புதிய துணை ஆளுநரின் நியமனம்

நாணயச் சபையானது மாண்புமிகு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரின் உடன்பாட்டுடன் உதவி ஆளுநராக திரு. கே. எம். மகிந்த சிறிவர்த்தன அவர்களை 2020 பெப்புருவரி 12ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக நியமித்திருக்கிறது. 

திரு சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியில் 28 ஆண்டுகளுக்கும் கூடுதலாகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் துணை ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் திரு. சிறிவர்த்தன பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் என்பனவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநர் பதவியை வகித்திருக்கிறார். இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2017 யூலையிலிருந்து 2019 ஒத்தோபர் வரையான காலப்பகுதியில் திரு. சிறிவர்த்தன இந்தியா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பன்னாட்டு நாணய நிதியத்திற்கு விடுவிக்கப்பட்டிருந்தார். 2010 ஒத்தோபரிலிருந்து 2015 ஏப்பிறல் வரையான காலப்பகுதியில் இறைக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் அத்துடன் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றுவதற்காக நிதித் திட்டமிடல் அமைச்சிற்கு அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

திரு. சிறிவர்த்தன இலங்கை வங்கி,  இலங்கை வர்த்தக வங்கி பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை ஏற்றுமதி கொடுகடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை தொழில்பயிற்சி அதிகார சபை என்பன உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும்ஃ திறைசேரியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இவர் பொருளாதாரத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பொருளாதார அபிவிருத்தியில் பட்டப்பிற்படிப்பிற்கான டிப்ளோமாவினையும் ஐக்கிய அமெரிக்காவின் வன்டர்பில்ட் பல்கலைக்கழகத்திலிருந்தும் (Vanderbilt University) பொருளாதாரத்தினை சிறப்புப் பாடமாகக்கொண்ட இளமானிப் பட்டத்தினை (சிறப்பு) இலங்கை, களனி பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார். இவர் பல கட்டுரைகளை தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் ஆராய்ச்சிக் கற்கைகளிலும் இலங்கை மத்திய வங்கியின் உயர் அலுவலர் ஆய்வுகளிலும் வெளியிட்டிருக்கிறார்.

 

முழுவடிவம்

Published Date: 

Thursday, February 20, 2020