இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களினால் விடுக்கப்படும் அறிக்கை

இலங்கையின் நிதியியல் முறைமையும் நிதியியல் நிறுவனங்களும் பலவீனமான நிலையில் காணப்படுகின்றன என்றும் அத்தகைய நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்ட தமது வைப்புக்களை பொதுமக்கள் இழக்கும் இடர்நேர்வில் காணப்படுகின்றனர் என்றும் பல்வேறு குழுக்களினாலும் தனிப்பட்டவர்களினாலும் ஆதாரமற்ற ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் பொதுமக்களின் வைப்புக்களை ஏற்கின்ற வங்கித்தொழில் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் இரண்டினதும் ஒழுங்குமுறைப்படுத்துநராக இலங்கை மத்திய வங்கியானது, பொதுமக்களின் வைப்புக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு அனைத்து சாதகமான வழிமுறைகளும் தொடர்ச்சியாக எடுக்கப்படும் என்பதனை பொதுமக்களுக்கு உறுதியாக அறிவிக்க விரும்புகின்றது. நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உறுதிப்பாடு தொடர்பிலான உண்மையான நிலைமைகளைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக நான் இவ்வறிக்கையினை விடுக்க விரும்புகின்றேன்.

கொவிட்-19 உலகளாவிய நோய்தொற்றுபரவலும் அதன் விளைவாக உள்நாட்டிலும் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்திலும் ஏற்பட்ட மெதுவடைவும் நாட்டின் நிதியியல் துறைக்கு மட்டுமின்றி அனைத்து வகையான பொருளாதார நடவடிக்கைகளுக்கும் சவால்விடுக்கின்ற தொழிற்பாட்டுச் சூழலொன்றினை ஏற்படுத்தியுள்ளன. உண்மைப் பொருளாதாரத்தின் செயலாற்றமும் நிதியியல் துறையும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக பின்னிப்பிணைந்துள்ளன. நிதியியல் துறையின் எதிர்கால செயலாற்றமானது உள்நாட்டுத் தொழில்களின் உயிரோட்டத்திலும் வளர்ச்சியுலுமே தங்கியிருக்கின்றது. எனவேதான், அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் நிதியியல் துறையினை, குறிப்பாக வங்கித்தொழில் துறையினை அதன் ஏற்கனவே காணப்படுகின்ற ஐந்தொகை வலிமையின் ஆதரவுடன் பல்வேறு வழிகளிலும் பொருளாதாரத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்குமாறு கோரியுள்ள அதேவேளை, இச்சவால்களை எதிர்கொள்வதற்கு மத்திய வங்கி, நிதியியல் துறைக்குத் தேவையான திரவத்தன்மையினையும் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆதரவினையும் வழங்குகின்றது. நோய்த்தொற்று பரவத்தொடங்குவதற்கு முன்னரும் கூட, 2018 மற்றும் 2019 ஆண்டுகளை பின்னோக்கிப் பார்க்கையில் வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் இரண்டிலும் குறிப்பாக, தனியார் துறை கொடுகடன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையில் மந்தமான வளர்ச்சியின் காரணமாக செயலாற்றமற்ற கடன்களில் அதிகரிப்பொன்று காணப்பட்டது. உலகளாவிய நோய்த்தொற்று தாக்க காலத்தில், பொருளாதாரத்திற்கு புத்துயரளிப்பதற்கு அரசாங்கமும் மத்திய வங்கியும் உண்மைப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்ற மிகவும் காத்திரமான வரி முறைமையினை நிறுவுதல் மற்றும் மிகவும் சாதகமான நாணயக் கொள்கை நிலை உள்ளடங்கலான தீர்க்கமான வழிமுறைகளை எடுத்திருந்தன. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவல் மூலம் தோற்றுவிக்கப்பட்ட தற்காலிகப் பின்னடைவுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரமும் நிதியியல் துறையும் தொடர்ந்தும் சக்திவாய்ந்ததாகவும் தாக்குப்பிடிக்கத்தக்கதாகவும் காணப்படுகின்றது என நாம் நம்புகின்றோம். எதிர்வரவிருக்கும் காலத்தில் பொருளாதாரம் மீட்சியடைதலுக்கேற்ப நிலைமைகள் வலுவடையும்.

