இலங்கை அதன் அனைத்து நிதியியல் கடப்பாடுகளையும் நிறைவேற்றுகின்ற அதன் கடமைப்பொறுப்பினை மீண்டும் வலியுறுத்துகின்றது

இலங்கை அரசாங்கமானது அதன் படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான அதன் இயலுமைபற்றி கேள்வியெழுப்புகின்ற அண்மைய ஊடக அறிக்கைகளில் காணப்படும் அனுமானங்கள் பற்றி அவதானம் செலுத்துகின்றது. நாட்டிற்கான படுகடன் நெருக்கடி இடர்நேர்வுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலைமையில் உள்ள நாடுகளாகக் கூறப்படுகின்ற பிற நாடுகளுடன் இலங்கையினை ஒப்பிடுவதன் மூலம் அதனையொத்த நிலைமைக்கு இலங்கையும் உள்ளாகின்றது என்பதனை எடுத்துக்காட்டுவதற்கு சில ஊடகங்களினால் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய அனுமானங்களை அரசாங்கம் புறந்தள்ளுகின்றது. அரசாங்கமானது அத்தகைய அடிப்படையற்ற கோரிக்கைகளை திட்டவட்டமாக மறுக்கும் அதேவேளை, எதிர்வரும் காலங்களில் இலங்கை அனைத்து அதன் படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளையும் உரியவாறு நிறைவேற்றும் என்பதனை அனைத்து ஆர்வலர்களுக்கும் மீளவும் வலியுறுத்த விரும்புகின்றது.
 
கொவிட் - 19 உலகளாவிய தொற்றுநோய்ப்பரவல் காலப்பகுதியின் போது இலங்கை அரசாங்கத்தின் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் விளைவு மட்டங்களில் காணப்படுகின்ற அண்மைய தளம்பல்கள், பெரும்பாலான வளர்ந்துவருகின்ற அத்துடன் முன்னணிச் சந்தைப் பொருளாதாரங்கள் முழுவதும் அவதானிக்கப்பட்டுவருகின்ற வேறுபாட்டிற்கு புறம்பானவையல்ல. அத்தகைய தளம்பலுக்கு மத்தியிலும் உலகளாவிய நிறுவனசார் முதலீட்டாளர்கள், நிதி முகாமையாளர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் போன்றோர் இலங்கையின் கொடுகடன் தரம்பற்றிய நம்பிக்கையினை தொடர்ந்தும் பேணிய அதேவேளை முதலீட்டிற்காக இலங்கை படுகடன் சாதனங்களை பரிந்துரைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
பொதுத் தேர்தலை நடாத்துவதிலும் அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தினை சமர்ப்பிப்பதிலும் காணப்படுகின்ற எதிர்பாராத தாமதம் ஏதேனும் கொள்கைசார்ந்த நிச்சயமின்மைக்கு அல்லது நடைமுறைசார்ந்த முரண்பாட்டிற்கு வழிவகுப்பதாக கருத்திற்கொள்ளப்படக்கூடாது ஆயினும், அது கொவிட் - 19 உலகளாவிய தொற்றுநோயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சுகாதாரக் கொள்கை பதிலிறுத்தல்களின் விளைவேயாகும். நாட்டின் அரசியல்யாப்பின் பிரகாரம் தேர்தல்களைத் தொடர்ந்து பாராளுமன்றத்தினைக் கூட்டியதன் பின்னர் மூன்று மாதங்கள் வரை வருடாந்த வரவுசெலவுத் திட்டம் இன்றி அரசாங்க தொழிற்பாடுகளுக்கு அதிகாரமளிப்பதற்கு அதிமேதகு சனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஏதேனும் தடங்கலின்றி அரசாங்க தொழிற்பாடுகள் இயங்குவதுடன் பொதுத் தேர்தல்களை நடத்தும் திகதிக்கு அண்மிக்கின்ற ஏதேனும் நிச்சயமின்மையானது எதிர்வரவிருக்கும் நாட்களில் இவை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பின் பின்னர் தீர்வுகாணப்படும். 
 
