கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 மாச்சில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 பெப்புருவரியின் 3.3 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, 2020 மாச்சில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபரத் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டதாகும். அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 பெப்புருவரியின் 7.9 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 9.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 பெப்புருவரியின் 1.3 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 1.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 பெப்புருவரியின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 4.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2021 மாச்சில் -0.18 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு உணவு வகையின் விடயங்களில் அவதானிக்கப்பட்ட விலை வீழ்ச்சிகளே காரணமாகும்.  மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள் 2021 மாச்சில் முறையே -0.49 சதவீதத்திலும் 0.31 சதவீதத்திலும் பதிவுசெய்யப்பட்டன. அதற்கமைய, உணவு வகையினுள் காய்கறிகள், பச்சை மிளகாய், உடன் மீன், மஞ்சள் தூள் என்பனவற்றின் விலைகள் 2021 மாச்சில் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் மாத காலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தமைக்கு உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளின் துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும்.  

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 பெப்புருவரியின் 2.6 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 3.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 மாச்சில் 3.0 சதவீதத்தில் மாற்றமின்றியிருந்தது. 

முழுவடிவம்

Published Date: 

Wednesday, March 31, 2021