வங்கித்தொழில் துறையானது 16 சதவீதத்திற்கும் மேற்பட்ட மொத்த மூலதனப் போதுமை விகிதாசாரம், 130 சதவீதத்திற்கும் மேற்பட்ட தேறிய நிலையான நிதியளித்தல் விகிதாசாரம், 175 சதவீதத்திற்கும் மேற்பட்ட திரவத்தன்மை உள்ளடக்க வீதம் மற்றும் 32 சதவீதத்திற்கும் மேற்பட்ட நியதி திரவத்தன்மை சொத்து விகிதாசாரம் என்பவற்றுடன் வலிமையானதாகக் காணப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப்பகுதியின் போது செயலாற்றமற்ற கடன்கள் விகிதாசரம் சிறிதளவான வீழ்ச்சியை காண்பித்திருந்ததுடன் அதேவேளை ஏற்பாட்டு உள்ளடக்க வீதமும் படிப்படியாக அதிகரித்திருந்தது. புதிய வரி முறைமையிலிருந்து நன்மையடைந்து, 2020 இன் முதல் காலாண்டிற்கான வங்கித்தொழில் துறையின் வரிக்குப் பிந்திய இலாபமானது கடந்த ஆண்டின் அதே காலாண்டினைவிட கணிசமமாக உயர்வாகவிருந்தது. இச்செயலாற்றுகை குறிகாட்டிகளைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் நிதியியல் துறையில் 62 சதத்திற்கு வகைகூறுகின்ற இலங்கையின் வங்கித்தொழில் முறைமையின் தற்போதைய உறுதிப்பாடானது தாக்கத்திற்குள்ளாகாத மட்டத்தில் காணப்படுகின்றது என்பதற்கான மேலதிக உத்தரவாதம் எவருக்கேனும் தேவைப்படுமென நான் எண்ணவில்லை.

நாம் தற்போது வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பற்றி குறிப்பாக, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் துறையினைப் பற்றி நோக்குவோம். நாட்டின் நிதியியல் துறையில் இவ்வகையான நிறுவனங்கள் பொருளாதாரத்தில் ஒப்பீட்டளவில் தாழ்ந்த வருமானமுடைய வகையினரின் பல்வேறுவிதமான தரமுடைய கொடுகடன் தேவைப்பாடுகளை வழங்குவதில் முக்கியமான பங்கினை வகித்துவருகின்றன. பேரண்டப் பொருளாதாரத்தினை நிலைநிறுத்துவதற்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட வழிமுறைகள், குறிப்பாக ஊர்திகள் இறக்குமதியினைக் கட்டுப்படுத்தியமை நிதிக் கம்பனிகளின் மீது சமமற்றவிதமான பாதகமான தாக்கமொன்றினைக் கொண்டிருந்தது. மத்திய வங்கியானது அதன் நிதியியல் துறை உறுதிப்பாடு குறிக்கோளின் பாகமாக, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கென தேவையான திரவத்தன்மை ஆதரவினைக் கிடைக்கச்செய்திருந்த அதேவேளை தேவைப்படுமாயின் துறைக்குத் ஏதேனும் அவசரநிலை ஆதரவினை வழங்குவதற்கும் தயாராகக் காணப்படுகின்றது.
 
த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் உரிமம் மத்திய வங்கியினால் இரத்துச் செய்யப்பட்டதிலிருந்தே நான் எடுத்துக்காட்டிய ஊகங்கள் இடம்பெறத் தொடங்கின. எவ்வாறாயினும், த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் உரிமத்தினை இரத்துச்செய்தமையும் கடந்த அண்மைய காலங்களில் வேறு சில நிதிக் கம்பனிகளுக்கெதிரான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கையும் வைப்பாளர்களைப் பாதுகாப்பதற்கும் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்குமே மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதனை நான் வலியுறுத்த வேண்டும். உரிமத்தை இரத்துச்செய்தமை த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் 135,100 எண்ணிக்கையிலான 93 சதவீதமானோருக்கு வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஊடாக முழுமையாக ஈடளிப்பதற்கு எம்மை இயலச்செய்துள்ளது. கம்பனியின் எஞ்சியுள்ள 10,072 வைப்பாளர்களும்  வைப்பு வைத்திருப்பவர் ஒருவருக்கு ரூ.600,000 வரையான நட்டஈட்டினைப் ஆரம்பத்தில் பெற்றுக்கொள்வர். முன்னர் இதே போன்று உரிமங்கள் இரத்துச்செய்யப்பட்ட சென்றல் இன்வெஸ்மன்ட் அன்ட பினான்ஸ் பிஎல்சி மற்றும் த ஸ்டான்டட் கிரடிற் பினான்ஸ் லிமிடெட் தொடர்பில் இக்கம்பனிகள் ஒவ்வொன்றினதும் 95 சதவீதமான வைப்பாளர்கள் தற்போது முழுமையாக ஈடளிக்கப்பட்டுள்ளனர். ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் காரணமாக தாமதமடைந்து 26 சதவீதம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது ஆயினும், நட்டஈட்டுச் செயன்முறையினை மத்திய வங்கி மீளத்தொடங்கியுள்ளதுடன் இக்கம்பனியின் அநேகமாக அனைத்து வைப்பாளர்களையும் உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கின்றது. வைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான த பினான்ஸ் கம்பனி தொடர்பில் மத்திய வங்கியின் நடவடிக்கையானது பல்வேறு நீண்டகால, மரபுவழிச் சிக்கல்கள் மூலம் அவசியமாக்கப்பட்டிருந்தது என்பதனை பொதுமக்கள் புரிந்துகொள்வர் என நான் நம்புகின்றேன். ஒரு சில நிறுவனங்கள் மீதாக எடுக்கப்பட்ட சீர்படுத்தும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கையானது ஒட்டுமொத்த வங்கியல்லா நிதி நிறுவனத் துறையும் சிக்கலில் உள்ளது என்பதாக அர்த்தப்படாது. சில உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் சிறிய அல்லது நடுத்தர அளவிலான வங்கித்தொழில் நிறுவனங்களுக்கு ஒப்பானதாகக் காணப்படுகின்றன என்பதனை நாம் அவதானிக்க வேண்டும். எனவே எமது ஒட்டுமொத்த வங்கியல்லா நிதி நிறுவனங்கள் துறையின் ஆரோக்கியம் பற்றி சந்தேகத்தினை வெளிப்படுத்துகின்ற அடிப்படையற்ற கருத்துக்கள் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்ட ஊகங்கள் மூலம் பொதுமக்கள் குழப்பமடையவோ தவறாக வழிநடத்தப்படவோ வேண்டாம் என்பதனை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
 