 
இச் சந்தர்ப்பத்தில், அரசாங்கமானது செலவினத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ள அதேவேளை, அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தை முன்வைப்பதில் காணப்படுகின்ற தாமதமானது இவ்வாண்டிற்கான மேலதிக செலவினத்திற்கு இடமளிப்பதனை  தன்னிச்சையாக  மட்டுப்படுத்துகின்றது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரு மூலங்களிலுமிருந்தும் அரசாங்கத்தின் நிதியளித்தல் செலவு 2020 காலப்பகுதியின் இதுவரையிலும் தெட்டத்தெளிவாக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கமானது நிதியளித்தல் பற்றிய நியதிகளையும் நிபந்தனைகளையும் செயல்திறன்மிக்கவாறு மேம்படுத்துவதற்கு சந்தை அடிப்படையிலமைந்த பல்துறை மூலங்களிலிருந்தும் அலுவல்சார் நிதியளித்தல் மூலங்களிலிருந்தும் நிதியங்களைத் திரட்டுவதில் முனைப்பான வழிமுறைகளை எடுத்துள்ளது. உலகம் முழுவதும் தளம்பல்மிக்க சந்தை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும்  பன்னாட்டு முறியொன்றின் வழங்கல் அண்மைய காலத்தில் எதிர்பார்க்கப்படவில்லை இதனால் பன்னாட்டு முறிச் சந்தையில் அவதானிக்கப்பட்ட தற்போதைய விளைவுகள் பற்றி கருத்துதெரிவிப்பது இயைபற்றதாகும். நிதியளித்தல் பற்றி கவனம் செலுத்தலானது படுகடன் முகாமைத்துவத்தின் இடர்நேர்வு மற்றும் செலவு கரிசனைகள் இரண்டினதும் நலனுக்காக இருபுடை மற்றும் பல்புடை மூலங்களை மேலும் கண்டறிவதாகவே அமைந்திருக்கும். மேலும், பிராந்திய மத்திய வங்கிகளுடனான பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்த வசதிகளை கண்டறிகின்ற செயன்முறையினை நாடு முன்னெடுக்கின்ற அதேவேளை, இனங்காணப்பட்ட வெளிநாட்டு மூலங்களுடனான கூட்டுநிதியளித்தலுக்கான ஒழுங்கேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
அதேவேளை, கொவிட் - 19 நோய்ப்பரவலிலிருந்து இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட விரைவாக மீட்சியடைதலும் எதிர்வரும் காலங்களில் இறைத்தொழிற்பாடுகளைத் திரட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு துணைநிற்கும். நடவடிக்கைகளுக்கான ஆகக் குறைந்த இடையூறுகளுடன் குறுகிய காலப்பகுதியில் உலகளாவிய தொற்றுநோய்ப் பரவலை வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இலங்கை  இயலுமாக இருந்தது. இலங்கை எட்டு வாரங்களுக்கு மாத்திரமே அதாவது மாச்சு இரண்டாம் அரைப்பகுதிஇ ஏப்பிறல் மற்றும் மே முதலாமரைப்பகுதி காலத்தின் போது மாத்திரம் பகுதியளவிலான முடக்கலை எதிர்கொண்டது. இக்காலப்பகுதியின் போது பல அலுவலகங்கள், நிதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விநியோகப் பணிகள், வேளாண்மைப் பணிகள், அரசாங்கப் பணிகள் போன்றன தொழிற்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிறல் மாதமானது பண்டிகைப் பருவகாலமொன்றாகும். இக்காலப்பகுதியில் பொருளாதார நடவடிக்கை ஏதோ ஒருவிதத்தில் மந்தமடையும். அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் அறிவிக்கப்பட்ட ஊக்குவித்தல் வழிமுறைகளானவை நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் விரைவாக புத்துயிர்பெறுவதற்கு உதவுமெனவும் தனிப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, இலங்கையின் பொருளாதாரமானது 2020இல் ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் ஏற்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியில் ஏறத்தாழ 1.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியினை பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
இலங்கையின் ஏற்றுமதிகள் மற்றும் சுற்றுலாத் துறைகள் முன்கூட்டிய மீட்சியொன்றினை நோக்கிச் செல்லுவதற்கு தயார்நிலையில் காணப்படுகின்றன இது நடவடிக்கை விரைவான புத்துயிர்பெறுவதற்கு துணையளிக்கின்ற அதேவேளை வெளிநாட்டுத் துறை மீதான ஏதேனும் அழுத்தத்தினை தளர்த்தக்கூடியதாகும். பிந்திய சந்தைத் தகவல்கள் குறிப்பிடுவதற்கிணங்க இலங்கை தொழிற்சாலைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்புபட்ட உபகரணங்களைத் தயாரிப்பதற்கு புதிய மேலதிகக் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டுள்ளன. இலங்கையின் தேயிலை போன்ற மரபுசார்ந்த ஏற்றுமதி வணிகப் பொருட்கள் முக்கிய இறக்குமதியாளர்களின் சிறந்த கேள்வியின் காரணமாக ஏலங்களில் உயர்வான விலைகளை ஈர்த்துள்ளன. விடுதிகள், மேலதிக சுகாதார தயார்படுத்தல்களுடன் சுற்றுலாப் பயணிகளை முன்கூட்டியே மீளவரவேற்பதற்கு  தயார்நிலையில் காணப்படுகின்றன. மேலும், குறைவான எரிபொருள் இறக்குமதிச் செலவினமும் அத்தியாவசியமற்ற வணிகப் பொருள் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாடுகளும் வர்த்தக நிலுவை மீதான ஏதேனும் பாதகமான தாக்கத்திலிருந்து காப்பளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, கொவிட் - 19 தொற்றுநோயின் காரணமாக சுற்றுலா, போக்குவரத்துத் துறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான குறுகியகால பாதகமான தாக்கத்திற்கு மத்தியிலும் குறுக்கமடைகின்ற வர்த்தகப் பற்றாக்குறையானது 2020இன் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையினை பாதிப்பிலிருந்து பாதுகாக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அடிப்படையற்ற அனுமானங்கள் மற்றும் ஒப்பீடுகளுக்கு முரணாக நாடுமுழுவதும் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கும் வியாபாரத்திற்காக படிப்படியாக திறக்கப்படுவதற்கும் இலங்கை ஏற்கனவே வழிமுறைகளைத் தொடங்கியுள்ளது. இப்பின்னணியில் இலங்கை அரசாங்கமானது சில பன்னாட்டு தரப்படுத்தல் முகவராண்மைகளின் இடர்நேர்வுகள் பற்றிய அண்மைய மதிப்பீடுகளையும் தரப்படுத்தல் தீர்மானங்களையும் திட்டவட்டமாக மறுதளிக்கின்றது.
 
நிறைவாகஇ கடந்தகாலத்தில் இடர் நேரங்களிலும் கூட இலங்கை அதன் அனைத்து கடப்பாடுகளையும் உரிய காலத்தில் நிறைவேற்றுகின்ற அதன் கடமைப்பொறுப்பினை எடுத்துக்காட்டியுள்ளது என்பதுடன் அனைத்து முதலீட்டு மற்றும் அபிவிருத்திப் பங்காளர்களுடன்  ஈடுபடுகின்ற அதேவேளை, எதிர்காலத்திலும் தொடர்ந்தும் அவ்வாறு கடமைப்பொறுப்புகளை நிறைவேற்றும் என்பதை அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

Published Date: 

Tuesday, May 19, 2020