் மீது பொதுமக்களின் நம்பிக்கையினைப் பேணுதலானது இலங்கை மத்திய வங்கியின் பிரதான பொறுப்புக்களுள் ஒன்றாகும். அதற்கமைய, போலி நாணயங்கள் அச்சிடுவதை மேலும் கடினமாக்கும் நோக்குடன் அண்மைய ஆண்டுகளில் நாணயத்தாளின் பாதுகாப்பு அம்சங்களை இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களம் அதிகரித்தது. இருப்பினும்கூட, உண்மையான நாணயத்தாள்களுக்கும் போலிகளுக்கும் இடையிலான வேறுபாட்டினை அறிந்துகொள்ளச் செய்வதற்கு சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அலுவலர்கள், காசினைக் கையாளுபவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோரின் அறிவினை அதிகரிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி உண்மையான நாணயத்தாளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துகின்றது.

நாணயத்தாளில் காணப்படுகின்ற பாதுகாப்பு அம்சங்கள் பற்றி பொதுமக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். உங்கள் நாணயத்தாள்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்களாயின், போலி நாணயத்தாள்களை ஒரே பார்வையில் கண்டுபிடிக்கவும் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

சந்தேகத்துக்கிடமான பணத்தை கையாளுதல்

போலி நாணயத்தாளினை மாற்றுதல் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றாவதுடன் தண்டனைச் சட்டக்கோவை 478இன் அ - ஈ பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடியதாகும்.

கொடுக்கல்வாங்கலொன்றின் போது போலி நாணயத்தாளொன்று உமக்கு வழங்கப்பட்டுள்ளது என சந்தேகம் தோன்றுமாயின் நீங்கள் செய்யவேண்டியது யாது:

1.சந்தேகப்படும் தாளினை உண்மையான தாளுடன் ஒப்பிடுதல். 
     -  ஒன்றுக்கு மேற்பட்ட பாதுகாப்பு பண்புகளை அவதானித்தல். 
     -  சந்தேகப்படும் போலித்தாளினை வைத்துக் கொள்ளல்

2. போலித்தாளினைக் கொண்டு வந்த நபரின் விபரங்களை குறித்து வையுங்கள். 
     -  உடல் தோற்றம் பற்றிய
     -  வாகனத்தைப்பற்றிய தகவல்.
     -  அந்த நபர் இறுதியாகக் காணப்பட்ட இடம்.

3. நாணயத் தாளின் விபரங்களை குறித்து வையுங்கள்
     -  நாணய வகை
     -  தொடர் இலக்கம்

4. அண்மையில் உள்ள  பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்க
     -   0112422176 அல்லது 0112326670 என்ற துரித இலக்கத்தினூடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நாணயத்தாள் பணியகத்திற்கு உடனடியாக அறிவிக்கவும்.

போலி நாணயத்தாளின் தாக்கம்

உயர்பெறுமதி கொண்ட நாணயத்தாள்களை போலியாக உருவாக்குவதே மிகவும் முக்கிய இடநேர்வாக விளங்குகின்றது. பணம் தூயதாக்குதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான பொருளாதார செயற்பாடுகளுக்கும் இலகுவான வழியொன்றினை இது வழங்கும். எனினும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இத்தகைய பின்னடைவுகளை காத்திரமான முறையில் கட்டுப்படுத்தத்தக்கதாக இருக்கும்.

உயர்பெறுமதிகொண்ட நாணயத்தாள்களை மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்குவதன் மூலமும் அத்தகைய தாள்களை ஏற்றுக்கொள்கின்ற போது பொதுமக்கள் விழிப்பாக இருப்பதனை அதிகரிப்பதன் மூலமும் போலி நாணயத்தாளின் தொடர்பான  இடர்நேர்வினைக் குறைக்கக்கூடியதாகவிருக்கும். பொருத்தமான வழிமுறைகளூடாக பொதுமக்கள் விழிப்புணர்வு அதிகரித்தலினை இது தேவைப்படுத்துகிறது.

புளக்கத்திலுள்ள போலிநாணயத்தாள்களைக் கண்டு பிடிப்பதற்கும் இல்லாதொழிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களமானது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் போலிநாணயத்தாள் பணியகத்துடன் கூட்டாக ஒருங்கிணைத்து பணியாற்றுகின்றது.