பல்வேறுபட்ட நிதியியல் சாதனங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதிகளைத் திரட்டுதல்

குறிப்பிட்ட தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் பல்வேறுபட்ட சாதனங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதிகளைத் திரட்டி வருவது பற்றி அவதானிக்கப்பட்டிருக்கிறது. வாக்குறுதிச் சான்றிதழ்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் தொகுதிக்கடன்கள் என்பன அவற்றுள் சிலவாகும். குறிப்பிட்ட வகையான நிறுவனங்கள் அவற்றின் நிதியியல் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மேலே குறிப்பிடப்பட்ட சாதனங்களை வழங்குவதன் மூலம் நிதிகளைத் திரட்டி வருவதனைக் குறிப்பிடுதல் வேண்டும். இச்சாதனங்கள் வருவாயை ஈட்டும் நியதிகளில் கவர்ச்சிகரமானவையாக இருக்கின்ற போதிலும், தனிப்பட்டவர்கள் அவர்களின் நோக்கங்களுக்காக அத்தகைய நிதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மைகள் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

சில நிறுவனங்கள், அத்தகைய சாதனங்களின் உண்மையான தன்மை தொடர்பில் போதுமான தகவல்களை வழங்காமலும் அத்தகைய நடவடிக்கைகளுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாமலும் பொதுமக்களிடமிருந்து நிதிகளைத் திரட்டி வருவதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கின்றது. இத்தகைய பின்னணியில், இலங்கை மத்திய வங்கி பல்வேறுபட்ட நிதியியல் சாதனங்களின் சட்டரீதியான அந்தஸ்து, அத்தகைய சாதனங்களை வழங்குவதற்கான நியம நடைமுறைகள் மற்றும் அத்தகைய சாதனங்களில் முதலீடு செய்வதுடன் தொடர்பான இடர்நேர்வுகள் பற்றியெல்லாம் பொதுமக்கள் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென அறிவித்துக் கொள்ள விரும்புகிறது. 

மேலும், வாக்குறுதிச் சான்றிதழ்கள், வர்த்தகப் பத்திரங்கள், தொகுதிக்கடன்கள் என்பனவற்றில் முதலீடு செய்வது தொடர்பான வழங்கல் நடைமுறைகள், பணத்தினை முதலீடு செய்வதுடன் தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகள், எடுப்பனவுடன் தொடர்பான நடைமுறைகள் மற்றும் ஏனைய பண்புகள் என்பன வங்கிகளிலும் நிதிக் கம்பனிகளிலும் பணத்தினை வைப்புச் செய்வதிலிருந்தும் வேறுபட்டிருக்கின்றன என்பது பற்றி இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்புகிறது. இதன்படி, அத்தகைய சாதனங்களில் செய்யப்படும் முதலீடுகள் வழமையான சூழ்நிலைகளின் கீழ் செய்யப்படுகின்ற வைப்பு வசதிகளின் கீழ் கருத்திற்கொள்ளமாட்டாது. உரிமம்பெற்ற வங்கிகளிலும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளிலும் செய்யப்படுகின்ற வைப்புக்கள் இலங்கை மத்திய வங்கியினால் தொழிற்படுத்தப்படுகின்ற வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவளிப்புத்திட்டத்தின் பாதுகாப்பிற்குட்பட்டனவாகும். வாக்குறுதிச் சான்றிதழ்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் தொகுதிக்கடன்கள் என்பனவற்றில் செய்யப்படுகின்ற முதலீடுகள் வைப்புக்காப்புறுதித் திட்டத்திற்கு தகைமையுடையானவையல்ல. ஆகவே, அத்தகைய சாதனங்களை வழங்குபவர்கள் அவற்றை மீளச்செலுத்தத் தவறும் ஏதேனும் சந்தர்ப்பங்களில் வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு எவ்வித பாதுகாப்புமிருக்காது.

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற வங்கி அல்லது நிதிக் கம்பனி முறிவடைகின்ற சந்தர்ப்பத்தில், வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் தற்போதைய ஒழுங்குவிதிகளின் கீழ் வைப்பாளர் ஒருவர் உயர்ந்தபட்சம் ரூ.600,000/- வரையிலான பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கும் என்பதனை இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறியத்தர விரும்புகிறது.

மேற்குறிப்பிட்டவற்றைக் கருத்திற்கொண்டு, பல்வேறுபட்ட நிறுவனங்களினால் முன்வைக்கப்படுகின்ற சாதனங்களில் பொதுமக்கள் அவர்களது கடின உழைப்பின் மூலம் பெற்ற சேமிப்புக்களை முதலீடு செய்யும்பொழுது மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் அவற்றினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

அத்தகைய சாதனங்களில் எவரேனும் முதலிட விரும்புமிடத்து, அவர் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள், உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், வருவாய்க்கு ஏற்புடையதான நியதிகள் மற்றும் நிபந்தனைகள், முதிர்ச்சிக்கு முன்னரான மீட்புக்கள் மற்றும் முதிர்ச்சிக்கான காலம் தொடர்பான விடயங்களை கவனமாக படிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Published Date: 

Friday, December 6, 2019