இவற்றை எடுத்துக்காட்டி, கடந்தகாலங்களில் மத்திய வங்கி வலியுறுத்திய வங்கித்தொழில் மற்றும் நிதித் தொழில்களில் முக்கிய பொது எச்சரிக்கையொன்றினை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். பல்வேறு நிதி நிறுவனங்கள் மத்திய வங்கியினால் உரிமமளிக்கப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு, மேற்பார்வை செய்யப்படுகின்ற போதிலும் நாளாந்த அடிப்படையில் அவர்களுடைய அனைத்து தொழிற்பாடுகளும் மத்திய வங்கியினால் முகாமை செய்யப்படுகின்றது என்பது இதன் மூலம் அர்த்தப்படாது. உயர்வான ஆதாயங்களை ஈட்டுகின்ற தொழில்களிலுள்ள அவர்களது முதலீடுகளிலிருந்து வைப்பாளர்கள் நன்மையடைவதற்காக வேறுபட்ட வட்டி ஈடளிப்பு மட்டங்களை அவை வழங்குவதனை இயலச்செய்கின்ற இந்நிறுவனங்களின் தொழில் மாதிரிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவையாகும்.  எனவே, வைப்புகள் மீது உயர்வான வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றது என்பது தொடர்புடைய நிறுவனங்கள் அதிகளவு இடர்நேர்வுமிக்க கூட்டுமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என்பதே பொதுவான அர்த்தம் என்ற உண்மையினை பொதுமக்கள் அவதானத்திற்கொள்ள வேண்டும்.
 
வங்கியல்லா நிதியியல் துறையினை பொறுத்தவரையில், ஒருங்கிணைப்பின் அவசியமே இலங்கை மத்திய வங்கியின் செய்தியாகும். சிறியளவிலானோர் வலிமையானோருடன் ஒருங்கிணைப்பினை கருத்திற்கொள்ளல் வேண்டும். இலங்கை அதன் பொருளாதாரத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையான நிதி நிறுவனங்களைக் கொண்டுள்ளது என்பதை நாம் காலத்திற்கு காலம் எடுத்துக் காட்டியுள்ளோம். அதே சந்தர்ப்பத்தில் குறிப்பாக இறக்குமதிகளுக்கும் வேறு அவர்களுக்கு பழக்கமான வியாபார நடவடிக்கைகளுக்கும் நிதியளிப்பதனூடாக வெறுமனே குறுகியகால இலாபங்கள் மூலம் தூண்டப்படுவதனைவிட உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் விதத்தில் தமது தொழில் மாதிரிகளை பன்முகப்படுத்துமாறு நாம் நிதியியல் நிறுவனங்களை வலியுறுத்துகின்றோம். மேலே ஆலோசிக்கப்பட்டவாறு வங்கியல்லா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கித் தொழில் நிறுவனங்கள் நடந்துகொள்ள செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியானது அதன் அதிகாரங்களையும் சக்தியினையும் எதிர்காலத்தில் பயன்படுத்தும்.
 
நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை பேணுவதற்குத் தேவையான கிடைக்கப்பெறுகின்ற அனைத்து கருவிகளையும் மத்திய வங்கி பயன்படுத்தும் என்பதனை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் நான் நிறைவுசெய்கிறேன். கொவிட்-19 அல்லது எதிர்காலத்தில் தோன்றக்கூடிய ஏதேனும் வேறு எதிர்பாராத நிகழ்வின் பொருளாதாரம் மற்றும் நிதியியல் வீழ்ச்சியிலிருந்து பொதுமக்களின் வைப்புக்களைப் பாதுகாப்பாகப் பேணுவதில் மத்திய வங்கி அர்ப்பணிப்புடன் காணப்படும். வங்கித்தொழில் மற்றும் வங்கியல்லா நிதியியல் துறையில் நியாயமற்ற இடையூறுகளை ஏற்படுத்துகின்ற நோக்குடன் பொய்யான அல்லது தவறாக வழிநடத்துகின்ற தகவல்களைப் பரப்புகின்ற எவரேனும் குழுக்கள் அல்லது தனிப்பட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய வங்கி தயங்காது என்பதும் அவதானத்திற் கொள்ளப்படவேண்டும்.

.

Published Date: 

Sunday, June 7, 2020