வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 ஏப்பிறல்

2020 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் கொவிட்-19 தொற்றுடன் தொடர்பான பொருளாதார இடையூறுகளினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நாட்டில் பகுதியளவிலான முடக்கம் விதிக்கப்பட்டமையானது 2020 ஏப்பிறலில் இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதிகள் துறையினைக் குறிப்பிடத்தக்களவில் பாதித்த வேளையில், சுற்றுலாத் தொழில் துறையினை முழுமையாகவே இழுத்து மூடியிருக்கிறது. இறக்குமதிகளுடன் தொடர்பான நிரம்பல் சங்கிலிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாகவும் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இன்றியமையாதனவல்லாத இறக்குமதிகளின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினாலும் வணிகப்பொருள் இறக்குமதிகள் மீதான செலவினம் வீழ்ச்சியடைந்தது. சில புலம்பெயர் வேலையாட்கள் முடக்கத்திற்கு முன்னதாகவே நாட்டிற்கு மீண்டும் வந்துவிட்டமையினதும் வெளிநாட்டிலுள்ள சில புலம்பெயர் வேலையாட்களினால் எதிர்நோக்கப்பட்ட சம்பளக் குறைப்பு மற்றும் தொழில் குறைப்பினதும் காரணமாக இம்மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவுசெய்தன. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தையில் தேறிய வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாய்ச்சலொன்று பதிவுசெய்யப்பட்ட வேளையில், கொழும்புப் பங்குச் சந்தை 2020 ஏப்பிறல் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அதிகரித்த நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கான உட்பாய்ச்சல்கள் போதாமல் இருந்தமை என்பனவற்றின் காரணமாக 2020 ஏப்பிறலின் முன்னரைப்பகுதியில் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக, கணிசமானளவிற்கு தேய்வடைந்தது. எனினும், சந்தை மனோபாவங்கள் மேம்பாடுற்றமையின் காரணமாக மாதத்தின் பின்னரைப்பகுதியிலிருந்து ரூபா படிப்படியாக உறுதியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட செலாவணி வீத உயர்வுகள் தேய்வினை ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3 சதவீதத்திற்கும் குறையாமல் மட்டுப்படுத்துவதற்கு உதவியுள்ளன.

முழு வடிவம்

Published Date: 

Monday, June 22, 2020